திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைப்பு!

Wednesday March 07, 2018

திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்களை காவல் துறையினர்  கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் தாலுகா அலுவலக சுற்றுச்சுவரில் 25 ஆண்டு கால பழமையான பெரியாரின் 3 அடி உயரம் கொண்ட மார்பளவு சிலை உள்ளது.

நேற்று இரவு 8.30 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பெரியார் சிலையை சுத்தியலால் உடைத்தனர். இதனை சிலை எதிரே உள்ள ஒரு கடைக்காரர் பார்த்து கூச்சல் போட்டார். இதனால் அங்கிருந்து 2 மர்ம நபர்களும் தப்பிச் சென்று விட்டனர். சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் திராவிடர் கழக நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கே.சி.எழிலரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிற்றரசு மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டனர். மேலும் தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகளும் வந்தனர்.

இந்த நிலையில் சிலையை உடைத்த நபர்கள் 2 பேரும் சம்பவ இடத்தின் அருகே உள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் அடையாளம் கண்டு திராவிடர் கழகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பா.ஜனதா கட்சியை சேர்ந்த திருப்பத்தூர் நகர பொது செயலாளர் முத்துராமன் மற்றொருவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பத்தூர் நகர துணை தலைவர் பிரான்சிஸ் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நல்லதம்பி எம்.எல்.ஏ. (தி.மு.க.) மற்றும் தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், அ.தி.மு.க. நகர துணை செயலாளர் வீடியோ சரவணன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.கணேஷ்மல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அந்தந்த கட்சி நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். பெரியார் சிலையை உடைத்த இருவரையும் பார்க்க வேண்டும் என்றும், அவர்களை தாக்க போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நிலையத்திற்குள்ளேயே சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஏசுதாஸ், இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் இதுகுறித்து திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் இளங்கோவன் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட முத்துராமனுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்துக்கு பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகளும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு அசம்பாவிதத்தை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திராவிடர் கழக மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கே.சி.எழிலரசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘பெரியார் சிலையை உடைத்த இருவரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். அவர்கள் பெரியார் சிலையின் கண், தலை, கண்ணாடி பாகங்களை உடைத்து உள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர் அமைதியான ஊராகும். இங்கு கலவர பூமியாக மாற்றவே இதனை செய்துள்ளனர். எச்.ராஜா தூண்டுதல் பேரில் தான் இவ்வாறு செய்துள்ளனர். எனவே, எச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும்’ என்றார்.