தானியங்கி சக்கர நாற்காலியை உருவாக்கி தமிழக மாணவர்கள் அசத்தல்!

வியாழன் ஜூலை 05, 2018

தமிழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் இந்தியாவின் முதல் தானியங்கி சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

கோயம்புத்தூரை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் இணைந்து இந்தியாவின் முதல் தானியங்கி சக்கர நாற்காலி (Wheelchair) உருவாக்கியுள்ளனர். இந்த தானியங்கி சக்கர நாற்காலி பயனரை ஒருஇடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிகவும் பாதுகாப்பாக கொண்டு செல்லும். போக வேண்டிய இடத்துக்கு வீல்சேர் தானாக செல்லும் என்பதோடு, வழியில் இருக்கும் இடர்பாடுகளை தவிர்க்கும் திறன் கொண்டிருக்கிறது. 

செல்ஃப்-இ (Self-E) என அழைக்கப்படும் இந்த வீல்சேர் ரோபோடிக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Robotic Operating System - ROS) பயன்படுத்துகிறது. இந்த இயங்குதளம் கொண்டு தானியங்கி வீல்சேர் தானாக செல்கிறது. இது அதன் அருகில் உள்ள இடங்களில் பயணிக்க ஏதுவாக வரைபடம் ஒன்றை உருவாக்கி, அதனை ஸ்மார்ட்போன் செயலியில் பிரதிபலிக்கிறது.

வழியில் நிலையான மற்றும் மாறக்கூடிய இடர்பாடுகளை லேசர் சென்சார் மூலம் இயங்குதளம் தானாக கண்டறியும். பின் ஸ்மார்ட்போனில் உள்ள வரைபடத்தில் பயனர் எங்கு வேண்டுமானாலும் தொட முடியும். பயனர் தொடும் இடத்திற்கு வீல்சேர் பாதுகாப்பாக செல்லும். 

முற்றிலும் பயனர் உதவியின்றி தானாக செல்லும் இதே போன்ற வீல்சேர் தற்சமயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாடல்கலின் விலை அதிகமாக இருக்கும் நிலையில், மாணவர்கள் உருவாக்கியிருக்கும் வீல்சேர் ப்ரோடோடைப் விலை ரூ.1 லட்சத்துக்கும் குறைவு தான். 

சித்னா ரவி தேஜா, சரத் ஸ்ரீகாந்த் மற்றும் அகில் ராஜ் என செல்ஃப்-இ வீல்சேரை உருவாக்கிய மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமிர்தா விஷ்வா வித்யபீடம் மனிதாபமான தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஜூனியர் ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

“வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணையாமல் பல்கலைக்கழக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட முதல் தானியங்கி சக்கர நாற்காலி என்ற பெருமையை செல்ஃப்-இ பெற்றிருக்கிறது. தற்சமயம் இந்த வீல்சேர் மருத்துவமனைகள், விமான நிலையங்கள் என பல்வேறு சூழல்களில் சோதனை செய்யப்பட வேண்டும்,” என அமிர்தா விஷ்வா வித்யபீடம் மனிதாபமான தொழில்நுட்ப ஆய்வகத்தின் உதவி பேராசிரியர் ராஜேஷ் கண்ணன் மேகலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

“மாணவர்களின் தற்போதைய உருவாக்கம் வெற்றிகரமான ப்ரோடோடைப் என்ற நிலையில் அமிர்தா விஷ்வ வித்யபீடம் தொழில்நுட்ப வியாபார இன்குபேட்டர் மூலம் இதனை வணிக மயமாக்க இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

செல்ஃப் இ தானியங்கி வீல்சேரை மருத்துவமனைகளில் நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ, விமான நிலையம் அல்லது வீட்டில் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போனினை பயன்படுத்த தெரிந்த அனைவராலும் இந்த வீல்சேரை பயன்படுத்த முடியும். இதனால் வழக்கமான வீல்சேர்களில் ஜாய்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.

செல்ஃப் இ தானியங்கி வீல்சேர் அதன் அருகில் உள்ள மக்கள், சுவர்கள், தூண்கள், மேசை, நாற்காலி போன்ற இடர்பாடுகளை தானாக கண்டறிந்து கொள்ளும். இதற்கு லிடார் (LiDAR) எனும் லேசர் சென்சாரை இந்த வீல்சேர் பயன்படுத்துகிறது. இதன் மூலம் உருவாக்கப்படும் வரைபடம் லானாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு அனுப்பப்படும். இதற்கென பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது.