தமிழ் மக்கள் பேரவை நம்பிக்கையின் துளிர்

வியாழன் டிசம்பர் 24, 2015

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த வாரம் உருவான தமிழ் மக்கள் பேரவை சிங்களப் பேரினவாதிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களை ஏமாற்றி தங்கள் சுய இலாபங்களை அடைந்த தமிழ்க் கட்சிகளுக்கும் அவர்களின் தலைமைகளுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. சமூக வலைத் தளங்களிலும், அவர்கள் சார்பான இணையத் தளங்கள் மற்றும் ஊடகங்களிலும் எழுதப்பட்டு வருகின்ற தரக் குறைவான வார்த்தைப் பிரயோககங்களே அவர்களின் அச்சத்தை அறிந்துகொள்ளப் போதுமானதாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனையை அரசியல் ரீதியாக நகர்த்திச் செல்வதற்காக இந்திய இராணுவத்துடன் கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த 1989ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்திருந்தார்கள். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரில் தோற்றம்பெற்ற அக்கட்சி, தேர்தல்களில் பங்கேற்காதபோதும், சிறீலங்காவின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அது பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அரசியல் வழியில் சிறீலங்காவிடம் இருந்து எதனையும் பெற்றுவிடமுடியாது என்ற யதார்த்த நிலையில் அக்கட்சியின் தேவையும் இல்லாமல் போனதால், விடுதலைப் புலிகளே அக்கட்சியின் செயற்பாடுகளைக் கைவிட்டுவிட்டனர். 2012 இல் ஆவணங்கள் எவையும் சமர்க்கப்படவில்லை என்று கூறி சிறீலங்கா தேர்தல் ஆணையகமும் கட்சியின் பதிவை இரத்துசெய்து விட்டது என்பது வேறுகதை.

2002ம் ஆண்டு சர்வதேச நாடுகளின் மத்தியத்துவத்துடன் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களின் அபிலாசைகளையும், தமிழ் மக்களின் மக்களாட்சியின் மீதான நம்பிக்கையையும் உலக சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலான அரசியல் கட்சி ஒன்றின் தேவை எழுந்தபோது உதிரிகளாக இருந்த சில தமிழ்க் கட்சிகளையும், முன்னாள் போராட்ட இயக்கங்களையும் ஓரணியில் கொண்டுவந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள்.

விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இப்போது சம்பந்தர் பொய் உரைத்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்பது வெள்ளிடைமலை. அதனால்தான் கூட்டமைப்பின் சார்பில் தேர்தல்களில் நின்றவர்களையயல்லாம் மக்கள் தங்கள் வாக்குகளால் பெரும் வெற்றிபெறவும் வைத்தார்கள். இப்போதும் அதற்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களின் தேவைகளைப் பிரதிபலிப்பவர்களாகவும் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபலிப்பவர்களாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் செயற்பட்டனர். ஆனால், 2009 மே பாரிய இன அழிப்புப் போரின் முடிவிற்குப் பின்னர் சிங்கள பெளத்த பேரினவாதத்தை திருப்திப்படுத்துபவர்களாகவும், வல்லாதிக்க சக்திகளின் விருப்பங்களுக்கு தலையாட்டும் பொம்மைகளாகவும் கூட்டமைப்பின் தலைமையும் அதிலிருந்த சிலரும் மாறத் தொடங்கியதன் பின்னர் தேசியத்தை நேசித்த சக்திகள் ஒவ்வொன்றாக கூட்டமைப்பில் இருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லது அவ்வாறானதொரு நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கூட்டமைப்பின் தலைமைகள் தங்களது எண்ணம்போல் செயற்படத்தொடங்கினர்.  

2013ம் ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தல் வந்தபோது சிறீலங்காவின் முன்னாள் நீதிபதிகளில் ஒருவரான சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை கொண்டுவந்து நிறுத்தினார்கள். தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் நடுநிலையாக செயற்படக்கூடியவர் என்பதால் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவரைத் தேர்வு செய்ததற்கு விளக்கமும் அளித்திருந்தது. ஆரம்பத்தில் கூட்டமைப்பின் எண்ணம் போலவே செயற்பட்ட இவர், சில மாதங்களிலேயே உண்மை நிலையைப் புரிந்துகொண்டு தன்னைச் சுதாகரித்துக்கொண்டார்.

இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பிய மக்களினதும், காணாமல்போனவர்களின் உறவுகளினதும் கண்ணீர்க் கதைகளையும் கேட்ட இவர், இன அழிப்புக்குள் தமிழ்ச் சமூகம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டு அழிகின்றது என்ற உண்மையை நேரடியாகவே அறிந்துகொண்டார். ஒரு நீதிபதியாக இருந்த இவர், நிச்சயமாக கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும், தமிழ் மக்களின் நிலையையும் நீதித் தராசில் வைத்து எடைபோட்டு புரிந்துகொண்டிருப்பார்.

கூட்டமைப்பில் இருந்தவர்களின் போலி முகத்தைக் கண்டுகொண்டிருப்பார். சிங்கள ஆட்சியாளர்கள் எவர் வந்தாலும் தமிழ் மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்காது என்ற பேருண்மையை புரிந்துகொண்டதால்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறீசேனவிற்கு ஆதரவாக நின்றபோதும் அக்கட்சியில் இருந்த இவர் அதற்கு எதிராக குரலெழுப்பி, கூட்டமைப்பின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை அல்ல அதற்கு ஆதாரம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அவரின் எடுபிடிகளும் நாடு நடாகச் சென்று பிரச்சாரம் செய்தபோது, வடமாகாண சபையில் நடந்தது இனப்படுகொலையே என்று துணிந்து தீர்மானம் நிறைவேற்றினார். முதலமைச்சரின் நடவடிக்கைகள் தங்கள் இருப்பிற்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்று அஞ்சிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அவரை கட்சியில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஆனால், அது ‘ஆப்பை இழுத்த குரங்கின் கதையாக’ மாறிவிடுமோ என்ற அச்சமே கூட்டமைப்பின் தலைமை இதுவரை அவரை கட்சியில் இருந்து விலக்காகததற்குக் காரணம். ஒரு கட்டத்தில் அவர் கட்சியில் இருந்து விலகி வேறொரு கட்சியில் சேர்ந்துவிட்டால் தமிழ் மக்களும் அவர் பின்னே சென்றுவிடுவாரோ என்ற அச்சம் கூட கூட்டமைப்பினர் மத்தியில் எழுந்திருந்தது.

இந்நிலையில்தான் அண்மையில் சிறீலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நேரில் சென்று சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். தமிழக மீனவர் பிரச்சனை குறித்த சந்திப்பு இதுவெனக் கூறப்பட்டபோதும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலகி இன்னொரு கட்சியுடன் இணைவதைத் தடுப்பதே முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. கட்சி தாவல் எதனையும் செய்யவேண்டாம் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அவர்கள் நேரில் கோரியிருக்கின்றனர். இது கோரிக்கை என கூறப்படுகின்றபோதும், ஓர்  அச்சுறுத்தலாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது. தங்கள் எண்ணம்போல் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்படுவதை இந்தியாவே விரும்பவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

எனினும், கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வைப் பெற்றுத்தரவோ அல்லது செயற்பாட்டை முன்னெடுக்கவோ முடியாது என்ற நிலையில்தான், தமிழ் மக்களின் உரிமை, அபிலாசைகள் மற்றும் நலன்களை வலியுறுத்தும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில், மதத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளை இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதில் கூட்டமைப்பின் தலைமையினால் தற்போது புறமொதுக்கப்பட்டவர்களும், புறமொதுக்கப்பட்டு வருபவர்களும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் - போருக்குப் பிந்திய தமிழ் சமூகத்தை கட்டியயழுப்புவதற்கும் ‡ சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஓர் உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பே இந்தப் பேரவை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தப் பேரவையின் தோற்றம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

யாரை நம்புவது என்று தமிழ் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஒரு நம்பிக்கையின் துளிராக இந்தத் தமிழ் மக்கள் பேரவை பிறந்திருக்கின்றது. இந்தப் பேரவையின் வருகையை நாம் வரவேற்கும் அதேவேளை, இந்தப் பேரவையின் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைத் தேடவும் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் செயற்பட்டு வரும் தமிழ் மக்கள் பேரவைகள் மற்றும் தேசியக் கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு