தமிழ் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள்? தென் ஆபிரிக்கா எழுப்பிய கேள்விக்கு தமிழர்களின் பதில்...

சனி டிசம்பர் 12, 2015

தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வைத் தரும் என்பதை உறுதியாக நம்பி அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை நடத்தி வந்தார்கள். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும் இரண்டு இலட்சம் வரையான தமிழ் மக்களும் இந்த விடுதலைக்கான போராட்டத்தில் விலையாளார்கள்.

ஆனால், சிங்களப் பேரினவாத அரசு, பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி சர்வதேசத்துடன் இணைந்து கூட்டாக தமிழர்களின் பாதுகாப்பு சக்தியாக இருந்த விடுதலைப் புலிகளின் பலம் வாய்ந்த கட்டமைப்பை அழித்தொழித்தது. பலமிழக்க வைக்கப்பட்ட தமிழர்களிடம் இப்போது உங்களுக்கு என்ன வேண்டும் என்று வினவுகின்றது உலகம். தாங்கள் திணிப்பதை தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாடிபிடித்தறியும் முனைப்பில் அது தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் மாத முதல் வாரத்தில் தாயகம் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர் பிரிதிநிதிகளை தமது நாட்டிற்கு அழைத்து தென் ஆபிரிக்கா அரசின் வெளியுறவுதுறை சார்ந்தவர்களும், தென் ஆபிரிக்காதேசிய கொங்கிரசைச் சார்ந்தவர்களும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். இச்சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளரும் அனைத்துலக ஈழத்த தமிழர் அவையின் சர்வதேச தொடர்பாளருமான திரு. திருச்சோதி அவர்களுடன் சந்தித்துப் பேசியபோது...

தாங்கள் அண்மையில் தென்னாபிரிக்கா சென்று வந்துள்ளீர்கள், அப்பயணத்தின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லுங்கள்...

இந்தப் பயணத்தைப்பற்றி குறிப்பிடுவதற்கு முன் இந்தப் பயணம் எந்த அடிப்படையில் ஆரம்பமானது என்பதை சற்றுத் தெளிவாக கூறவிரும்புகின்றேன். எல்லோரும் அறிந்தவரையில் சில மாதங்களுக்கு முன்னர் இலண்டனில் பல புலம்பெயர் அமைப்புக்களுடன் தென்னாபிரிக்க அரசின் வெளிவிவகார அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் இலங்கை விவகாரம் தொடர்பாக கலந்துரையாடி இருந்தார்கள். அதில் நான் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தோம். இந்தச் சந்திப்பின்போது, ‘இலங்கையில் சமாதானம் உருவாவதானால் அது எந்த அடிப்படையில் அமையவேண்டும். உங்களின் எதிர்பார்ப்பு என்ன?’ என்று அவர்கள் எங்கள் முன் கேள்விகளை வைத்தார்கள்.

அந்த நேரத்தில் எம்மால் எழுப்பப்பட்ட கேள்வி ‘ஏன் தென்னாபிரிக்க இந்த விடயத்தில் அக்கறை காட்டுகின்றது?’ என்பதுதான். அதற்கு அவர்கள் எமக்கு இவ்வாறு தெரிவித்தார்கள், 2009 இற்கு பின் மகிந்த ராஜபக்ச தென்னாபிரிக்காவின் முறைமையை இலங்கையின் நல்லிணக்கத்திற்கு பயன்படுத்துவதற்காக தென்னாபிரிக்காவின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டிருந்தார். இதனையடுத்து தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறிபோrV இலங்கை சென்றிருந்தார் என்று.

இலங்கையில் சமாதானம் ஏற்படுவதாக இருந்தால் எந்த அடிப்படையில் அமையவேண்டும். எமது எதிர்பார்ப்பு என்ன என்று அவர்கள் எம்மிடம் வினவினர். நாம் கூறினோம், சமாதானம் உருவாக வேண்டும் என்றால் தென்னாபிரிக்கா உட்பட்ட சர்வதேச நாடுகள் இதற்கு நடுநிலையாளர்களாக இருந்து செயற்படவேண்டும். நேரடியாக பேச்சுக்களில் நாம் ஈடுபட தயாரில்லை என்பதையும் வலியுறுத்தினோம். எங்களது சிந்தனைகளை கேட்டு அறிந்த அவர்கள் தென்னாபிரிக்கா சென்ற பின்னர், புலம்பெயர் அமைப்புக்கள் தாயகத்தில் இருக்கும் அமைப்புக்கள் உலகத் தமிழ் அமைப்புக்கள் அனைவரும் கூடி பேச்சுக்கான இந்தப் பேச்சு இடம்பெற்றது. இது சமாதானப் பேச்சு அல்ல. இதன் நோக்கம், எமது எதிர்பார்ப்பு என்ன என்பதை அவர்கள் தெரிந்துகொள்வதே.

அவர்கள் கூறிய முக்கியமான விடயம் புலம்பெயர் தமிழரைத் தவிர்த்துக் கொண்டு, அவர்கள் இல்லாமல் எந்தவித சமாதானமும் சாத்தியமாகாது என்பதை தென்னாபிரிக்க இராஜதந்திரிகள் முக்கியமாக வலியுறுத்தியிருந்தார்கள். அந்த அடிப்படையில்தான் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களையும், தாயகத்தில் இருக்கும் அமைப்புக்களையும் சந்திக்க விரும்பியதாக கூறியிருந்தார்கள். அதன் அடிப்படையில் அனைத்து அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

தாயகத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூகம், அங்கு செயல்படும் அரச சார்பற்ற அமைப்புக்கள், புலம்பெயர் நாடுகளில் உலகத் தமிழர் பேரவை, தமிழீழ மக்கள் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட அனைத்து அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கடைசி நேரம் மட்டும் கலந்துகொள்வதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடைசி நேரத்திலும் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் உலகத்தமிழர் பேரவையும் கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாட்டில் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான போராட்டம் நடைபெற்றதால் கலந்துகொள்ளவில்லை.

தாங்கள் அதற்கு மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார்கள். ஆனால் தமிழ்ச் சிவில் சமூகம் பங்குபற்றியது. அங்கிருந்து பொது அமைப்புகளில் இருந்தும், ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ மற்றும் காணாமல் போனோர் அமைப்பின் சார்பில் அனந்தி சசிதரனும், ஏனைய புலம்பெயர் அமைப்புக்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தென்னாபிரிக்கா அரசின் வெளியுறவுத்துறை சார்ந்தவர்களும், தென்னாபிரிக்க தேசிய கொங்கிரசைச் சேர்ந்தவர்களும், பல இராஜதந்திரிகளும் கலந்துகொண்டு எமது நிலைப்பாடு என்ன என்பதைத்தான் அவர்கள் கேட்டார்கள்.

இந்த அடிப்படையில்தான் எமது கோரிக்கை இருக்கவேண்டும் என்றோ அல்லது இந்த வரைமுறையில் தான் எமது கோரிக்கை இருக்கவேண்டும் என்றோ அவர்கள் வலியுறுத்தவில்லை. அவர்கள் கேட்டது நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் அதாவது சிறீலங்கா அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதுதான்.

ஆகவே அங்கு வந்திருந்த அனைவரும் தங்களது எதிர்பார்ப்புக்களையும், அங்கு இருக்கும் இன்றைய சூழலையும் , மனித உரிமை சபையின் அறிக்கைக்குப் பின்னர் சிறீலங்கா அதை எவ்வாறு கையாள்கிறது என்பதையும், நாட்டிலிருந்து வந்த அனைவரும் வலுவாக வலியுறுத்தினார்கள். இலங்கையில் இன்று எந்த விதமாறுதலும் இல்லை என்றும், சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியது போல் செயற்படவில்லை என்பதையும் தெரிவித்தார்கள்.

பொறிமுறையை நடைமுறைப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்பதை கூறினார்கள். ஜஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பு சார்பாக பிரான்சிஸ் ஹரிசன் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். அவர் கூட தெரிவித்தார், தங்கள் விசாரணையின் அடிப்படையில், ஆய்வின் அடிப்படையில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்றபின்னர், ஓகஸ்டில் புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் இலங்கையில் தொடர்ச்சியாக சித்திரவதைகள், ஆள்கடத்தல்கள் நடப்பதற்குரிய சாத்தியங்கள் தம்மிடம் இருக்கின்றன என கூறினார். அதன் மூலம் அவர் தெரிவித்தது, இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது அங்கு எப்படி விசாரணைகள் நடக்கும்? எனக் கேள்வி எழுப்பினார்.

நாம் அரசியல் தீர்வைப்பற்றி பேசவில்லை. அரசியல் தீர்வுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கம் செய்வேண்டியவற்றை குறிப்பிட்டோம். தாயத்திலிருந்து வருகை தந்தவர்களும், புலத்திலிருந்து வருகை தந்தவர்களும், தமிழகத்திலிருந்தவர்களும் ஒருமித்து ஓர் அடிப்படையில் கோரியிருந்தோம். அங்கிருந்த இராஜதந்திரிகள் எமது ஏழு கோரிக்கைகளையும் (கோரிக்கைகளை 11ம் பக்க  பெட்டிச் செய்தியில் பார்க்கவும்) சர்வதேச இராஜதந்திரிகளிடம் தென்னாபிரிக்க எடுத்துச் செல்லும் என்று தெரிவித்தார்கள்.

இதேவேளை இன்னுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும், அன்று சூமா அவர்கள் ராஜபக்சவை சந்திக்கும் போது கேட்டாராம், உங்களது நல்லிணக்க விசாரணை அனுபவத்தை தங்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்று. அதற்கு அவர் கேட்டாராம், என்ன நோக்கத்திற்காக இதை தற்போது கேட்கிறீர்கள் என்று. ஏனெனில் சகல விசாரணைகளும் முடிந்த பிற்பாடே நல்லிணக்கத்திற்கான குழு அமைக்கப்படலாம்.

அல்லது அரசியல் தீர்வுக்கு பின்னரே இந்த நல்லிணக்க ஆணைக்குழுவை முன்வைக்கலாம். அவர் கேட்டது என்ன என்றால், முதலாம், இரண்டாம் கட்டங்களை நிறைவு செய்யாமல் நாலாம் கட்டத்திற்கு ஏன் செல்கிறீர்கள் எனக் கேட்டாராம். இன்று இருக்கும் புதிய அரசிடமும் அவர்கள் கேட்டிருந்தார்கள்.

ஆகவே அங்கே சென்ற எங்கள் எல்லோரிடமும் கேள்வி இருக்கும். தென்னாபிரிக்காவில் சென்று என்னத்தை சாதிக்கப் போகின்றோம் என்று. எதையும் சாதிப்போம் என்று சொல்லவில்லை. ஆனால் நாங்கள் மனதில் என்னத்தை வைத்திருக்கின்றோம். என்னத்தை சர்வதேசத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். இந்த அடிப்படையில் பிரச்சினைக்கான தீர்வை அடையலாம். இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை ஒன்று உருவானால் அதை கையாளலாம் என்பதை. எங்கள் மக்கள் நினைப்பதை நாம் நினைப்பதை சர்வதேசத்திற்கு சொல்லவேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது. ஒத்த கருத்தாக தாயகத்தில் இருக்கும் அமைப்புக்களும் புலத்தில் இருக்கும் அமைப்புக்களும் தமது நோக்கம் என்ன சிந்தனை என்ன முதல் கட்டமாக சர்வதேசம் என்னத்தை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

எனவே, இலங்கைப் பிரச்சினையை தென்னாபிரிக்கா கையில் எடுக்குமாக இருந்தால், எந்த வகையில் செயல்பட வேண்டும் என்பதைக் கூறுவதற்காகத்தான் சென்றிருந்தோம். அதைச் சரியாக செய்திருக்கிறோம் என்றுதான் நினைக்கின்றோம். விமர்சனங்கள் இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரையில் எதையும் கூறாமல் இருப்போமாக இருந்தால் மற்றவர்கள் தாம் நினைத்ததை திணிக்க முற்படுவார்கள். திணிப்பை தவிர்க்க வேண்டுமாயின் நாங்கள் என்னத்தை நினைக்கின்றோம் என்பதை வலுவாக முன்வைக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் கார்டியனைப் பார்க்கும் போது ஐரோப்பிய ஒன்றியம் இதே விடயத்தை சிறீலங்கா அரசிடம் கூறி இருக்கின்றது. சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். நல்லிணக்கத்தை முதலில் நீங்கள் காட்ட வேண்டும். என்பதை அவர்கள் சிறீலங்கா அரசிடம் கூறியிருக்கிறார்கள்.

இது தற்செயலாக வந்ததா என்பது தெரியாது. இன்று வந்த தமிழ் கார்டியனில் நாம் அங்கு கூறிய அத்தனை விடயங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசிடம் கூறி இருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் எமது எண்ணப்பாட்டை சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துச் செல்லவேண்டிய கடமை இருக்கிறது. அதற்கு உதவுவதற்காக விடுதலைப் போராட்டத்தில் அனுபவம் உள்ள தென்னாபிரிக்கா எம்முடன் இருந்து கதைக்க விரும்புகின்றார்கள். அவர்களின் கூற்றின்படி யாரையும் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முடியாது. பேச்சுவார்த்தை என்று வரும்போது இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த மூன்றில் ஒரு பகுதி தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். இடம்பெயர்ந்து முகாங்களில் இருக்கும் அவர்களை விட்டுவிட்டு எந்த சமாதானத்தையும் உருவாக்க முடியாது. அனைவரையும் சேர்த்துக்கொண்டுதான் சமாதானத்தை உருவாக்கலாம் என்பதை இவர்கள் வலியுறுத்தி இருந்தார்கள்.

அதேநேரம் தமது கடந்தகால அனுபவத்தையும் சொல்லி இருந்தார்கள். அதாவது ஆபிரிக்க தேசியக் கொங்கிரஸ் இடம்பெயர்ந்து வெளிநாட்டில் இருந்தபோது பேச்சுவார்த்தை என்று வரும்போது, ஆபிரிக்க கொங்கிரஸ் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கிய பின்னரே தென்னாபிரிக்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு இன்று நாங்கள் என்னத்தை எதிர்பார்க்கின்றோம் என்பதை கேட்டு அறிந்துள்ளார்கள்.

கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆபிரிக்க கொங்கிரசைச் சார்ந்த தமிழீத்தை சேர்ந்தவர், முக்கிய சட்டவாளராக இருந்தவர் ஆரம்பத்தில் அவர் கூறும்போது, ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை எமக்கு கூறியவர், அன்று இரவு நடந்த கூட்டத் தொடரில் அவரது பேச்சின் போக்கு மாறி இருந்தது. ஆரம்பத்தில் அவர் எதிர்பார்த்தது இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கிறது சமாதானத்தின் சமிக்ஞைகள் காட்டப்படுகின்றன. இதைப் புலம்பெயர் மக்கள், தாயகத்தில் இருக்கும் மக்கள் பயன்படுத்தவேண்டும் என அவர் எதிர்பார்த்திருந்தார்.

தாயகத்திலிருந்து வந்த மக்கள், புலம்பெயர் அமைப்புக்கள், அதேவேளை முள்ளிவாய்க்காலில் இருந்து வந்த வைத்திய கலாநிதி வரதராஜனின் பேச்சு முற்று முழுதாக அவரின் சிந்தனையை மாற்றி இருந்தது. ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்தவேண்டும். உலக நாடுகளிடையே உலக மக்களிடையே மாற்று சிந்தனைகளை நாம்தான் கொண்டுவரவேண்டும். அதைத்தான் நாம் பரகுவே நாட்டிலும் செய்திருந்தோம். அதைத் தொடர்ந்து பல்சிக் நாடுகளிலும் அதைச் செய்திருந்தோம். சர்வதேச இராஜதந்திரிகளிடம் புதிய சித்தனைகள் உருவாக எமக்கு ஏற்பட்டதை நாமே சொல்லி நாமும் நல்லிணக்கத்தையே விரும்புகின்றோம். நல்லிணக்கத்தை பாதிக்கப்பட்ட நாம் அல்ல முன்வைப்பது அரசுதான் அதற்குரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக சிறைக்கைதிகள் சித்திரவதைக்கு உட்ப டுத்தப்படுகின்றனர். சிறைக் கைதிகளை விடுதலைசெய் கின்றோம் என்று காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான ஒரு சூழல் இருக்கும்போது நாங்கள் பல அமைப்புக்களாக பல சிந்தனையில் இருந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளை ஒருமித்த கருத்தில் இருப்பதே எமது விடுதலையை விரைவாக்கும் என்பதே எமது கருத்து.

பேச்சுக்கான பேச்சு எப்போது இடம்பெற இருக்கின்றது?

பேச்சுக்கான பேச்சுதான் நடைபெற்றது. முதலில் பிரித்தானி
யாவிலும், அதன் தொடரச்சியாக தென்னாபிரிக்காவிலும் நடைபெற்றது. அதாவது எம் கோரிக்கைகளாக ஏழு விடயங்களை குறிப்பிட்டோம். நாம் தென்னாபிரிக்காவிடம் தெரிவித்தோம் எமது எதிர்பார்ப்பு என்ன என்பதை சர்வதேச நாடுகளுக்கும், இராஜதந்திரிகளுக்கும் தெரிவிக்குமாறு. அதை சிறீலங்கா அரசிடமும் தெரியப்படுத்த சொன்னோம். அதன் பின்னர் என்ன கருத்து வருகின்றது என்பதை கொண்டே எமது அடுத்த நகர்வுகள் அமையும்.

உங்களின் பயணத்தின் நோக்கம் எந்த வகையில் எட்டப்பட்டுள்ளது?
நாம் வெற்றி அடைந்து விட்டோம் என்று சொல்ல முடியாது. ஆனால் எமது கருத்து ஒருமித்து இருந்தது என்பதே முக்கிய விடயம். 17 அமைப்புக்கள் இந்த ஏழு விடயங்களில் ஒருமித்து ஒன்றிணைந்திருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதில் பங்குபற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது அங்கு இருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும் தமது போக்கில் சென்று புலம்பெயர் தமிழரிடையே பிரிவினையை உருவாக்கி வெற்றி பெறலாம் என்பதை சிந்திக்க்கூடாது. இன்று 17 அமைப்புக்கள் ஒன்றாக இருக்கும் போது ஒதுக்கப்பட்டவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும் தான். ஆனால், தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்களும் இதற்குள் வரவேண்டும். அவர்கள் வராவிட்டால் அங்குள்ள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலக தமிழர் பேரவையும் செல்லும் பாதை வேறு நல்லிணக்கம் என்று சொல்லி எல்லாவற்றையும் விட்டு செல்ல முடியாது. அங்கு கலந்துகொண்ட முக்கிய தலைவர் ஒருவர் எமக்கு தெரிவித்தார், நீங்கள் உங்கள் குறிக்கோளை விட்டுவிடாதீர்கள். உங்கள் குறிக்கோளை வைத்துக் கொண்டே தொடர்ந்து போராடுங்கள். இன்று ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணை முற்றுமுழுதானது அல்ல என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார். அது பிரேரணை அல்ல எனத் தெரிவித்த அவர், இதை உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும் என்றார். ஐ.நாவில் இலங்கைப் பிரச்சினையைக் கொண்டுவர தாம் பல பிரயத்தனங்களை செய்ததாகவும், இப்பிரேரணை வருவதைத் தடுப்பதற்கு பல நாடுகள் முயற்சித்ததையும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர் அமைப்புக்களினதும், மனித உரிமைகள் அமைப்புகளின் முயற்சியாலேயே ஐ.நாவில் இலங்கைப் பிரச்சினை கொண்டுவரப்பட்டதாகவும் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது எமது கடமை என்றும் குறிப்பிட்டார்.