திருச்சி தடுப்பு முகாமில் ஈழத்தமிழர் தற்கொலை முயற்சி மிகவும் ஆபத்தான நிலையில்

வெள்ளி அக்டோபர் 02, 2015

சுரேஷ்குமார் த/பெ ஞானசௌந்தரம் (வயது 37) என்பவர் ஈழத்திலிருந்து தனது மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் ஏதிலியாக வாழ்ந்து வந்தார் முதுகுத்தண்டு உடைந்ததால் இடுப்பின் கீழ் உணர்வற்று, சுயமாக தனது எந்தவொரு அன்றாட கடமைகளையும் செய்யமுடியாத நிலையில் சக்கர நாட்காலியிலேயே உள்ளார்.

 

இந்நிலையில் உள்ள ஒருவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் உதவிக்கு யாருமற்ற நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 


சிறப்பு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தனக்கு உதவிக்கு ஒருவரை நியமிக்கும் படி அரசிடம் கேட்டும் பல மனுக்கள் கொடுத்தும் உதவிக்கு ஒருவரை நியமிக்க அரசு சம்மதிக்கவில்லை. முகாமில் அடைக்கப்பட்டுள்ள சக உறவுகள் இவருக்குரிய அன்றாட கடமைகளுக்கான உதவிகளை செய்து வந்தனர்.

 


இந்நிலையில் 01.10.2015 முதல் முகாமில் உள்ள அனைவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி பட்டினிப்போராட்டம் நடத்துகின்றார்கள். அதனால் சுரேஷ்குமாருக்கு,உதவுவதற்கு யாரும் இல்லை. தற்காலிகமாவெனினும் ஒருவரை உதவிக்கு நியமிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பொழுதும் அவருக்கு, பதில் எதுவும் வழங்க வில்லை என்பதுடன் எவரையும் உதவிக்கு விடவுமில்லை.

 

இதனால் மனவிரக்தியடைந்து தான் வாழ்வதை விட இறந்து விடலாம் என்று தனது கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசை மருத்துவ மனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.