தமிழ்நாட்டின் “புதிய அரசியல்” என்றால் என்ன?

Sunday January 07, 2018

தமிழகத்தில் “புதிய அரசியலுக்கான” வாய்ப்புகள் எப்படி? திராவிட கட்சிகளின் கட்டுப்பாட்டை மீறி, புதிய அரசியல் கூட்டணிகள் தமிழகத்தில் எடுபடுமா?

மேற்கண்ட கேள்விகளுக்கு ஒரு தெளிவான பதில் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் : தமிழகத்தின் அரசியல், சமூகவியல், கலாச்சார எல்லைகளை தமது கட்டுக்குள் வைத்திருந்த திராவிட கட்சிகளின் காலம் கடந்துவிட்டது.
தமிழகத்தின் “புதிய அரசியல்”, ஒரு சினிமா விளக்கப்படாத “ஆன்மிகமாக” இருக்குமா அல்லது, திராவிட கருத்தியலின் அடிப்படையில் இருக்குமா என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல முடியும்.

திராவிட கட்சிகளின் சேவைகளை மறுக்க முடியாது

தமிழகத்தின் இரு திராவிட கட்சிகளும், தங்களது காலத்தை கடந்து விட்டன என்ற ஒரு பரவலான கருத்து நிலவுகின்றது. தற்கால, நிலையில் தமிழர்களின் அரசியல், சமுக, பொருளாதார நலன்களை மாற்ற முடியாத ஒரு “கட்டுண்ட” நிலைக்கு இந்த திராவிட கட்சிகள் வந்து விட்டாலும், கடந்த காலங்களில் அந்த கட்சிகள் ஏற்படுத்திய மாற்றங்களையும், அந்த மாற்றங்கள் தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களையும் நாம் மறந்துவிட முடியாது.

இந்தியா சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளுக்குள், திராவிட முன்னேற்ற கழகம் போன்ற திராவிட அரசியல் இயக்கங்கள், தங்களின் சாதி மறுப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு போன்ற கொள்கைகளால், தமிழர்களின் மனங்களை வென்றன. 

இந்த அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம்  இல்லையென்றால், தமிழர்கள் சாதி கொடுமைகளுக்குள் சிக்கி, வளர்ச்சியை அடைய முடியாமல் பின்தங்கி போயிருப்பர். பிராமண ஆதிக்கம் மற்றும் சாதி கொடுமைகளை களையெடுத்தது, திராவிட கருத்தியல்தான் என்றால் அது மிகையாகாது.

காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி, சுதந்திரத்துக்கு பின்பு தொடங்கி இன்று வரை தமிழகத்தில் ஆட்சியில் இருந்திருந்தால், இன்றைய நிலை எப்படி இருக்கும் எண்ணி பார்க்க முடியுமா? தமிழகத்தில் சாதி ஆதிக்கங்கள் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும்.
புதிய அறிவுசார் சிந்தனைகள் தவிர்க்க முடியாதவைதான், ஆனால், சாதி ஒழிப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கான முன்னேற்ற திட்டங்கள், பிற்படுத்தப்பட்டோர் கல்வி, வேலை வாய்ப்புகளில் பின்தங்கிவிடாமல் இருக்க செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் போன்றவைக்காக, திராவிட முன்னேற்ற கழகம் உட்பட்ட திராவிட அரசியல் இயக்கங்களை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

ஒரு புதிய “சூப்பர் ஸ்டாரின்” அரசியல் வரவை ஆதரிப்பதற்காக, சில முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், தமிழகத்தின் அரசியல் வலுவிழந்து போனதற்கு திராவிட அரசியல் கட்சிகள்தான் காரணம் என்ற குற்றசாட்டை முன்வைக்கலாம். ஆனால் தமிழகம், சமுகநீதியை நிலைநாட்டும் முற்போக்கு சிந்தனைகளின் பிறப்பிடமாக அமைந்ததற்கு, திராவிட இயக்கங்கள், குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆரம்ப காலத்தில் ஆற்றிய பங்கை மறுக்க முடியாது. தொட்டில் பழுதாகிவிட்டது என்பதற்காக, குழந்தையியும் சேர்த்து எறிந்துவிட முடியாது, திமுக-வின் நிலையில், பழுதடைந்த தொட்டிலைத்தான் எறிய வேண்டுமே தவிர, குழந்தையான கொள்கைகளை அல்ல.

திராவிட கட்சிகளின் நெருக்கடி காலம்

பலவகையான “திராவிட அரசியல்களால்”, திராவிட கட்சிகள் தற்பொழுது ஒரு நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டன என்ற கருத்தில் எனக்கு உடன்பாடுதான். தமிழகத்தின் எதிர்கால அரசியல், இந்த “சீரழிந்துவிட்ட” கட்சிகள் ஏற்படுத்தியுள்ள அரசியல் வரையறைகளை உடைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், திராவிட கட்சிகள் தமிழர்களை வஞ்சித்து விட்டன என்று, தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் மட்டும் முனைப்புக்கட்டும் சில “தமிழ் பிரமுகர்கள்” முன்வைக்கும் வாதத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆம், திராவிட கட்சிகள் தற்பொழுது தமிழர்களை வஞ்சித்துவிட்டன என்ற கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதுதான், ஆனால் தொடக்க காலத்தில் அப்படியில்லை என்பதுதான் உண்மை. தற்பொழுதைய அரசியல் சூழலுக்கும், தொடக்க கால அரசியல் சூழலுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. அதனை அரசியல் ஆய்வுகளில் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில், சாதி வன்கொடுமைகள் சட்டத்துக்கு புறம்பானவையாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், சாதி வேற்றுமைகளை முன்னிறுத்திய வழக்கங்கள் அழிந்து விடவில்லை. திராவிட கட்சிகள், சாதி வன்கொடுமைகளை தடுக்க பல முற்போக்கு திட்டங்களை முன்னெடுத்திருந்தாலும், இன்று எந்த சாதியை ஒழித்திருக்க வேண்டுமோ, அதை வைத்து அரசியல் சதுரங்க ஆட்டங்கள் ஆடும் நிலையை ஏற்படுத்தி விட்டன. 

ஆட்சிக்கட்டில் சுகபோகத்துக்கு அடிமையானதுதான் திராவிட அரசியல் கட்சிகளின், குறிப்பாக இரு முக்கிய கட்சிகளின் மிகப்பெரிய பலவீனம். அதிகாரம், ஊழலுக்கு வித்திடும்; அளவுக்கடந்த அதிகாரம், அளவுக்கடந்த ஊழலுக்கு வித்திடும்.

தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமை என்பதே கிடையாது. கருத்தியலாகக்கூட ஒற்றுமை கிடையாது. தமிழகத்தின் தற்பொழுதைய அரசியல் சூழலில், இந்த இரு அரசியல் கட்சிகளுக்கு இடையேயான அதிகார போராட்டம்தான், ஒட்டுமொத்த திராவிட கருத்தியலையே அலட்சியத்திற்கும், ஏளனத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. 

தமிழகத்தின் பொருளாதார பின்னடைவு

திராவிட கட்சிகளின் மிகப்பெரிய தோல்வி, தமிழகத்தின் பொருளாதார பின்னடைவுதான். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு, தென்மாநிலங்களிலேயே, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக, தமிழ்நாடு உள்ளது. மற்ற தென்மாநிலங்கள், வளர்ச்சியில், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் சிறப்பான மேம்பாட்டைக் கண்டுள்ளன,.

கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. வாகன தொழில்துறையில் முன்னோடியாக தமிழ்நாடு இருப்பதாக கூறிக்கொண்டாலும், அத்துறை நீண்டகால அடிப்படையில் நிலைத்திருக்காமல் போகலாம் என்பதை தமிழ்நாடு உணரவில்லை.

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மட்டுமே பொருளாதாரத்தை முடிவு செய்யவில்லை. தமிழகத்தை ஆளும் தலைமைத்துவத்தில்தான் பிரச்சனை உள்ளது. அன்றும் சரி, இன்றும் சரி, திராவிட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர்கள் என்பதை மறுக்கவே முடியாது. கலாச்சார, மொழி ஆற்றலில் அவர்களை வீழ்த்தவே முடியாது. ஆனால், மேம்பாட்டு திட்டங்களை வகுக்கும் திறனாற்றல் குறைவானவர்கள். தமிழ்நாட்டின் ஆண்டவர்களும் சரி, ஆள்பவர்களும் சரி, அண்டை மாநில தலைவர்களோடு ஒப்பிடுகையில், அறிவியல், தொழில்நுட்ப ஆற்றல் குறைந்தவர்களாகவே உள்ளனர்.

இலவசங்களை, தேர்தலுக்கு முன்பும், பின்பும் வாரி இறைப்பதில்தான் இரு திராவிட கட்சிகளின் தலைவர்களும் திறமைமிக்கவர்களாக இருக்கின்றனர். இலவச உணவு, இலவச அரிசி, இலவச தொலைகாட்சி, இலவச அத்தியாவசிய பொருட்கள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மக்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும. ஆனால், நீண்டகாலத்தில் மக்களை “இலவசங்களை மட்டுமே எதிர்பார்க்கும்” கூட்டமாக மாற்றிவிடும்.

தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக உள்ளது. தொடர்ந்து ஆட்சிக்கு வரும் தலைவர்கள், அந்த பிரச்சனையை களையவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வெளிநாடுகளில், உடலுழைப்பு தொழிலாளர்களாக வேலைத்தேடி தஞ்சமடைந்துள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட அளவிலான தமிழர்கள், தங்களின் கல்வி, தொழில்திறன் அடிப்படையில் நல்ல வேலைகளில் உள்ளனர். உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையங்களில் வேலை செய்வோரில், தமிழர்களை விட மற்ற தென்மாநிலத்தவர்களே அதிகம்.

ஒவ்வொரு சட்டசபை தேர்தலுக்கு பிறகும், இலவச உணவு, இலவச அரிசி, இலவச தொலைகாட்சி போன்றவை, சாதாரண மக்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக அமையலாம், ஆனால் அவை மாநிலத்தின் பொருளாதார, சமூகவியல் வளர்ச்சிக்கு வித்திடாது.

சுதந்திரத்துக்கு பின், தமிழ் மொழியை சிறுமைபடுத்தி, இந்தியை திணிக்கும் முயற்சியையும், புதுடில்லியின் ஆதிக்கத்தையும் எதிர்த்தது, திமுக-வும் மற்ற திராவிட இயக்கங்களும் செய்த சரியான செயல்.

தமிழர்களின் சில குணாதிசயங்கள் விட்டுக்கொடுக்க முடியாதவை

இருப்பினும், தமிழர்களுக்குள், சுயமரியாதையையும், இனப்பெருமையையும் அதிகமாக ஊட்டியது திராவிட அரசியல் இயக்கங்கள் என்றால் அது சரியாகாது; அதற்கு காரணம் ஈழத்தமிழர்கள் முன்னெடுத்த தமிழ்த்தேசிய போராட்டமே என்றால் மிகையாகாது. சில அண்மையில் “உருவாக்கப்பட்ட” தலைவர்களை போல் அல்லாமல், தமிழர்களின் சுயமரியாதையை, தமிழர்களின் தேசிய அடையாளத்தை தற்காக்க போராடியவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர், வேலுபிள்ளை பிரபாகரன். திமுக-வின் நிறுவனரான பேரறிஞர் அண்ணா-வின் நூல்களை விரும்பி படித்தவர் பிரபாகரன்.

தமிழ்நாட்டு அரசியலில், தற்பொழுது ஒரு உறைநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் இருபெரும் திராவிட கட்சிகள், தங்களை புதுபித்துக் கொள்வது என்பது நடக்காத காரியம்; அவர்கள் புரிந்த வரலாற்று பிழைகள் அவ்வளவு அதிகம். தமிழர்களின் போராட்டத்தில் அவர்கள் புரிந்த துரோகங்கள் அதிகம், குறிப்பாக ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் புரிந்த மிகப்பெரும் துரோகம்.

இந்நிலையில்தான், தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது; அந்த இடைவெளியை நிரப்பவே புதிய அரசியல் தலைமைத்துவங்கள், புதிய அரசியல் கட்சிகள் உருவாகின்றன.

ஆனால், அதிலும் ஒரு இருதலைக்கொல்லி நிலை இருக்கின்றது. இரு திராவிட கட்சிகள், ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருந்தாலும், சில விவகாரங்களை தமிழ்நாட்டு மக்கள் எதற்காகவுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை, தமிழக அரசியலுக்கு தடம் பதிக்கலாம் என்ற ஆசையோடு நுழைபவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழ்மொழி, வரலாறு, கலாச்சாரம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதான் அன்பு ஆகியவற்றை ஒரு காலத்திலும் தமிழக மக்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரப்போகின்றோம் என்று கூறிக்கொண்டு பகட்டுத்தன்மையுடன், தமிழக அரசியலுக்குள் நுழைபவர்கள், தங்களது சினிமா புகழ், அரசியலிலும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை கொள்ளக்கூடாது. சில சினிமா பிரபலங்கள், அரசியலில் கோலேச்சியுள்ளனர், ஆனால் பலர் படும் தோல்வியை சந்தித்துள்ளனர். ஒருவர் வெற்றி பெற்றிருந்தால், நூறு பேர் தோல்வியடைந்துள்ளனர்.
திராவிட கருத்தியலின் மிகப்பெரிய பலவீனமே, அது மற்ற அண்டை மாநிலத்தில் இருந்து வந்த தலைவர்களை, தமிழர்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்ற தாரளமய சிந்தனையை தமிழர்கள் மத்தியில் விதைத்ததுதான். மற்ற மாநிலத்தவர்களை, திராவிட சிந்தனையில், தமிழர்கள் பெருந்தன்மையோடு, தலைவர்களாக ஏற்றுக்கொண்டு அரைவணைத்த பொழுதிலும், மற்ற மாநிலங்களின் தமிழர்கள் அப்படி ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அவர்களும் திராவிடர்கள் என்றாலும் கூட. 

 “புதிய அரசியல்” பிசுபிசுத்து போகலாம்

புதிய ஆட்சிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், ரஜினிகாந்த் தமிழக அரசியலில் தனது முத்திரையை பதித்துவிடலாம் என்று நினைக்கலாம். அவருடைய “புதிய அரசியலும்” சாதி, மத பேதங்களை கடந்த ஆன்மிக அரசியல்தானாம்.

எது எப்படியிருப்பினும், தமிழர்களை கவர அவர் என்ன கருத்தியலை முன்வைத்தாலும், அது தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தால் மட்டுமே எடுபடும். ரஜினிகாந்த் ஆகட்டும், அல்லது மற்ற அரசியல் புதுமுகங்களாகட்டும், யாராக இருந்தாலும், 1850-இல் தத்துவாசிரியர் கார்ல் மார்க்ஸ் சொன்னதை அவர்கள் மறந்து விடக்கூடாது.

நியூ யோர்க் ட்ரிபுன் டைம்ஸ் இதழில், கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளில், இந்தியாவின் கலாச்சாரமும், மதமும், பல ஆக்கிரமிப்பாளர்களை “விழுங்கியன” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஒரே விதிவிலக்கு, பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சியாளர்கள் மட்டுமே.

கார்ல் மார்க்சிற்கு இந்தியாதான் புதிர்; ஆனால், என்னை பொறுத்தவரையில், தமிழ்நாட்டின் திராவிட அரசியல் ஏற்படுத்தியுள்ள குழப்ப நிலையில், தாங்கள் கோலேச்சி விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் யாருக்கும், பலரின் புரிதலுக்கு மாறாக, தமிழக மக்கள் அதிர்ச்சியை கொடுக்கலாம்.