தியாகி சசிபெருமாள் குடும்பத்தினரை உடனே விடுதலை செய்ய வேண்டும்-திருமாவளவன்!

சனி செப்டம்பர் 05, 2015

நடைபெற்றுவரும் சட்டப்பேரவைத் தொடர் கூட்டத்தொடரிலேயே மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கோரி தியாகி சசிபெருமாள் அவர்களின் மகன் விவேக் உள்ளிட்ட 5 பேர் தங்கள் ஊரில் அறவழியில் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை தமிழ்நாடு அரசின் காவல்துறை கைது செய்துள்ளது.

 

மது  ஒழிப்பு அறப்போராட்டங்களை ஒடுக்க முனையும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.  கைது செய்யப்பட்ட தியாகி சசிபெருமாள் குடும்பத்தினரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

 

தியாகி சசிபெருமாள் அவர்களின் மரணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் மதுஒழிப்புக்கான போராட்டங்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்தன.  மாணவர்களும் பெண்களும் ஆங்காங்கே இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.  மது ஒழிப்பு என்பது இப்போது ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கையாக மாறியுள்ளது.  மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களது போராட்டங்களை ஒடுக்க முயல்வதும் சனநாயக அணுகுமுறை ஆகாது.  

 

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் மதுஒழிப்பு தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முழுமையாக மதுவிலக்கை அறிவிக்க முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.

 

இவண்
தொல்.திருமாவளவன்