தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை!

செவ்வாய் ஜூலை 17, 2018

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலான வேடங்களில் நடிப்பவர் மட்டும் அல்ல, துணிச்சலாக பேசுபவரும் கூட. அவர் அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, சினிமாவுக்கு வந்ததுக்குப்பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறதே இல்லை. எப்போ அமையுதோ அப்போ தாராளமா கல்யாணம் பண்ணிக்குவேன்.

தமிழ் நடிகைகளுக்கு என்று ஒரு அமைப்பு கூட இல்லையே?

முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கே மதிப்பு இல்லை. இப்படி ஒரு நிலைமை இருக்கும்போது நடிகைகள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பு ஆரம்பிக்க வாய்ப்பே இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துகொண்டு இருக்கிறார்கள். நாம ஒரு அமைப்பு ஆரம்பிச்சு அதுக்கு உறுப்பினரா அவங்களை சேரச் சொன்னா அவங்க வருவாங்களா? இந்தியில இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா, தமிழ்ல மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை. ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ்ப் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கலை. 

தெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது. தன்ஷிகா நல்லா தமிழ்ப் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவங்க எல்லோரும் தமிழ்ப் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்கள்ல நடிக்கலை. மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் திருச்சிப் பொண்ணு. மிஸ் இந்தியா பட்டம் வாங்குனதுக்கு அப்புறம்தான் அனு கீர்த்தி யார்னு நமக்குத் தெரிய வந்துச்சு. இந்த மாதிரி அனு கீர்த்திகள் நிறைய பேர் இங்க இருக்காங்க. நாமதான் அவங்களை அடையாளம் கண்டுக்காம இருக்கோம். இது எல்லாத்தையும் மீறி, நம்ம பொண்ணுங்க நடிக்க வந்தா அவங்களை மதிக்க மாட்டாங்க. 

ஒழுங்காச் சாப்பாடு போட மாட்டாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும். நம்ம ஊரு பொண்ணுங்க அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு ஒரு அமைப்பு ஆரம்பிச்சு பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்துவெச்சா எனக்கு சந்தோசம்தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் பண்ணுறதுக்கு ரெடி.”

“அப்ப, சினிமாவுல பெண்களுக்கு நடக்குற பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்குறீங்க?”

எல்லாத்தையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் எங்கக்கிட்ட இருக்கு. தவிர, எங்க பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்புகளும், ஆட்களும் இருந்தாங்கனா நாங்க இன்னும் மகிழ்ச்சியா உணர்வோம்.