தாய்லாந்து: நாடுகடத்தப்படும் அபாயத்தில் சுமார் 1 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!

சனி ஏப்ரல் 07, 2018

சட்டவிரோதமாக அல்லது முறையாக பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான தாய்லாந்து அரசின் காலக்கெடு இன்றோடு(ஏப்ரல் 07) முடிவடைய இருக்கின்றது. இந்த நிலையில் பதிவுச் செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாடுகடத்தப்படக்கூடும அல்லது அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளக்கூடும் என எண்ணப்படுகின்றது. 

இதுவரை மியான்மர், லாவோஸ், கம்போடியாவைச் சேர்ந்த 14 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளதாக தாய்லாந்து அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.  இதில் பதிவு செய்யத் தவறய 75,000 த்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள், இனியும் தாய்லாந்தில் வாழவோ வேலை செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. 

இந்த காலக்கெடுவிற்குள் பதிவு செய்யத் தவறிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் என கருதப்படுகின்றது. இந்த சூழல் தொடர்பாக பேசியுள்ள மியான்மர் தூதரகத்தின்(தாய்லாந்து) தொழிலாளர் நலப பொறுப்பாளர் யூ சன் மயுங் ஓ, “பதிவு செய்யத் தவறிய தொழிலாளர்களுக்கு கருணைக் காட்டும்படி தாய்லாந்திடம் கோரியிருக்கிறோம். ஆனால் தாய்லாந்து அரசு பலமுறை பதிவு செய்வதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளதால, அந்த கருணைக்கு வாய்ப்பில்லை” எனக் கருதுவதாக கூறியுள்ளார். 

தாய்லாந்து அரசு கூறும் எண்ணிக்கையை விட அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பதிவு செய்யாமல் இருக்கக்கூடும் எயிட் அலையன்ஸ் கமிட்டி, மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ள. அதாவது சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்யாமல் இருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. இவர்களே தற்போது நாடுகடத்தப்படும் கூடும் எனச் சொல்லப்படுகின்றது.

அதே சமயம், இந்த தொழிலாளர்களை அழைத்து வந்த இடைத்தரகர்கள் அல்லது கங்காணிகள் அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பதிவு செய்யாமல் ஏமாற்றவும் வாய்ப்புள்ளது. இவ்வாறாக வேலைக் கொடுக்கும் நிறுவனங்களும் செயல்படக்கூடும் எனக் கூறப்படுகின்றது. 

பதிவு செய்யத் தவறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் இந்திய ரூபாய் (50,000 Thailand Baht)  வரையிலும், நிறுவனங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்றைய நிலையில், 40 லட்சம் மியான்மர் தொழிலாளர்கள் தாய்லாந்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு, தாய்லாந்து அரசு வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையினைத் தொடங்கியது. இந்நடவடிக்கைக்கு அஞ்சி அப்போதே ஆயிரக்கணக்கான மியான்மர் தொழிலாளர்கள் தாய்லாந்தை விட்டு வெளியேறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.