தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் - நிபந்தனையற்ற விடுதலை ஒன்றே தீர்வாகும்!

ஞாயிறு நவம்பர் 15, 2015

விடுதலை இல்லையேல் உயிர்துறப்பு என்ற நிலையில் உணவு மறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவத்தையும் முற்றுமுழுதாக தவிர்க்கப் போவதாக அறிவித்துள்ளமை நிபந்தனையற்ற விடுதலை ஒன்றே இந்த விடயத்தில் தீர்வாக இருக்க முடியும் என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது.

நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் இவர்கள் முன்னெடுத்துவந்த உணவுத்தவிர்ப்பு போராட்டமானது, நவம்பர் 7 ஆம் திகதி முதல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நல்லாட்சி அரசாங்கத்தின் வாக்குறுதியையடுத்து, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாலேயே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலை இல்லையேல் உயிர்துறப்பு என்ற நிலையில் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் உணவு மறுப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களது விடுதலையை வலியுறுத்தியும் வட-கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட பொது வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறவைத்த தாயக மக்களுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீண்டகாலமாக நீதி விசாரணைகள் மறுக்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் துணையுடன் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களது விடுதலைக்காக அவர்கள் தங்களைத் தாங்களே வருத்தி அகிம்சை வழியில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கையறு நிலையில் முன்னெடுத்துவரும் உணவுமறுப்புப் போராட்டத்தை எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் கைவிடுமாறு கோரமுடியுமென்று பெரும் மதிப்பிற்குரிய வட மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் எழுப்பிய கேள்வியின் மூலம் தமிழர்களின் அவலநிலையினை உலக நாடுகள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

நீதிக்குப் புறம்பான தடுத்துவைப்பின் மூலம் தமது வாழ்வின் பெரும் பகுதியை சிறைக் கம்பிகளின் பின்னால் இழந்துவிட்ட இவர்களது எஞ்சிய வாழ்நாட்களாவது நிம்மதியாக அமையவும், இவர்களின் விடுதலைக்காக சிறைக் கம்பிகளுக்கு வெளியே துன்பச் சிலுவை சுமந்து திரிபவர்களின் துயரங்களைப் போக்கவும் சிறிலங்கா அரசாங்கம் இவர்களை உடனடியாக நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்ய முன்வர வேண்டும் என நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

- நோர்வே ஈழத் தமிழர் அவை.