தாயக அரசியல் ஒரு பார்வை - தி.த.நிலவன்l

வெள்ளி சனவரி 01, 2016

இன்றைய தாயக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது என்பதை விட சூட்டைக்கிளப்பி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த இரு வாரங்களில் நடந்த அரசியல் மாற்றங்கள் தமிழ்மக்களின் எதிர்கால அரசியலில் இருந்த சில கேள்விகளுக்கு விடை தந்திருக்கின்ற அதே வேளை பல விடை தெரியா வினாக்களையும் வினவி விட்டு சென்றிருக்கிறன.

கடந்த வாரம் முன்அறிவித்தல் இன்றி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியத்தின் எதிர்காலம் பற்றிய ஒரு ஒளிக்கீற்றாக இருக்கும் என மக்களிடம் பாரிய எதிர்பார்ப்புடன் உதயமாகி இருக்கிறது.

இது ஒரு அரசியல் கட்சி அல்ல என்ற குரலுடன் உதயமான பேரவை இன்று தமிழ் அரசியல் தலைமைகள் என கூறப்பட்டுவருபவர்கள் துரோகிகளாகவும் நிராகரிக்கப்பட்டவர்களாகவும் உருவம் கொடுக்கப்படுகையில் தாயகத்தில் உருவாகி இருக்கும் புதிய ஊடக விபச்சார கலாச்சாரம் பேரவை மீது சேறுபூசுவதற்காவே அவர்களே சிருஸ்டித்த செய்திகளை பிரசுரித்து மக்களை பிழையாக வழிநடத்த முற்படுகின்றன.

அன்று தமிழ் தேசிய நாளிதழ் என கூறிவந்த ஊடகம், பேரவை உருவான அடுத்த நாள் “கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்க உருவானது தமிழ் மக்கள் பேரவை” என தலைப்பிடுகிறது.

இவ்வாறு ஊடக அறநெறிகளை தாண்டி மிகவும் கேவலமான செயற்பாடுகள் ஒரு பக்கம் இருக்க.

ரணில் மைத்திரி இணைந்த மென்போக்கு அரசு தமிழ் மக்களை மனதளவில் இயலாதவர்களாக்கி அவர்களால் வழங்கப்பட இருக்கும் குறைந்த பட்ச தீர்வை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஒன்றை உருவாக்க ஒரு ரகசிய நடவடிக்கை ஒன்றை தெளிவாக திட்டமிட்டு அரங்கேற்றுகிறது.

இவை எல்லாமே தமிழ் மக்களால் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிவைக்கப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தெரியாதா? அல்ல தெரிந்தும் தெரியாதது போல் இருக்க வேண்டும் என்கிற கட்டளையா? என்பது விடை தெரியா கேள்வியாய் நிற்கிறது.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க அரசியல் கட்சி அல்லாத ஒரு அமைப்பால் தமிழர்களின் ஒற்றுமை எப்படி சிதைக்கப்படும்? இந்தஅமைப்பு உருவானதால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு என்ன குடைச்சல்? மைத்திரி அரசு வழங்கவிருக்கும் தீர்வினை பாழாக்கபோகிறார்கள் என்றால் மைத்திரி அரசு வழங்கவிருக்கும் தீர்வுதான் என்ன?

பாராளுமன்ற தேர்தலின் பின் தமிழ்மக்களின் அரசியல் நிலமையானது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் ஒரு நிலமையாகவே இருந்து வருகிறது.

மகிந்தவின் வன்போக்கு அரசியல் நிலைமைகளில் தமிழர் தரப்பின் பலமானது சர்வதேச அழுத்தம் என்ற ரீதியிலும் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற வகையிலும் ஒருவித உயர்நிலையில் இருந்தது.

ஆனால் தற்போது இராணுவ நெருக்குவாரங்கள் குறைந்து அன்றாட வாழ்க்கையில் ஒப்பீட்டு ரீதியில் நெருக்கடிகள் குறைந்துள்ளபோதும் தமிழர் தரப்பின் அரசியல் உரிமை என்ற விடயத்தில் பெருத்த பலவீனமான நிலையே காணப்படுகின்றது.

இத்தகைய நிலையில் தான் பேரவையின் தோற்றத்தை பார்க்கவேண்டும். எனினும் தேர்தலில் தோற்றவர்களின் கூட்டு என்ற எதிர்தரப்பினரின் குற்றசாட்டுகளுக்கு உரியமுறையில் எதிர்கொள்ளாமை பேரவையின் குறைபாடாக உள்ளது. இது உண்மையில் பேரவையின் நோக்கங்களுக்கு ஒரு பலவீனமான நிலையே.

ஆனால் உண்மையில் குறிப்பிடத்தக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தமது பக்கம் கொண்டுள்ளது என்றும் வெளிப்படையான ஆதரவு தமிழர் தரப்பின் தற்போதைய பிரதிநிதிகள் என்றளவில் கூட்டமைப்பின் நிலையை பலவீனப்படுத்திவிடும் என்றும் அத்தகைய நிலை ஏற்படுவதை மக்கள் பேரவை விரும்பவில்லை என்றும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகள் என்றுவரும்போது அது நிச்சயமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனே நடத்தப்படவேண்டும் என்றும் அவர்களே மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்றும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

எது எப்படியிருந்தபோதும் தமிழ்மக்கள் பேரவையின் வருகையானது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட செல்நெறியில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றே பரவலான கருத்து உள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

தி.த.நிலவன்