தமிழ் மக்கள் பேரவை நண்பனா, விரோதியா?

வியாழன் சனவரி 07, 2016

ஈழமுரசிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வழங்கிய நேர்காணல்.

சந்திப்பு
‘தாயகத்தில் இருந்து’ இளந்திரையன்

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிக விருப்பு வாக்குகளில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக எவ்வ கையான நிலைப்பாட்டினை கொண்டுள்ளீர்கள்?

தமிழ் மக்களுடைய தேசிய விடுதலை போராட்டத்தில் அவர்கள் பல்வேறுவகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். கடந்த 7 தசாப்த காலங்களாக தமிழர்கள் சந்தித்த பிரச்சினைகளும், அனுபவங்களும், வலிகளும் எண்ணிலடங்காதவை. அந்த வகையில் தற்போதும் கூட கடந்த 6 ஆண்டுகளாக தமிழர்கள் தமக்கான தீர்வுக்காக ஆணையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றினை நாங்கள் பார்க்கின்ற போழுது தமிழர்களை உரிய முறையில் வழிநடத்தி தமிழர்களுக்கு ஓர் தீர்வினை தரும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போழுது உள்ள புதிய அரசாங்கத்திடம் இருந்தும் தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் உள்ளது. அவ்வாறு ஒரு தீர்வு எட்டப்பட்டால் வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தீர்வாக அது அமையுமா? சமஸ்டி அடிப்படையில் அந்த தீர்வு வருமா? தமிழ் மக்களுடைய இறைமை அடிப்படையில் அந்த தீர்வு அமையுமா? காவல்துறை, காணி, நிதி அதிகாரம் கொண்ட ஒரு தீர்வை தமிழர்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமா என்ற சந்தேகமும் தமிழர்களிடத்தில் மிகுந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழர்களுடைய தேசிய விடுதலையினை வழிநடத்திச் செல்லுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதாக சிலர் விமர்சனங்களை முன்வைத்தாலும் கூட, ஒரு ஜனநாய அரசியல் நீரோட்டத்தில் கட்சி செய்ய வேண்டிய காரியங்களை மிக நிதானமாகவும், சில அமைதியான முறையிலும்தான் அவற்றை கையாள முடியும் என்ற உண்மைக்கு அமைய சர்வதேச நாடுகளுடைய பின்புலங்கள் அல்லது அவற்றின் செயற்பாடுகளோடுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பயணத்தை கொண்டு செல்லுகின்றது.

இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை என்பது நாங்கள் வரக்கூடாத ஒரு விடயமாக அல்லது ஒரு தொடக்கூடாத விடயமாக பார்க்கவில்லை. தமிழ் மக்களின் சந்தேகங்களை தீர்ப்பதிலும், தீர்வுக்கான அழுத்தத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான வகையில் வழங்குவதற்கும் மக்களிடம் இருந்து இவ்வாறான அழுத்தக் குழுக்கள் அல்லது ஜனநாயக ரீதியான அமைப்புக்கள் உருவாகுவது இயல்பானதும், தேவையானதும் கூட. எனவே தமிழ் மக்கள் பேரவையை நிராகரிக்கவோ அல்லது அதனைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டிய அவசியங்கள் இல்லை.

யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் போரவையானது சிவில் சமூக ஆர்வலர்களை, சமூகம் சார்ந்த அமைப்பின்களின் தலைவர்களை மட்டும் மையப்படுத்தியதாக அது தோன்றியிருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்கான செயற்பாடாக யாரும் கருதியிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு ஈ.பி.ஆர்.எல்.எவ், புளோட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளுக்கு மட்டும் இரகசியமான முறையிலே அறிவித்தல்கள் வழங்கப்பட்டு மிக மிக இரகசியமான முறையில் இந்த கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, தமிழரசு கட்சி புறம்தள்ளப்பட்ட நிலை என்பது தமிழ் மக்களிடத்தில் பலமான சந்தேகத்தினை கொடுத்துள்ளது.

அவ்வாறான சந்தேகங்களுக்கு நியாயமான காரணங்களும் உண்டு. தமிழ் மக்களிடம் மிக பலமான சக்தியாக, தமிழர்களிடம் கூடுதலான அங்கத்தவர்களை கொண்ட பாரம்பரிய கட்சியாக இருக்கின்ற இலங்கை தமிழரசு கட்சியை புறம்தள்ளியமை என்பது அவர்களைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிரான அமைப்பா என்பதற்கான கேள்வியை பலரிடம் எழுப்பியிருக்கின்றது. இவ்வாறான கேள்வி எழுவது நியாயமானது. இந்த இடத்தில் நான் ஒன்றை தெளிவாக பார்க்கின்றேன், தமிழ் மக்கள் பேரவை ஒரு நியாயமான வெளிப்படைத்தன்மையான நடப்பதாக இருந்தால் எல்லோரையும் அழைத்து எல்லோரையும் சேர்த்து தீர்வுத்திட்டத்தினை தயாரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் கூடுதலாக இருந்தது. அல்லது சிவில் சமூகங்கள் மற்றும் பல்வேறு பட்ட தமிழர்களின் அமைப்புக்களில் இருந்த பிரதிநிதிகளை முன்வைத்து ஒரு தீர்வுத்திட்டத்தினை தயாரித்து அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினை கொடுத்து ஒரு அழுத்தத்தினை பிரயோகிக்கின்ற அமைப்பாக இது இருந்திருந்தால் கூட பிரிவினைக்கான அமைப்பாக மக்கள் பார்க்க மாட்டார்கள்.

ஆனால் இப்பொழுது இவ்வமைப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்கான அல்லது காலம் கனிந்து வருகின்ற பொழுது, தீர்வு நோக்கிய பயணத்தில் பேச்சுக்கள் எழுகின்ற பொழுது அதனை சிதைப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பாக பல்வேறு மட்டங்களிள் இவ்வமைப்பு நோக்கப்படுகின்றது. தமிழர்கள் இப்போது ஒற்றுமையைத்தான் விரும்புகின்றார்கள். தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை பொறுத்திருந்து நாங்கள் அவதானிக்கின்றோம். தொடர்ந்து அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை பார்ப்போம்.

கேள்வி: தமிழ் மக்கள் பேரவையை புலம்பெயர் தமிழர்கள், அமைப்புக்கள் எவ்வாறு பார்க்க வேண்டும்?

புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமிழர்கள் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் பல்வேறுபட்ட எண்ண அலைகளைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எங்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தின் பாதையிலே அவர்களுடைய பங்கு மிக காத்திரமானது. தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெறுவதற்கும், ஒரு புள்ளியை சரியான முறையில் அடைவதற்கும் கூட புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு வகையிலே உதவியிருக்கின்றார்கள். எனவே தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக புலம்பெயர் தமிழர்களும், அங்குள்ள அமைப்புக்களும் எவ்வாறு நடக்க வேண்டும், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் அவர்களுக்கு புத்தி கூறுவதாக அமைய முடியாது.

இந்த விடயத்தில் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பலமான தேசிய விடுதலை இயக்கம் அழிந்து போகாமல் உடைந்து போகாமல் ஒற்றுமையை உருவாக்கி அந்த ஒற்றுமையின் பலத்தின் வழியிலே தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் புலம்பெயர் தமிழர்கள் பேச வேண்டியவர்கள்.

இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள எங்களுடைய உறவுகள், ஈழத்தில் இருக்கின்ற முஸ்லீம், மலையக உறவுகளுடைய தேவைகள் கூட தீர்வு விடயத்தில் பலமாக உள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆலோசனை செல்வது அல்ல எங்கள் நோக்கம். எல்லோரும் இணைந்து துன்பப்பட்டுக் கொண்டு அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் எங்களுடைய இனத்தை காப்பாற்றுவதற்கான பயணத்திலே நாங்கள் எல்லோரும் ஒத்த மனங்களோடு, எந்த தேசிய இலக்கினை நாங்கள் முன்னிறுத்தி பயணித்தோமோ அந்த தேசிய இலக்கை நோக்கிய பயணத்தில் செல்வதே பொருத்தமானதாக இருக்கும்.

கேள்வி: தமிழ் மக்கள் பேரவையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்தலமை வகிப்பது தொடர்பாக என்ன விடயத்தை எடுத்துக் கொள்கின்றது?

முதலமைச்சர் ஒரு பொதுவான மனிதனாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் கூட, தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒரு வேட்பாளராகவே தமிழ் மக்களின் அபிமானங்களைப் பெற்றவர். அவர் மீது உள்ள ஆழமான நேசிப்பில் இப்பொழுதும் எனக்கு எந்த கலங்கமும் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகள் அல்லாத பொது அமைப்புக்களுக்கு அவர் தலமை தாங்கி அதனுVடாக ஒரு பலமான சிவில் அமைப்பின் இணைத்தலமையான தன்னை காட்சியிருந்தால் அது இந்த காலத்திற்கு பொருத்தமானதாக இருந்திருக்கும் என்று நான் கருதுகின்றேன். இதனை முதலமைச்சருக்கு நான் நேரடியாகவும் குறிப்பிட்டிருக்கின்றேன். 

தெரிந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை மட்டும் வைத்துக் கொண்டு அதற்கு தலமை தாங்குவது என்பது பிரிவினையின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது.  ஏன் என்றால் தமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்ற சிலர் தாங்கள் தனிக் கட்சி ஒன்றினை உருவாக்குவோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றார்கள். தனியே சிவில் அமைப்புக்களை கொண்ட பேரவையாக இருந்து அதனை முதலமைச்சர் தலமைதாங்கி கொண்டு நடத்தியிருந்தால், இப்போது உள்ளதையும் பார்க்க கனதியான அமைப்பாக அது இருந்திருக்கும்.

கேள்வி: தமிழ் மக்கள் பேரவையினால் அமைக்கப்படும் தீர்வுத்திட்டம் பயனுள்ளதாக அமையுமா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே 2009 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டுவரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் 19 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. ஆனால் இப் பேச்சுவார்த்தையில் எந்த பிரியோசனங்களும் ஏற்படவில்லை. இதன் பின்னர்தான் நாட்லாட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியிருந்தது.  இந்த நிலையில தமிழர்கள் மாற்றத்திற்காக வாக்களித்திருந்தார்கள். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க, ரணில் விக்கிரமசிங்க, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிங்களத் தலைவர்களுடைய கருத்துக்களிக் கூட தமிழர்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது.  இதற்கான காரணங்களும் இருக்கின்றது.

ஜ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் இலங்கையினைப் பொறுத்தவரையில் பெரும் அழுத்தமாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு அழுத்தத்திற்குள் இருக்கின்ற இலங்கை, தன்னுடைய செயற்பாடுகளுக்கு ஒரு தீர்வை வழங்குவதன் மூலம் சில விடயங்களில் இருந்து தான் விடுபடலாம் என்ற எண்ணங்களை இலங்கை கொண்டிருக்கின்றது.

அவ்வாறாயின் அது ஒரு பலமான செயற்பாட்டிற்கு வரவேண்டுமானால் அந்த பலத்தினைக் கொண்டுவர வேண்டுமானால் தமிழர்கள் இப்பொழுது மிக நிதானமாக அமெரிக்கா, இந்திய போன்ற வல்லரசுகளின் ஆலோசனைகளோடும், ஜரோப்பிய நாடுகளுடைய உதவிகளோடும் நாங்கள் மெல்ல மெல்ல அன்னப் பயணம் நோக்கி பயணிக்கின்ற பொழுது, இவ்வாறான பிளவுகளோ பிரிவினைகளோ எங்களிடம் வந்தால் அல்லது ஒருவர் மீது ஒருவர் குறை கண்டுபிடித்து தீர்வினை முன்வைக்க முனைவது ஆராக்கியமானதாக அமையாது.

தமிழ் மக்கள் பேரவை 3 மாதங்களில் முடிவு செய்யப்போகும் தீர்வினை யாருக்கு முன்வைக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்திற்கா? தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வு திட்டமா? இல்லை தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கும் தீர்வுத்திட்டமா உலக அரங்கில் பார்க்கப்படும்.  எனவேதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும், தமிழ் மக்கள் பேரவையாக இருந்தாலும், புலம்பெயர் அமைப்புக்களாக இருந்தாலும் அனைவரும் ஒரு புள்ளியில் சந்தித்து, பொதுவான வேலைத்திட்டத்திற்குள் நிரந்தரமான தீர்வை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

கேள்வி: தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குமா?

தமிழ் மக்கள் பேரவை தீர்வுத்திட்ட தொடர்பான முன்மொழிவுகளை அல்லது கருத்துக்களை தயாரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கையளித்தால் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக வரவேற்கும்.  ஏன் என்றால் தமிழ் மக்கள் போரவை போன்ற அமைப்புக்கள் இருக்கத்தான் வேண்டும். உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் அமுக்கக் குழுக்கள் இருந்துதான் வருகின்றார்கள். இலங்கையில் கூட பொதுபலசேனா மற்றும் பெளத்தமத அமைப்புக்கள் முக்கியம் வாய்ந்த அமுக்கக் குழுக்களாக இருக்கின்றன.

ஜே.ஆர்.ஜயவர்த்தன, பண்டாரநாயக்கவின் காலங்களிலும், இப்பொழுது மகிந்த ராஜபக்சவின் இவ்வாறான அமுக்க குழுக்கள் இருந்தன. ஆகவே அமுக்க குழுக்கள் போன்று இருக்கின்ற தமிழ் மக்கள் பேரவை சில செய்திகளை எழுத்து மூலமாக அவர்கள் உரிய மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கலாம். தீர்வை முன்வைக்கலாம். இவை நல்ல விடயம்.

இவ்வாறான நல்ல விடயங்களை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரிக்கின்ற தீர்வு திட்டமும், தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கின்ற தீர்வுத்திட்டமும் நிச்சையமாக ஒரே புள்ளியில் சந்திக்கும். அவ்வாறான தீர்வுத்திடம்ம் நிச்சையமாக வெற்றியாக அமையும்.

நன்றி: ஈழமுரசு