தமிழ் மக்களின் போராட்டத்தை வழிநடத்தத் தெரியாத தலைமைகள்

சனி டிசம்பர் 12, 2015

 SMS களின் காட்டிக்கொடுப்பு !!!

தமிழரசுக் கட்சியையும் - மக்களையும் வழிநடத்தவும் வழித்தெரியாமல், கட்சியின் பிரச்சினைகளை அன்னிய நாட்டின் இராஜதந்திரிகளிடம் கையளிப்பதையும், கட்சியைப் பற்றியும் - கட்சியின் தலைமையைப் பற்றியும் விமர்சிக்கின்ற கட்டுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், செய்தி ஆசிரியர்களை வெளிநாட்டு

இராஜதந்திரிகளிடமும் ஊடக நிறுவனங்களின் தலைமையிடமும் காட்டிக்கொடுப்பதையும்,  வழக்கமாகக் கொண்டுள்ள SMS களின் (சம்பந்தன் - சுமந்திரன் - மாவையின்) கையாலாகத்தனம் இன்று அனைத்து மட்டங்களிலும் அம்பலப்பட்டு இராஜதந்திரிகளே முகம் சுழிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. இந்த காட்டிக்கொடுப்பின் உச்சக்கட்டமாக, வடக்கு முதலமைச்சரை அண்டை நாடொன்றின் இராஜதந்திரியை வைத்து பணியவைக்கும் முயற்சி எஸ்.எம்.எஸ் களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினையைச் சரியாகக் கையாளத் தெரியாமல், தமிழரசுக் கட்சியை ஜனநாயக ரீதியில் வழிநடத்தவும் தெரியாமல், கூட்டமைப்பின் தேவையையும் அதன் ஜனநாயக உரிமைகளையும் மதிக்கவும் தெரியாமல் அனைத்தையும் யாரோ ஒருவரின் தலையில் மூட்டை கட்டி வைத்துவிடுகின்ற போக்கே தொடர்கின்றது.

திருவாளர் சம்பந்தரினால் தமிழ் மக்களின் தலைவராகவோ அல்லது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவோ செயற்பட இயலவில்லை என்பது வரவு-செலவுத் திட்டம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்களே சான்று பகர்கின்றன. வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்து தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. 

பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து பிரபல பத்தி எழுத்தாளர் குசல பெரேரா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதியன்று அனைத்து தொழில்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளன. 

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும், நிவாரணம் வேண்டி நிற்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு குறைவான நிதியொதுக்கீடு செய்திருப்பது குறித்தும் சுட்டிக்காட்டி இந்த வரவு-செலவு திட்டத்திற்கு எவ்வாறு ஆதரவளிப்பது? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். 

இந்த விடயங்கள் தொடர்பில் திருவாளர் சம்பந்தர் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவோ அல்லது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவோ காத்திரமான கருத்து எதையும் இதுவரை முன்வைக்கவில்லை. 

ஆனால் முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது என்றும், அவ்வாறு ஆதரவளிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் கூறியுள்ளார். எதனடிப்படையில் இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது? என்பது குறித்து அவரிடமிருந்து தெளிவான விளக்கம் எதுவும் வெளிவரவில்லை.

இந்நாட்டின் பொருளாதார நிபுணர்களும் அரசியல் விமர்சகர்களும் அரசியல் ஆய்வாளர்களும் இந்த வரவு-செலவு திட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், ஒரு எதிர்கட்சித் தலைவர் அவை எதனையும் கருத்திலெடுக்காமல் எவ்வாறு ஆதரவளிக்க முன்வந்துள்ளார் என்பது நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை வழிநடத்தத் தெரியாமல் சர்வதேச சமூகத்தின் கைகளில் கொடுத்து, ‘உங்கட விருப்பத்துக்கேற்றவாறு கையாண்டு ஏதோவொரு தீர்வைப் பெற்றுத்தருமாறு’ கூறி, தான் தலைமை ஏற்றுள்ள ஒரு இனத்தின் விடுதலையை அன்னிய சக்திகளிடம் ஒப்படைத்துள்ளார் சம்பந்தன்.  

தலைமை என்பது, தனது இனத்துக்கான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த வேண்டும். தனது இனமக்கள் எதைக் கேட்கிறார்களோ, அந்த விடையத்தில் இரும்பு  பிடியாக நின்று அந்த மக்களின் குரலாக முழங்க வேண்டும். உள்நாட்டிலிருந்தோ அல்லது சர்வதேச மட்டத்திலிருந்தோ வருகின்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்து கொள்கையையும், அந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தையும் கைவிடுவது தலைமைத்துவப்பண்பு ஆகாது. 

ஆனால் சம்பந்தரை பொறுத்தவரையில் இங்கு எல்லாமே தலைகீழாக நடக்கின்றது.     

‘எமக்கான போராட்டத்தை நாமே நடத்த வேண்டும்’, அதற்கு ‘சர்வதேச சமூகம் ஆதரவாக செயல்பட முடியுமே தவிர, அவர்கள் எமக்காக களத்தில் இறங்கி போராடமாட்டார்கள் என்ற எதார்த்தமான கொள்கையை முன்வைக்கும் ஜனநாயக சக்திகளை,

தீவிரவாதிகளாகவும், கூட்டமைப்பை உடைக்க சதி செய்பவர்களாகவும் சித்திரித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எஸ்.எம்.எஸ்கள் காட்டிக்கொடுத்து வருகின்றனர். 

அரசியல் கைதிகளின் விடுதலையைப் பொறுத்தமட்டில் இவர்கள் நடந்துகொண்ட விதம் அனைவரும் அறிந்ததே.

‘அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு நாம் தலைமை தாங்க முடியாது. அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நாம் சொல்ல முடியாது. நாம் அவர்களின் விடுதலைக்காக முழுமையாகப் பாடுபடுகிறோம்’ என்று சம்பந்தன் சொல்லிவிட்டு, 

கைதிகள் இரண்டாம் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும்போது இந்தியாவில் சென்று ஓய்வெடுத்தார் என்பதும், அவருடைய பீயோன் சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும், ஊதுகுழல் மாவை.சேனாதிராசா ‘அரசியல் கட்சிகளுக்காக தம்மால் புரட்சியெல்லாம் நடத்த முடியாது’ என்று வவுனியா கூட்டத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியாகவும், அனைத்து தியாகத்தின் அடையாளமாகவும் இருந்த ஒரே துருப்புச் சீட்டான ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையைப் பற்றிப்பிடிக்கத் தெரியாமல் அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக – பிணை எடுப்பதற்காக அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போவதற்குத் துணைபுரிந்துவிட்டு, 

வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துவிட்டு அந்த கையை இறங்குவதற்குள் மறுகையை உயர்த்தி பொறுமையிழந்துவிட்டோம் என்று சுமந்திரன் சொல்லியிருப்பதும் மிகவும் நகைப்பாக இருக்கிறது.

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று சும்மா ஒப்புக்கு கூறிக்கொண்டு வரவு-செலவுத்திட்டத்தில் இராணுவத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை மனதார ஆதரித்துள்ள தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடத்தை இனியாவது அங்கத்துவக் கட்சிகள் புரிந்துகொண்டு, 

இவர்களால் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்ற எதார்த்தத்தைப் உணர்ந்து தமிழ் மக்களும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் மாற்றுத் தலைமை குறித்து சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

-தேசமான்யன்-