தமிழீழத்தின்முதல் குரலாக என் குரல் ஒலிக்க வேண்டும்! -வைகோ

செப்டம்பர் 20, 2017

ஈழ தேசத்தின் சிறப்பு குடிமகனாக தன்னை அங்கீகரிக்கும்படி பிரபாகரனிடம் கேட்டதாகவும், தமிழ் ஈழத்தின் முதல் குரலாக என் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் ஜெனீவாவில் நடந்த பேரணியில் வைகோ பேசினார்.

ஜெனீவா நகரில் நடந்த பேரணியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசிய தாவது:-

நான் மோடியை ஆதரித்தேன். அவர் வெற்றிபெற்றால், ஈழப்பிரச்சினையில் வாஜ்பாய் அணுகுமுறையைப் பின்பற்றுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவரது பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு என்றபோது, உடனே நரேந்திர மோடியை சந்தித்தேன்.

எங்கள் இருதயத்தில் ஈட்டியைக் குத்திவிட்டீர்கள் என்றேன். நாளை மாலை சூரியன் மறைவதற்குள் ராஜபக்சேவுக்கு கொடுத்த அழைப்பைத் திரும்பப் பெறாவிட்டால் நீங்கள் பதவி ஏற்கும்போது நான் கருப்புக்கொடி காட்டுவேன் என்று சொன்னேன்.

அதேபோல மோடி பதவி ஏற்றபோது நாங்கள் கருப்புக்கொடி காண்பித்துச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தோம். ஒரே நொடியில் மோடியைத் தூக்கி எறிந்து விட்டு வந்தேன்.

ஐரோப்பாவில் வாழ்கின்ற இளந்தமிழ்ப் பிள்ளைகளே, எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது.  உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் உணர்வை ஊட்டுங்கள். தமிழ் கல்வியைத் தாருங்கள். நான் கவலையோடு இருக்கின்றேன். வளரும் பிள்ளைகளிடம் உணர்வு இருந்தால்தான், அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகளுக்குள் நாம் தமிழ் ஈழத்தை அடைய முடியும்.

நான் இலங்கை அரசியலை விமர்சிக்க விரும்பவில்லை. விக்னேஸ்வரன் நியாயமாகத்தான் நடந்துகொண்டு வந்தார். அங்கே பல நெருக்கடிகள் இருக்கின்றன. அங்கே உள்ள அரசியல்வாதிகளைக் குறை சொல்ல விரும்பவில்லை. அது தியாகத்தால் சிவந்த மண். தலைவர் பிரபாகரனின் மண். அவர் வாழ்கிறார், நம்மை இயக்குகிறார். என்றைக்கும் நம்மை இயக்குவார். அவருக்கு நிகரான தலைவன் உலகத்தில் வேறு எவரும் இல்லை. இனி பிறக்கப் போவதும் இல்லை.

ஆகவே, புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களே, உங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இந்த ஒரு பிரச்சினையில் அனைவரும் ஒன்றாகச் சேருங்கள்.

தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய வேண்டும். ஐ.நா. மன்றத்தில் தமிழனின் கொடி பறக்க வேண்டும். அது தமிழ் ஈழத்தின் கொடியாகப் பறக்க வேண்டும். இதோ ஜெனீவா முற்றத்தில் கொடிகள் பறந்துகொண்டு இருக்கின்றனவே, அவற்றோடு சேர்ந்து பறக்கவேண்டும். பறக்கின்ற நாள் வரும். நமது லட்சியங்களில் நியாயம் இருக்கின்ற போது, அதை யாராலும் தடுக்க முடியாது.

நான் பதினாறு ஆண்டுகளுக்குப்பிறகு இங்கே வந்து இருக்கின்றேன். இன்றைக்கு உங்கள் முன்னால் பேசுவேன் என்று நினைக்கவில்லை. மீண்டும் வருவேன். இனி எனக்குத் தடை இருக்காது என்று கருதுகிறேன். அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் இல்லை. நான் இங்கே வந்து பேசுவதற்கு முன்பு மடிந்த மாவீரர்களை நினைத்துக் கொண்டேன். அவர்களோடு காட்டுக்குள் கரம் கோர்த்து இருந்த நாட்களை எண்ணிக்கொண்டேன். எனக்குப் பேசும் சக்தியைக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

காட்டுக்குள் தலைவர் பிரபாகரனிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். தம்பி, சுதந்திரத் தமிழ் ஈழம் மலரப் போகின்றது. எனக்கு ஒரு ஆசை இருக்கின்றது செய்வீர்களா? என்று கேட்டேன்.

என்ன அண்ணா, சொல்லுங்கள் என்றார். தமிழ் ஈழ தேசத்தின் சிறப்புக் குடிமகனாக என்னை அங்கீகரித்து, ஐ.நா. பொதுச்சபையில், சுதந்திரத் தமிழ் ஈழத்தின் முதல் பிரதிநிதியாக என்னைப் பங்கேற்கச் செய்வீர்களா? பேச வாய்ப்புத் தருவீர்களா? என்று கேட்டேன்.

என்னண்ணா, நீங்கள் வேறு ஏதோ பெரிதாகக் கேட்கப் போகின்றீர்களே என்று நினைத்தேன். இதைக்கூட நாங்கள் செய்ய மாட்டோமா? என்று சொன்னார். அவ்வளவு ஆசைக்கனவுகளை என் மனதிற்குள் வளர்த்துக் கொண்டு இருப்பவன் நான்.

தமிழ் ஈழத்தின் முதல் குரலாக என் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தமிழ் ஈழம் மலரும். உலகத்தில் நமக்கு நிகரான இனம் வேறு எதுவும் இல்லை. விரைவில் சுதந்திரத் தமிழ் ஈழத்தின் கொடி ஐ.நா. மன்றத்தில் பறக்கும். இதோ இந்த மனித உரிமைகள் கவுன்சில் முன்பும் பறக்கும். இவ்வாறு வைகோ பேசினார். 

செய்திகள்
புதன் February 21, 2018

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு