தாயகக் கனவு அழியாது தமிழீழம் சாத்தியமே

Friday June 01, 2018

தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் வெற்றியை இராணுவ வெற்றி விழாவாக கடந்த எட்டு ஆண்டுகளாகக் கொண்டாடி வந்த சிங்களப் பேரினவாத அரசு, இந்த ஆண்டு அவ்வாறான வெற்றி விழாவை கொண்டாடவில்லை. கொண்டாடவில்லை என்பதை விட அவர்களால் கொண்டாட முடியவில்லை என்பதுதான் சாலப்பொருத்தமாக இருக்கும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு இடம்பெற்ற மே மாதத்தை, பூமிப் பந்தெங்கும் வாழும் தமிழர்கள் வலி நிறைந்த மாதமாக நினைவுகொள்கின்றனர். இவ்வேளையில் சிங்களப் பேரினவாதம் அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடுவது, இரு இனங்களுக்கும் இடையிலான மனக்கசப்பை மேலும் அதிகரித்துவிடும் என்று கருதிய ஐ.நா., சிறீலங்காவிடம் இராணுவ வெற்றிவிழாக் கொண்டாடுவதை நிறுத்துமாறு கொடுத்த அழுத்தம்தான் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் ‘இராணுவ வெற்றி விழா’ என்ற பெயருடன் ஒரு பெரும் கொண்டாட்டத்தை சிங்களப் பேரினவாதிகளால் நடத்தமுடியாமல் போனது.

எனினும், ‘விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த 9வது ஆண்டு நிறைவு’,  ‘தேசிய இராணுவ தின நிகழ்வு’ என்ற பெயர்களில் இராணுவத்தைக் கெளரவிக்கும் நிகழ்வுகள் பெருமெடுப்பில் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டிருக்கின்றன. கொழும்பு சிறி ஜெயவர்த்தனபுர கோட்டையில் உள்ள, படையினரின் நினைவுச் சின்னத்தில் நடந்த நிகழ்வில் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன கலந்துகொண்டு உரையாற்றியிருக்கின்றார். அவர் தனது உரையில் ‘இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளிலும் தமது பாதுகாப்பு படையினர் மீது யுத்தக் குற்றங்கள் சுமத்தப்படவில்லை என்றும் கூறியதுடன் இவ்வாறான குற்றச்சாட்டை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே கூறுகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நின்றுவிடாமல், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களின் கொள்கைகள் இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை என்றும் வெளிநாடுகளில், இன்றும் தனிநாடு பற்றிய கனவுகளைக் கொண்டுள்ள பிரிவினைவாதிகள் உள்ளனர். அவர்களின் கனவு நிறைவேற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்றும் சூளுரைத்திருக்கின்றார்.

வெளிநாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் தமிழ் மக்கள் தங்களுக்கான தமிழீழ தேசத்தை அமைக்கும் கனவுடனேயே இருக்கின்றார்கள். துப்பாக்கி முனையில் அவர்கள் உணர்வுகள் கட்டிவைக்கப்பட்டிருந்தாலும் அவ்வப்போது தங்கள் தாயகக் கனவை அவர்களும் வெளிக்காட்டியே வருகின்றார்கள். கடந்த வாரம் கூட யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் மகோற்சவத்துக்காக வீதியில் வடிவமைக்கப்பட்டிருந்த வளைவில் தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டிருந்துள்ளது. பின்னர் அதனை சிறீலங்காக் காவல்துறை ஓடோடிச்சென்று அகற்றியுள்ளது.

தமிழரின் தாயகக் கனவை அழித்து, சிங்களத்தின் ஒற்றையாட்சிக் கனவுக்காக உழைத்துவரும் சம்பந்தன், முள்ளிவாய்க்கால் நினைவில் கலந்துகொண்டு பேசும்போது, விடுதலைக் கனவுகளுடன் உயிர் நீத்தவர்களின் கனவு நனவாகும் என்று மக்கள் முன் கூறுகின்றார். ‘விடுதலைக் கனவுடன் ஆயிரமாயிரம் வேங்கைகளும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் தங்களின் உயிர்களை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆகுதியாக்கியுள்ளார்கள். அவர்களின் கனவு என்றோ ஒரு நாள் நனவாகும் என்பதை முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற  நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான தமிழர்கள் ஓரணியில் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றமை எடுத்துக் காட்டுகின்றது’ என்று தான் விரும்பாவிட்டாலும் உணர்வெழுச்சியுடன் நிற்கும் அந்த மக்கள் முன் தமிழீழக் கனவை நியாயப்படுத்தவேண்டிய சங்கடமான நிலையில் சம்பந்தனும் இருக்கின்றார்.

எனவே, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அவ்வாறான சிந்தனை இல்லை என்பதுபோலவும் வெளிநாடுகளில் மட்டும்தான் அவ்வாறான சிந்தனை இருப்பதாகவும் கூறி மைத்திரி உலகை ஏமாற்றி உண்மையை மறைக்கப்பார்க்கின்றார். சிங்களப் பேரினவாத சக்திகளும், அவர்களுடன் முண்டுகொடுத்து நிற்கும் வெளிநாட்டு சக்திகளும் ஒன்றிணைந்து தமிழீழத்திற்கான தமிழ் மக்களின் கனவு நனவாவதை தள்ளிப்போட முடியுமே தவிர, அந்தக் கனவு நனவாவதை ஒருபோதும் தடுக்கமுடியாது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை கொண்ட ஓர் இனத்தின் தாயகக் கனவை உலகின் எந்த அழிவு ஆயுதத்தைக் கொண்டும் அத்தனை இலகுவில் யாராலும் அழித்துவிட முடியாது. ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, ஆயிரம் பத்தாயிரமாகி தமிழர் படையான விடுதலைப் புலிகள் பலம்பெற்று எழுந்ததுபோன்று, நாளை புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் பலமும் நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்று அதிகரிக்கும் என்பது திண்ணம். புலம்பெயர்ந்த இந்தத் தலைமுறைத் தமிழர்களே தாங்கள் வாழும் நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளில் இத்தனை அளவிற்கு உள்நுழைந்து ஈடுபட முடிகின்ற நிலையில், அடுத்து அடுத்து வரும் தலைமுறைகள் குறித்து இங்கு குறிப்பிடத்தேவையில்லை.

அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலம்பெற்ற இனமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வளர்ந்து வருவதை சிங்களப் பேரினவாத சக்திகளால் அத்தனை இலகுவில் தடுத்து நிறுத்திவிட முடியாது. இந்த யதார்த்த நிலைமையைப் புரிந்துகொண்டதனாலேயே புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகள் இப்போது தமிழர்களின் கருத்துக்களை உள்வாங்கத் தொடங்கியுள்ளன. தமிழர்களின் நியாயத்தின் பக்கம் நிற்கத் தலைப்பட்டுள்ளன.

தங்கள் தாயக மண்ணை முற்றுமுழுதாக இழந்து நாடோடிகளாக உலகெங்கும் அலைந்தும், அழிந்தும் திரிந்தபோதும் தங்கள் தாயகக் கனவை யூத மக்கள் தொலைத்துவிடவில்லை. தலைமுறை தலைமுறையாக அந்தக் கனவைச் சுமந்தபடியே அவர்களின் தலைமுறைகள் நடந்தன. ஆயிரம் ஆண்டுகளின் பின்னர்தான் யூதர்கள் இஸ்ரேல் என்ற தங்கள் தாயகத்தை நிறுவினார்கள். தாங்கள் வாழ்ந்த நாடுகள் எங்கும் தங்கள் அரசியல், பொருளாதார பலத்தைப் பெருக்கி, அதனுVடாக அந்தந்த நாடுகளின் உதவிகளைப் பெற்றே புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்கள் தங்கள் தாயக் கனவை அடைந்தார்கள். இது கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த வரலாறு. இந்த வரலாறு தமிழர்களுக்கு ஒரு பாடம் மட்டுமல்ல, வழிகாட்டியும் கூட.

உலக வரைபடத்தில் தமிழர்களுக்கு ஒரு தாயகம் இருந்தது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் இரத்தத்தினால் வரைந்து காட்டிவிட்டார்கள். அந்தத் தாயகத்தை நிறுவ சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகரவேண்டியதே உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இப்போதுள்ள பொறுப்பு.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு