திங்கட்கிழமை முதல் யாழ்.மாவட்ட செயலகம் முன்போராட்டம்!

சனி செப்டம்பர் 22, 2018

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை மறுதினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக தொடர்போராட்டங்களை எடுக்க சிவில் அமைப்புக்கள் முடிவு செய்துள்ளன.

இன்று சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அவர்கள் நடத்திய கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகம் முன்னதாக முன்னெடுக்கப்படும் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் பின்னர் தொடர்போராட்டமாக மாறலாமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு எங்கெணும் மக்கள் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியிருக்கின்றது.நேற்று யாழிலும் இன்று வவுனியாவிலும் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே திங்கள் கிழமை முதல் யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக கவனயீர்ப்பு உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை திங்கட் கிழமை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி,மார்க்சிசிய லெனினியக்கட்சி போன்றவற்றின் பிரதிநிதிகளும் பத்திரிகையாளர் சந்திப்பில் வருகை தந்து கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.