தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை

Friday January 12, 2018

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் உட்பட சில கட்சிகள் இணைந்து அமைத்துள்ள தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பெயரை தேர்தலில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில்  நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராஜசிங்கத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பாக நான்கு கட்சிகள் இயங்கியதாகவும் அது தொடர்பான அறிவித்தல் ஏற்கனவே வழங்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்ததாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய மூன்று கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பதிவுப்பெயர் தமிழ் அரசுக் கட்சியாக வீட்டு சின்னத்தில் இருந்தாலும் மூன்று கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடையாளத்தினை பயன்படுத்துவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறிருக்கும் பொழுது தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என பயன்படுத்துவது மக்களைத் தடுமாறச் செய்யும் எனவும் அதனைத் தவிர்க்க வேண்டும் எனவும் இது போலித்தன்மையை உருவாக்கும் என்பதால் அந்தப் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தார் என கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.