திருவள்ளுவரை கௌரவித்த சுதர்சன் பட்நாயக்

Sunday January 07, 2018

ஈரடி குறளால் உலகுக்கு பொதுமறை அளித்த பெருந்தமிழ் புலவரை சிறப்பிக்கும் விதமாக பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடற்கரையில் திருவள்ளுவரின் சிற்பத்தை உருவாக்கி கௌரவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.

ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆர்.கே.பீச் எனப்படும் ராமகிருஷ்ணா கடற்கரை பகுதியில்  ஈரடி குறளால் உலகுக்கு பொதுமறை அளித்த பெருந்தமிழ் புலவரை சிறப்பிக்கும் விதமாக திருவள்ளுவரின் சிற்பத்தை உருவாக்கி கௌரவித்துள்ளார்.