தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது ரெலோ, தமிழரசுக் கட்சியின் பதவி மோகமே காரணம்

Wednesday December 06, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ வெளியேறியுள்ளது. இனிமேல் எந்தவொரு தேர்தல்களிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து, தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதில்லை எனவும் ரெலோ தலைமைப்பீடம் முடிவெடுத்துள்ளது. 

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் விரோதமாகப் பயணித்து, தமது பதவி மோகத்துடன் பயணிக்கும் காரணத்தாலேயே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ரெலோ அறிவித்துள்ளது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளைப் புறக்கணித்து, ஏகபோக ஆதிக்கத்தை தன்னகத்தே வைத்திருக்க விரும்புகின்றது. கூட்டமைப்பு என்ற ஒருமித்த குடைக்குள் நிற்க தமிழரசுக் கட்சி மறுக்கின்றது இந்தக் காரணத்தாலேயே ரெலோ இந்த முடிவை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என ரெலோவின் செயலாளர் சிறிகாந்தா மற்றும் அக்கட்சியின்  அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் ஆகியோர் தெரிவித்தனர்.  

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல தடவைகள் பேசினோம். இதில் புளொட் உம் பங்குபற்றியது.

வடக்கு, கிழக்கில் ரெலோவிற்கு அதிகம் செல்வாக்கு மிக்க உள்ளுராட்சி மன்றங்கள் சிலவற்றை எமக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். இதில் நூற்றுக்கு இருபது வீதம்கூட தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். 

இது தொடர்பாக விந்தன் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுக்களை தமிழரசுக் கட்சி இழுத்தடித்தது. பின்னர் 5 ஆம் திகதி பேசினோம். இதில் புளொட் தலைவரும் கலந்துகொண்டார். 


தமிழரசுக் கட்சி எங்கள் கோரிக்கைகளுக்கு உரிய பதிலை வழங்காமல் காலத்தை இழுத்தடித்தது. புளொட், ரெலோ விடுத்த கோரிக்கைகளை தமிழரசுக் கட்சி புறக்கணித்தது. 

நாங்கள் தங்களோடு கூட்டமைப்பாக இணைந்திருக்க வேண்டும் எனவும் ஆனால் தாங்கள் எடுப்பதுதான் முடிவு எனவும் தமிழரசுக் கட்சி கருதுகின்றது. 

எல்லா சபைகளிலும் தாங்களே வேட்பாளர்களை நிறுத்துவது எனவும் சில சபைகளில் தாங்கள் தனித்து நின்று செயற்படுவது எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி கூறியது. 

அக்கட்சியின் கால இழுத்தடிப்புக்கள், புறக்கணிப்புக்கள் காரணமாக அதிருப்தியடைந்த ரெலோவின் தலைமை உறுப்பினர்கள் 21 பேரில் 16 பேர் கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியாவில் நேற்று (05) கூடி ஆராய்ந்து இனிமேல் எந்தத் தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து, அதன் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்தோம். 

எமது கட்சியின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பாக இன்று மாலை (06) யாழ்ப்பாணத்தில் கூடி முடிவெடுக்கப்படும். – எனவும் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.