தாமரைத் தடாகத்துக்குள் விழுந்து சிறுமி பலி!

Friday August 10, 2018

மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில், சிறுமியொருவர் (வயது 7) விழுந்து, பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று, ஏறாவூர் காவல் துறையினர்  தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (9) மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த அனுரஞ்சித் அனுசிரா (வயது 7) என்ற சிறுமியே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். மயிலம்பாவெளி -காமாட்சி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியில், தாமரைத் தடாகம் அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  தடாகம் அமைக்கப்பட்டு வரும் பகுதியில், நேற்று (9) மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுமியே, இவ்வாறு தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்றுத் தெரியவருகிறது.

தடாகத்தினுள் சிறுமியின் உடல் மிதப்பதைக் கண்ட அயலவர்கள், அவரை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும், சிறுமி ஏற்கெனவே, உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில், ஏறாவூர்  காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.