திருமணம் முடிந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மார்பக புற்றுநோயாளி!

Wednesday January 03, 2018

அமெரிக்க மருத்துவமனையில் திருமணம் முடிந்த 18 மணி நேரத்தில் மார்பக புற்றுநோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான கனெக்டிகட்டைச் சேர்ந்த ஹீதர் மோஷர் என்ற பெண் மார்பக புற்றுநோயால் அவதியுற்று வந்தார். அவருக்கு ஹார்ட்ஃபோர்ட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

அவரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புற்றுநோயானது மூளை வரை பரவியதால் ஹீதர் இறந்து விடுவார் என கூறினர். இதனால் அவரது காதலர் டேவிட் மோஷர் ஆஸ்பத்திரியில் வைத்து ஹீதரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். 

இந்நிலையில், கடந்த 22-ம் திகதி மருத்துவமனையில் வைத்து திருமணம் நடந்தது. ஹீதர் திருமண ஆடை அணிந்து படுக்கையில் இருந்தார். அவர் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் போடப்பட்டிருந்தது. அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் டேவிட், ஹீதர் திருமணம் நடைபெற்றது.

திருமணமான 18 மணி நேரத்தில் ஹீதர் உயிரிழந்தார். அவருடைய இழப்பு அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்து விடுவார் என்பது அறிந்தும் தன் காதலியின் கரம்பிடித்த டேவிட்டின் அன்பு அனைவரையும் வியக்க வைக்கிறது.