தமிழீழ மண்ணை நேசித்த அன்னை மாரியம்மாள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்.

சனி நவம்பர் 07, 2015

தமிழின விடுதலைக்காகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் தன்னலமற்ற உயர்ந்த பங்களிப்பை வழங்கியதோடு, சமூக விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்த உயரிய விடுதலைத்தாய் மாரியம்மாள் அவர்கள் மறைந்த செய்தி தமிழ் மக்களுக்கு  மிகுந்த கவலையையும், மீளாத்துயரையும் தந்துள்ளது.

எமது ஈழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சிக் காலங்களிலெல்லாம் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தும், அடைக்கலம் தந்தும் , உபசரித்தும் ,மருத்துவ உதவிகள் செய்த ஓர் உயரிய இலட்சியப் பெருந்தாயின் மறைவு எமக்கு பேரிழப்பாகும்.

பெருமதிப்பிற்குரிய அன்புத்தாய் மாரியம்மாள் அவர்கள் இயல்பிலேயே நெஞ்சுரமும், போராட்ட குணமும் கொண்ட ஒரு பெருமாட்டி என்பதை அவரது வாழ்க்கையும்  வரலாறும் எம் எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டியுள்ளது.உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் அடக்கப்படுகிறார்களோ, ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் ஒலிக்கின்ற குரலாக இருக்கின்ற போராட்ட பெருமகனான மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் வைகோ  அவர்களை இவ்வுலகிற்கு உவந்தளித்த பெருமைக்குரிய தாயாரே மாரியம்மாள்.

ஈழத்தமிழர் பிரச்சனையின் ஒவ்வொரு நகர்வையும், அதன் விளைவுகளையும் ஆழமாக ஆராய்ந்து அவர்களுக்காக தனியாகவும், ஒருமித்தும் இறுதிவரை குரல் கொடுத்தவர் எங்கள் பெருமாட்டி. தள்ளாத வயதிலும் அண்மைக்காலங்களில் கூட சமூக விடுதலைப்போராட்டங்கள் பலவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அவற்றுக்கு தலைமைதாங்கி செவ்வனே வழிநடத்திய பெருமையும் அவருக்குண்டு. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இளைய மகன் சிறுவன் பாலச்சந்திரன் சிங்களப்  பேரினவாத அரசால்  படுகொலைசெய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியான போது துயர் கொண்டு அதற்கு எதிராக அகிம்சை வழியில் போராட்டங்களில் ஈடுபட்டார்.

பிறப்புமுதல் இறப்புவரை மங்காப்புகழோடு  இன விடுதலைக்காக வாழ்ந்து காட்டிய பெருந்தாயின் வாழ்க்கையும், வரலாறும் நிலைத்து நிற்கும். அன்புத்தாய்  மாரியம்மாள் வாழ்ந்து காட்டிய வழியை பின்பற்றி  அவர்களின் இழப்பினால் துயரடைந்து நிற்கின்ற அண்ணன் வைகோ அவர்களுக்கும்   அவரது குடும்பத்திற்கும்  எமது அமைப்பின் சார்பில்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

'புலிகளின்  தாகம் தமிழீழத் தாயகம்';

அனைத்துலகத்  தொடர்பகம் 

கீழே அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது