தமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வரவேண்டும்!

ஞாயிறு செப்டம்பர் 23, 2018

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைக்காக தமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வதற்கு அருகதையற்றவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டத்தில் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் மீனவர்களுக்கான வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட எஸ்.வியாழேந்திரன், “தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் மக்கள் மூன்று வருடங்களாக போராடிவருகின்றனர். தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். ஒருகாலத்தில் ஜேவிபி.யினரும் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அவர்கள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழர்களின் போராட்டம் விடுதலைப் போராட்டமாகவே நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கள்வர்களோ காவாலிகளோ அல்ல. ஓர் உன்னத விடுதலைக்காக போராடியவர்கள்.

இலங்கையில் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்கின்றவர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வீதியில் இறங்கவேண்டும். வீதியில் இறங்கி இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை வழங்கவேண்டும்.

தமிழ் மக்களின் தலைவர்கள் என தங்களை அடையாளப்படுத்துகின்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் தங்களது குரலை பலமாக ஒலிக்க செய்ய வேண்டும்.

அதேபோன்று கிழக்கு தமிழர்களின் நிலங்களையும் பாதுகாக்கும் வகையில் அனைவரும் களத்திற்கு வரவேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் மக்கள் மத்தியில் வருவதற்கு தகுதியற்றவர்கள்’ என தெரிவித்துள்ளார்.