தமிழ்நாட்டில் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது!

Saturday August 11, 2018

கருணாநிதி இறந்து விட்டதால் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு இல்லை. 

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக  எனக் கூறி முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் ஏற்கனவே மத்திய அரசின் ‘இசட்பிளஸ்’ கமாண்டோ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்திகதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த இசட்பிளஸ் பாதுகாப்பு படையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது யாருக்கும் ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியசாமிக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பே ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு படை விலக்கிக் கொள்ளப்பட்டு மத்திய ரிசர்வ் காவல் துறை  படை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சாதாரண கமாண்டோ படை பாதுகாப்புதான் உள்ளது. ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை மத்திய உளவுப்பிரிவு தக்க ஆதாரங்களை சேகரித்து, என்னென்ன அச்சுறுத்தல் உள்ளது என்பதை பட்டியலிட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கும்.

அதை மத்திய அரசு பரிசீலித்து தான் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த அடிப்படையில் தான் ஜெயலலிதாவுக்கு 91-ம் ஆண்டில் இருந்தும், கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டில் இருந்தும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் இறந்து விட்டதால் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இசட் பிளஸ் பாதுகாப்பு என்றால் தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) கமாண்டோ வீரர்கள் 8 பேர் எந்திர துப்பாக்கியுடன் எப்போதும் உடன் வருவார்கள். 3 ஷிப்டாக பணியாற்றும் வகையில் குறைந்தது 24 பேர் இருப்பார்கள்.

அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு 40 ‘இசட்பிளஸ்’ கமாண்டோ படையினரையும், கருணாநிதிக்கு 22 இசட்பிளஸ் கமாண்டோ படையினரையும் மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. அது முடிவுக்கு வந்து விட்டது. இப்போது உள்ள அரசியல் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ரிசர்வ் காவல் துறை  படை பாதுகாப்பு தான் உள்ளது