திறமைகள் வெளிப்பட விடுதலைப் போரட்ட வீதிநாடகங்கள் உதவின!

Wednesday August 29, 2018

கடலூரான் சுமன் :- கேள்வி, வணக்கம் நிக்சன் சர்மா  நீங்கள் போராட்ட காலங்களிலும் சரி போராட்ட மௌனிப்புக்குப் பின்னும் சரி தொடர்ந்து இயங்கி வரும் பல்துறை ஆளுமைகொண்ட ஒரு கலைஞன். 2009க்கு பின் ஈழம் சார்ந்த கனதியானதுமட்டுமல்ல தேவையான பல விடயங்களைப் பேசி வரும் ஒருவர். உங்கள் பற்றிய அறிமுகத்தை நான் சொல்வதைவிட நீங்கள் சொல்வதே சிறப்பானதாகும்இ உங்கள் அறிமுகத்துடன் கேள்விக்குள் நுழைவோம்,

நிலவன் :- நன்றி என்னையும் உங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு இணைத்துக்கொண்டமைக்கு. புலம்பெயந்து வாழும் நாம் பல விடயங்களை  கவனத்தில் கொள்ள வேண்டடியவர்களாக உள்ளோம்.

கடலூரான் சுமன் :- முதலில் எமது முகநூல் மற்றும் இணையத்தள வாசகர்களுக்காக உங்களை அறிமுகப்படுத்த முடியுமா?

நிலவன் :-  நான் நிலவன் ( நிக்சன் சர்மா ) பயிற்றப்பட்ட உளவளத்துணை மற்றும் சமூகப் பணியாளர். சுயாதீன ஊடகவியலாளராகவும் உள்ளேன். ஈழத்தின் வடபகுதியான யாழ்மாவட்டத்தில் கலையும் எழுத்தும் சார்ந்த ஒருகிராமத்தில் பிறந்தேன்.  உள்நாட்டு யுத்தம் காரணமாக கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா என இலக்கியமும் கலையும் சார்ந்த ஒரு சூழலில் தான் நான் சிறு வயது முதல் வளர்ந்தேன்.  தாயகம் சிறுவர் இல்லத்தில் வளரும்போது அங்கிருந்த சூழல் பல்துறை சார்ந்த வீரர்களின் அனுபவங்களும் பயிற்சிகளும் பல்துறை சார் விடயங்களில் என்னை வளர்த்துக் கொள்ள வழி செய்தன. சிறுவயதில் நடனம் நாடகம் என எனக்கிருந்த ஆர்வம் ஆரம்பத்தில் வீதி நாடக அணியுடன் இணைத்தது. சங்க நாதம் புகழ் பேபி ஆசிரியர் அவர்களின் நெறிப்படுத்தலில் என் கலை பயணம் ஆரம்பம் ஆனது . இவ்வாறு எனது பல்துறைசார் திறமைகள் வெளிப்பட்டதற்கான ஆரம்பச் சூழல் விடுதலைப் போரட்டத்தின் வீதிநாடகங்களாகத்தான் அமைந்திருந்தது.

பின்னர் பட்டக்கல்வி , பட்டமேற்கல்வி, துறைசார் கற்றல்களையும் மேற்கொண்டு ஈழத்தில் உளவளத்துணையாளாக பணிபுரியும்போது பல விசாரணைகளுக்கும் ,அச்சுறுத்தலுக்கும் , சித்திரவதைகலுக்கும் முகம்கொடுத்து நாட்டில் வாழமுடியாத சூழலில் தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றேன் .

கடலூரான் சுமன் :- கடந்த ஆண்டும் இவ் ஆண்டும்    வெளிவந்த  நூல்கள் எதிர்ப்புக்களுக்கும்  எதிர்பாப்புக்களுக்குமிடையில் வெளிக்கொண்டு வந்திருக்கின்றீர்கள், இந்த இரண்டு விதமான எண்ணங்களையும் தோற்றிவிக்குமளவுக்கு   உங்கள் நூலில் பேசப்பட்டுள்ள விடயங்கள் என்ன?

நிலவன் :-  நீங்கள் சொல்வது போல் எதிர்ப்புக்களையும், விவர்சனங்களையும், தடைகளையும்,  கடந்து  2017ஆம் ஆண்டு ‘காந்தள் கரிகாலன்’, 2018ஆம் ஆண்டு ‘வலிசுமந்த நினைவுகள்’ வெளிவந்திருக்கிறது. நூலினை படியுங்கள் அப்போது நூல் உள்ள விடயங்களை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். நூல்கள் வெளிவருவதற்கு முன்னரே விமர்சனங்களும் தடைகளும் சிறந்த விளம்பரமாக அமைந்திருக்கிறது. பல எதிர்ப்புக்களைகளைக் கடந்து படைப்புக்களை படைக்க முடியும்என்பதை உணர்ந்து கொண்டேன் . நூலினை முழுமையாக படியுங்கள் ,இரண்டும் காலத்தின் பதிவாகும்.

‘காந்தள் கரிகாலன்’

தமிழர் தாயக மண்ணிலே எமக்கு என்று ஒரு அடைளமும், வரலாறும், இருக்க வேண்டும். தமிழீழம் என்கின்ற தணியாத இலட்சியத்திற்காக பல தடைகளையும்,கொடிய துன்பங்களையும், சுமக்கத்தயாராகிய மண்ணின்மைந்தர்கள்,  இரவு பகலாக காடுமேடெங்கும் வெடிமருந்துடன் மண்ணையும், மக்களையும்  காத்திட  உறுதியாக இறுதிவரை நிகழ்த்திய களச்சமர்கள், தமிழர்களின் மன உறுதிக்குச் தக்கசான்று.

இந்த சமர்க்கள நாயகர்களின் தியாகங்கள் ஏராளம். அதில், தமிழீழ விடுதலையமைப்பின் இரகசியங்களைக் காப்பாற்றிட போராளிகள்  அனைவருமே கழுத்தில் நஞ்சணிந்தார்கள். எந்த  சூழ்நிலையிலும், எதிரிகளிடம் பிடிபடாமலும் ரகசியங்களை பாதுகாத்திடவும்  அந்த நஞ்சருந்தி வித்தாகியவர்கள். பலர் எதிரியிடம் உயிருடன்  பிடிபடக்கூடாது என்பதற்காக குண்டை வெடிக்கவைத்து வீழ்ந்த மாவீரர்களின் தியாகத்தாலும் எமது விடுதலை வராலாறு எழுதப்பட்டிருக்கிறது.

வீரப் பரம்பரையைத்தொடங்கிய முன்னோடியாய் 1982-ம் ஆண்டு கார்த்திகைத்திங்கள் 27-ம் நாளன்று தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் முதல்வித்தாக லெப்ரினன்ட் சங்கர் வீரச்சாவடைந்தார்.  அந்த நாளை, கார்த்திகை 27,   அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுதந்திரச் சிற்பிகளை நினைவுகூரும் மாவீரர்நாளாக தலைவரினால்  பிரகடனப்படுத்தப்பட்டது.

மாவீரர் தெய்வங்களை நினைவு கூருகின்ற உன்னதமான நாளில் தேசியத்தலைவரினால் 1989ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரை ஆற்றப்பட்ட மாவீர் நாள் உரைகளையும்,  தமிழீழ மாவீரர் பணிமனையினால்  உருவாக்கப்பட்ட மாவீரர் நாள் கைநூலில் உள்ள விடயங்களையும் , கொண்டுள்ளது .

தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ்வேண்டும் என்ற சிந்தனையுடன் தேசியத்தலைவர் தமிழ் இனத்திற்கு என்று ஒரு  புலிக்கொடியை உருவாக்கி 1990 ஆம் ஆண்டு ஏற்றி தமிழரின் தேசிய கொடியாக புலிக்கொடியைப் பிரகடனப்படுத்தினார்.  தமிழீழத் தேசியக்கொடி பற்றியும், அதனை பயன்படுத்திடும் முறைகள் பற்றிய  பயன்பாட்டுக்கோவை விடயங்களையும் தாங்கிக்கொள்கிறது “காந்தள் கரிகாலன்” என்னும் நூல்.

தேசிய தலைவரின் அறிவு, அனுபவம்,  நேர்மை, தொலைநோக்குத்திறன், பிரச்சனையைக் கையாளும் நேர்த்தி, போராளிகளின் மேல் கொண்ட அளவில்லா அன்பு, தமிழீழ மண்ணையும்,மக்களையும், உயிரை விட மேலாய் நேசித்த பக்குவம், மனித நேயப்பற்று, இனத்தின் மீட்புக்காக களமாடிய வீரத்தையும், தமிழனுக்கான அடையாளத்தினையும், ஒவ்வொரு வினாடியும் சிந்தித்த சிந்தனை, தன்னிகரில்லா தனிபெரும் படையாக உரிமைக்காப் போராடிய வீரர்கள் உன்னத வாழ்வு, விடுதலையை நோக்கி பயணிக்க உகந்தளித்த தலைவரின் சிந்தனையில் உதிர்த்த சில சிந்தனைத்துளிகளையும் தாங்கி வருகிறது .

“வலிசுமந்த நினைவுகள்”

 2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்து   2009 இல் முள்ளிவாய்க்கால் வரை படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என யாரும் நினைக்கவில்லை.  நாலாபுறமிருந்தும் இன அழிப்பின் யுத்தமுனைச் சத்தங்கள்   வன்னி மண்ணை விழுங்கி ஏப்பமிட தொடங்கியிருந்த காலமது. தழிழர்கள்  வரலாற்றில் முள்ளிவாய்க்கால் படுகொலை, குருதியால் வரையப்பட்ட தமிழர் காவியம், மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெருவலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட அந்த கனத்த நாட்கள் தந்த  அவலங்களும், மரணங்களும், கண் கண்ட காட்சிகளையும் மனதில் ஏற்பட்ட வலிகளையும் உணர்வுகளையும்,  மரணதேவனின் அகோரத்தாண்டவத்தினையும் போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகளையும், கொடூரங்களில்  இருந்து சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மை வாழ்க்கையையும். 9 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் உலகம் சொல்ல மறுக்கும் உண்மையின் சாட்சிகளாய்… நம் வலிசுமந்த மண்ணில் நடந்த இனப்படுகொலைக்கு கண்ணீர் சிந்திய நாட்களை கண்முன் கொண்டு  வருகின்றது  ‘வலிசுமந்த நினைவுகள்’   என்ற இந் நேர்காணல் தொகுப்பு நூல்.இங்கே ஒவ்வொரு  நேர்காணல்களிலும்  அழியாச் சுவடுகளாய் ‘வலிசுமந்த நினைவுகள் ‘ நேர்காணல் தொகுப்பு எனும் இந் நூல் எழுதும்போது மீண்டும் செத்துப்பிழைத்திருக்கின்றேன்.

கடலூரான் சுமன் :- புலத்திலிருந்து  பார்க்கும் போது ஈழ அரசியல் நகர்வுகள்  எவ்வாறு  தோற்றமளிக்கின்றது?

நிலவன் :-  ஈழத்தமிழர்கள் இன்று உலகமெங்கும் புலம்பெயர்ந்த நாடுகள் பரந்து வாழ்ந்து வருகின்றனர். புலத்தில் இருந்து ஈழத்து அரசியல் நகர்வுகளை பார்க்கும் போது, அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளையும், நாளாந்தம் நடைபெற்றுவரும் திட்டமிட்ட அடக்குமுறை, இனக்குறைப்பு, இன அழிப்பு, என நடைபெற்றுவரும் உளவியல் போரையும் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.  இன அழிப்பு அரசின் அரசியல் நகர்வதற்கு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில்  தமிழ் அரசியல் தலைமைகளும் செயற்பட்டு வருவது மன வேதனையினை தருகின்றது. அந்தவகையில் சில விடயங்களை இங்கு முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.

தமிழ்த் தேசியப் போராட்டங்களை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் வழிநடத்தியிருந்தாலும், அதனை தலையாய கடமையாக ஏற்று நடந்தவர்கள் தமிழ் மக்கள். அதிலும் குறிப்பாக அதிகார அரசியல்- பொருளாதார மேல்நிலையில் இல்லாத சாதாரண தமிழ் மக்கள். இன்றைக்கும் தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக அந்த மக்களே இருக்கின்றார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.

வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதோடு, தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதுதான அடக்கு முறையும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. பல்கழைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் , வாள் வெட்டு சம்பவங்கள், குள்ள மனிதர்கள் உருவாக்கம் , மணல் ஏற்றச் சென்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பங்களும், வீதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சுட்டுச் சம்பவங்களும், இராணுவ ஆதரவுடன் நடைபெற்றுவரும் பாலியல் துஸ்பிரயோகங்களும், என பல்வேறு சம்பவங்கள் கடந்த காலம் தொடக்கம் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும், நடைபெற்றுவருகின்றது.   இது   இளைய சமூகத்தவர்களை பதற்ரத்துடம், அச்ச நிலையிலும், வைத்திருக்க வேண்டும் என்ற நோக்குடன் அரச பயங்கரவாதம் நிகழ்த்தும் நிகழ்ச்சி நிரல்.

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏனைய தமிழ்க் கட்சிகளை நிர்மூலமாக்கும் நோக்கில் செயற்படுவதும் ஏனைய கட்சிகள் தமிழரசுக்கட்சி மேல் குற்றம் சொல்வதையும்  விடுத்து தமது செயற்பாடுகளை பற்றி ஒரு  சுய  பரிசீலனை செய்வேண்டும்.  அப்போது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் மக்கள் முன் வைத்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா? அல்லது அதற்கான ஆரோக்கியமான முன்னகர்வுகள் நடைபெற்றுள்ளதா?   தாம் கண்துடைப்பிற்காக செய்யும் செயற்பாடுகளை மக்கள் முழுமையாக நம்புகின்றார்களா?  என்று தெரியவரும்.

தமிழ் தேசியம், யுத்தத்தில் விழுப்புண் அடைந்து கழுத்துக்கு கீழ் இயங்காத நிலையில் படுக்கையில் உள்ளவர்களும் , இடுப்புக்கு கீழ் இயங்க முடியாது படுக்கைப்புண்ணுடன் வாழ்பவர்களும், அவையங்களை இழந்தவர்களும் , பெரும் உடல், உள பாதிப்புக்குள்ளாகி, நாளாந்தம் பல சொல்லமுடியாத இன்னல்களை எதிர்கொண்டும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களது மருத்துவ சிகிச்சை, மனிதநேயமுள்ள புனர்வாழ்வு செயற்பாடுகள் இதுவரை உரிய முறைகளில் நடைபெறாமை, அல்லது செயற்படுத்த முடியாமை, தொடர்பாக ஏன் வடமாகாண சபையின் அமைச்சுக்கள் கவனம் செலுத்தவில்லை.

தொடரும்வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழர்களுக்கு என்று சுயாட்சி அல்லது சமஷ்டி என்ற நிலைப்பாட்டில் தேர்தல் களத்தில் நிற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, தற்போதுள்ள நிலையில், தமிழ் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் அரசியல் வழி சரியானதா ? அரசியல் ரீதியாக வழிநடாத்தத் தகுதியானதா? அடைவு என்ன? மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?   நம்பகத்தன்மை வாய்ந்ததா? வடமாகாணசபையின் இனப்படுகொலைத் தீர்மானம் தேவையற்றது என அறிக்கை வெளியிட்டது சரியா?   பேரம் பேசலை செய்ய தவறியமை சரியா ? இந்தக் கூட்டமைப்பு மக்களுக்கான அரசியலை செய்கிறார்களா? என்ற தெளிவை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் .

வடக்கில் தினம் மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மனித எச்சங்கள்  சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதுவும் முன்னேற்ற கரமாக இல்லாத நிலை காணப்படுகிறது. ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தல், மற்றும் வீடியோ பதிவு செய்தல் ஆகியவற்றுக்கு அங்குள்ள அதிகாரிகள் அனுமதி வழங்காத நிலையும்  மீட்கப்பட்ட தடயப் பொருட்கள்,  மனித எலும்புகள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ளாது இவ் விடயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராமுகம், அசமந்தமாக செயற்பட்டு வருவது ஏன் ?

புனர்வாழ்வு பெற்ற 108 போராளிகள் இது வரையில்  திடீர்சாவடைந்துள்ளனர். மரணத்திற்கான காரணங்களும் கண்டறியப்பட முடியவில்லை. நோயினால் மரணமடைவதாக சாதாரணமாக மரண சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதா? அவை வெற்றி அடையாமைக்குக் காரணம் என்ன? என்பதை கண்டறிதல் வேண்டும் .

முன்னாள் போராளிகள் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என அரசினால் கூறப்படுகின்ற போதிலும் விசாரணை என்ற பெயரில் அவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்டுபடுத்தப்படுவதோடு அவர்கள் தொடர்ந்தும் அடக்கு முறைக்குள்ளேயே இருந்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் இனப்பிரச்சனைகள், அரசியல்   தீர்வு குறித்தும், பயங்கரவாத சட்டம் நடைமுறை குறித்தும், தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள், அரசியல் கைதிகள் நிலைப்பாடு தொடர்பிலும்   அரசுடனான பேச்சுவார்த்தைகள் ஏன் வலுவிழந்துசெல்கிறது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் தமிழ் மக்கள் வாழும் வடகிழக்கு மாவட்டங்களில் உள்ள  பிரதேசங்களில் புத்த விகாரைகள், இந்து ஆலயங்களின் காணிகளுக்குள்ளும் அதனை அண்மித்த இடங்களிலும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. புதிய புத்த விகாரையை இராணுவத்தினரே அமைக்கத் தொடங்கியுள்ளார்கள்.

வடக்கு கிழக்கில் இராணுவ பின்னணியுடன் தங்கள் ஆதிக்கத்தினை நிலைநாட்ட  சிங்கள வர்த்தகர்களின் அத்துமீறிய  செயல்களை  அவதானிக்க முடிகிறது. அபிவிருத்தியினூடாகத் தமிழ் மக்கள் முன்னேற்றமடையலாம் என்ற அரசின் வாதம் பொய்த்துப் போவதனை தமிழ் தலைவர்கள் உணரவில்லை.

இன மற்றும் மத பாகுபாட்டை தூண்டி தமது சுய அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே குரோதங்களை வளர்க்க அரசியலில், வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லும் நிலை வடக்கு கிழக்கில் சிறுபான்மை மக்களிடையே விதைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கின்றனர்.

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையை மீளவும் அறிமுகப்படுத்திய அரசு, வட கிழக்கில் தற்போது வசிக்காதவர்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி, அதே போல காணாமல் போனவர்களையும் இந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிகள் நடைபெறுகின்றது.

 அகதிகளாக்கப்பட்ட மக்களில் பெருமளவானோர் இன்னமும் அகதிகளாகவே உள்ளார்கள், இவர்களில் மீள் குடியேற்றத்திற்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளற்ற நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பிரதேச சபை மாகாண சபைகளின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் ஒரு அதிர்வு நிலையினை உருவாக்கியுள்ளது.

புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் ஆரோக்கியமான முன்னகர்வும்  ஒற்றுமையும் தழித் தேசியக் கூட்டமைப்பின்  அசமந்தப்போக்கும், தம்மை தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளைத் தக்கவைத்துள்ள நிலையினையும் காண முடிகின்றது. மக்களின் சமூகப்பிரச்சினைகளுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் முற்போக்கச் சக்திகளால் முன்னெடுக்கம் பிரச்சினைகளுக்கான ஒரு முன்னகர்வுகள் தீர்வினை முன்வைப்பதற்கான ஒரு சூழலை சர்வதேச சக்திகளால் தோற்றுவிக்க முடியாத நிலையே தற்போதய அரசியல் சூழலில் காண முடிகின்றது.

வடக்கு கிழக்கு  மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் இவர்களின் நோக்கம் என்ன ? அவர்கள் இதுவரையில் அழுல்படுத்திய திட்டங்கள் என்ன என கேள்வி எழுகின்றபோது தமது எதிர்ப்பை மக்கள் அரசியல் இயக்கமாக வெளிப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது .

எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணாகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போய்க்கொண்டிருப்பதையையும் காணமுடிகின்றது. புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் நாம் வாழும் நாட்டின்  அரசுகளுக்கு எமது பிரச்சனைகளை பற்றி எமது தேவைகளைப் பற்றி ஈழத்தில் எமது உறவுகள் படும் வேதனைகள் பற்றியும் சொல்வதற்கு பதிலாக புலத்தில் நாம் என்ன செய்கின்றோம்…?

புலம்பெயர் சமூகத்திலும் சரி ஈழத்திலும் சரி அரசியல் கூத்தாடிகளாக வலம்வந்து கொண்டிருக்கும் தமிழ் பிரதிநிதிகள் சிலர்,  தங்கள் கரங்களில் கிடைத்திருக்கும் அதிகாரப் பலத்தை வீணடிப்புச் செய்து வருகின்றது. மிகக்கொடுமை ஆனால் இந்த சிலர் செயற்பாட்டாளர்களே வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்பில் உள்ளார்கள் இவர்களை உரிய முறையில் செயற்பட வைக்கவேண்டியது நிலத்திலும் புலத்திலும் வாழ்பவர்களின் பொறுப்பாகும்.

தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு அரசியல்  எங்காவது ஒரு மூலையிலிருந்து ஈனக்குரலிலாவது எழுந்து நமது மொழி மீது, வரலாற்றின்மீது, கலை,கலாசார, பண்பாட்டுக் கூறுகளின் அடித்தளத்தின் மீது ஆழமாக வேரூன்றியபடியே காலத்தை நகர்த்தவேண்டும். தமிழ் இனம் தங்களது உரிமைக்காக போராடுவதற்கு எவராலும் தடை போட முடியாது. மொழிசார்ந்த, கலைசார்ந்த, பண்பாடு சார்ந்த, தமிழர் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை முடிந்தவரை முன்னகர்த்த வேண்டும். விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது. போராடிக் கொண்டே இருக்க வேண்டும் . இலக்கு அடையும் வரை ஓய்வற்று உழைக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்டுள்ளக் கட்டளையாகவுள்ளது.

தொழில் துறைசார் பயிற்சிகள், சுய பொருளாதாரத் திட்டங்கள், கூட்டுப்பண்ணை வாழ்வாதாரங்களுக்காக உருவாக்கப்படல் வேண்டும். மேலும், மருத்துவப் பரிசோதனை, மருத்துவ ஆய்வுகள், உள ஆற்றுப்படுத்தல் போன்றன மேற்கொள்ளப்படல் வேண்டும். சமூகத்திற்காகப் போராடிய போராளிகள், போருக்குப் பின்னான சமூக உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றவும் சாட்சிகள் பாதுகாக்கப்படவும் புலம்பெயர் நாடுகளிலுள்ள பங்களிப்புக்களையும் உரிய முறைகளில் திட்டமிட்டு செயற்படுத்த முடியாது, பிரதேச சபை மாகாண சபை  உட்பட  பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுவது ஏன் ?

இங்குதான் நாம் விழிப்பாக இல்லை என்பது தெரியவருகிறது நாம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தவறுகளைச் செய்துகொண்டிருக்கும் குற்றுணர்வு ஏற்படும்வரை மக்கள் இதில் மாற்றம்காண முடியாது.  மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும். தெரிவுசெய்து அனுப்பிய  பிரதிநிதிகள் பொருத்தமற்றவர்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சிறீலங்கா அரசு யுத்தத்தை அமைதியின் பின் இனக்கலவரத்தை உருவாக்கத் திட்டமிட்ட நிகழ்வு, அதற்கான தூண்டுதல்களை அரசு ஏற்படுத்துன்றது இதன் விளைவுகள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இளம் சமுகத்தின் இருப்பினை அழிப்பதற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கை. மக்களின் சுதந்திர நடமாட்டம் இல்லாமல் செய்யப்பட்டு ஒரே இடத்தில் அவர்களை பதட்ட சூழ்நிலையில் அடைத்து வைப்பதன் மூலம், சமூகக் கலப்புக்கள் அற்ற தனிமை நிலையை உருவாக்கி அவர்கள் மத்தியில் உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்திட சிறிலங்கா அரசு திட்டமிட்டு செயற்படுகின்றது. அதே நேரம் தற்போதைய சூழலில் அபகரிப்பு, நிலங்கள் விடுவிப்பு, சிங்களக் குடியேற்றம், வளச் சுரண்டல், புத்தவிகாரை அமைத்தல், இனப்பிரச்சினைத் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம், மணல் அகழ்வுகள், காடுகள் அழிப்பு, மலைகள் பாறைகள் உடைப்பு, அத்துமீறி சிங்கள மக்கள் குடியேற்றங்களை நிறுத்திட ஒரு சிறந்த மாற்றுத் தலைமையினை தெரிவுசெய்து நிலைநிறுத்தி தேர்தல்களில் வெற்றிபெற வைப்பதன் ஊடாக ஒரு அரசியல் மற்றும் சமூக அரசியல் தளத்தில் அபிவிருத்தியுடன் கூடிய மாற்றத்தை நிலைநிறுத்த முடியும்.

கடலூரான் சுமன் :- புலம்பெயர் நாடுகளில்  நாம்தமிழர் கட்சியின் செயற்பாடுகள்  அதிகரித்துவருவது புலம்பெயர்தேசத்திலும் சரி ஈழத்திலும் சரி எவ்வாறான தாக்கத்தை  ஏற்படுத்தும்?

நிலவன் :-   நாம் தமிழர் கட்சியின் செயற்பாடுகள், மக்கள் மத்தியில் ஒரு காத்திரமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளதா என்பதை நாம் முதலில் கவனத்தில் எடுக்க வேண்டும். இப்போது தமிழ்நாட்டிலையே ஈழம் குறித்த கருத்துக்கள் வெளிவருவது மிக அரிதாக உள்ளது. எனவே வெறுமன, உணர்ச்சிவசப்பட்டு, அந் நேரத்தில் மட்டும் பேசுவதால், எந்த தாக்கமும் ஏற்படாது. எமது மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை உலகுக்கு அரசியல் தெளிவுடன் எடுத்துச்செல்ல வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் நாம் தமிழர்கட்சி, ஈழத்தமிழர் மத்தியில் தமது அலுவலகங்களை கொண்டுவருவதற்கான காரணங்களை நோக்க வேண்டும். அங்கு அதற்கான தேவை இருக்கிறதா? அவர்களுடை பிரசாரங்கள், மறைமுகமாக ஈழத்தின் அடுத்த தலைவராக அக்கட்சியின் தலைவர் சீமானை முன்னிறுத்துவதாக உள்ளது. இந்த போக்கை ஈழத்தமிழர் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள்.

இவர்களுடைய அமைப்புக்கள் மூலம் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் நிதியைப்பெற்றுக்கொள்ளத்தான் முடியும். சீமான் தமிழக முதலமைச்சராக வந்தால் ஈழத்தை பெற்று தந்து விடுவார் என்றும் ஒரு உலக, சமகால அரசியல் புரிதல் அற்று புலம்பெயர்ந்தவா்களும் ஒவ்வொரு தேர்தல்காலங்களிலும் பெருந்தொகையான நிதியை வழங்கி வருகின்றனர் இந்த நடவடிக்கைகள், நாம்தமிழா் கட்சியை, குற்றம் சொல்வதைவிட, இக்கட்சிக்கு உதவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை சாடுவதே பொருத்தம்.

இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநில அரசுக்கான வரைமுறை அதற்கான அதிகாரங்கள், என்னென்ன என்பதை முதலில் ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் இந்தியாவில் நிலவி வரும் ஆரிய திராவிட மனப்போக்கினை வரலாற்று ரீதியாக புரிந்து செயற்படுதல் அவசியம். நாம் தமிழர் கட்சி, மாநில ஆட்சியைப்பிடிப்பதற்கு தோற்றம்பெற்றதா, ஈழ விடுதலைக்காக தோற்றம் பெற்றதா என முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

நமக்கான தீர்வை  நம்முடைய அழிவில் இருந்துதான் தேடவேண்டுமே தவிர, உணர்வால் ஒன்றிய இனமாக இருந்தாலும் நிலத்தால் வேறுவொரு கலாசாரத்தையும் வேறுவொரு அரசியல் தன்மையைக்கொண்டுள்ள தளத்தில் இருந்து தேடக்கூடாது. அதேபோல, தமிழகத்தில் இருந்து எந்தளவுக்கு நாம் ஆதரவை எதிர்பார்க்கிறமோ அதே அளவு எதிர்பார்ப்பு, இந்தியாவிடமும் நமக்கு இருக்க வேண்டும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் ஆதரவையும் பெற முயல வேண்டும். அதை தூய்மையான இனவாதத்துடன் அணுகுவோமேயானால் அதாவது தெலிங்கர்கள், கன்னடர்கள்,  என அவர்களுடன் பேச முடியாது. இனப்பற்று இருக்க வேண்டும், துய்மையான இனவாதம் இருக்ககூடாது. ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்கும் போது, மாநில அரசுக்கான எல்லைகள் எவ்வளவு, வேறொரு நாட்டை பிடிக்க முடியுமா என்ற எல்லைகளை புரிந்து செயற்பட வேண்டும்.

கடலூரான் சுமன் :- ஈழத்தில் காணாமல் போனோரின்  போராட்டமானது 8 வருடங்கள் அண்மித்துக்கொண்டிருக்கின்றது. இந்தசூழ்நிலையில்  காணாமல்போனோர் தொடர்பாக புலத்தின் இருந்து உங்கள் பார்வை என்ன ?  

நிலவன் :- இலங்கை அரசு காணாமல் போனோர் தொடர்பாக தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை தவிர்த்து வருகின்றது.      காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை.1983ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை  நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்ந்துவரும் ஒரு செயற்பாடு.  இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட வர்களை நாம் வகைப்படுத்த வேண்டும்.

1- 2009ம் ஆண்டிற்கு முன்னர் சிறிலங்கா அரசின் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். அதே போல் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த தமிழர்களின்  வீடுகளில் வைத்து விசாரணை என அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

2- 2009 ஆம் ஆண்டு மே மாத்தில் மதகுருக்களுடன் இராணுவத்திடம் சரணடைந்த போது   வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்கள். இவர்களில் 280 பேரின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் அவர்கள் தொடர்பான விவரங்களையும் (ITJP) என்ற இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது.

3-இராணுவக் கட்டுபாட்டிற்கு வரும்போது விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு நாள் இருந்தவர்களையும் பதியுமாறும் சிறு விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினர்களுடன் இணைக்கப்படுவார்கள் எனக்கூறி அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆப்க்கப்பட்டவர்கள்.

4- விடுதலைப் போர்க்காலச்  இடம்பெயர்ந்து பாதுகாப்பு வலயப்பகுதிகளில் இருந்து பொருட்களை எடுப்பதற்கு மீளச் சென்றபோது காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

5- 2008 -2009 காலம் பகுதிகளில்   கட்டாய ஆள் இணைப்பில் இணைக்கப்பட்டு போராளியாக இருந்தவர்கள் தற்போது காணாமல் போய் உள்ளார்கள். இவர்களின் உறவுகள் சொல்லிடும் விடயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும்.   இவ்வாறு தங்களுடைய உறவுகள். இறக்கவில்லை எனவும் இறந்திருப்பின் விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் தமது உறவுகள் இடம்பிடித்திருப்பார்கள் என்றும் கூறிடும்.   அதே வேலை தங்களது பிள்ளைகளை உறவுகளை இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்ததை கண்டதற்கான முதலாம் இரண்டாம் மூன்றாம் நிலை சாட்சிகள் உள்ளதாகவும் கூறுகின்றன.

6- 2009 ஆம் ஆண்டின் பின்னர் மீளக்குடியேற்றத்தின் பின் தொழிலுக்குச்சென்றும் காணி வீடு பார்க்கச் சென்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

அரசியல்வாதிகள் குறித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாத்திரமல்ல, செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் கூட அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.  அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிறுனங்களின் ஊடாக மக்கள் காணாமல் போயுள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீமூனால் அமைக்கப்பட்ட குழுவின் இலங்கை தொடர்பான விவகாரத்திற்கு பொறுப்பாக இருந்த உறுப்பினரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா தெரிவித்திருந்தார்.

காணாமற் போனோர் அலுவலகமானது இவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை கண்டறிய…? குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்களே சாட்சியாக உள்ளனர். இந்நிலையில் இவர்கள் காணாமற்போன தமது உறவுகள் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வேண்டிய கடப்பாடு எங்கள் அனைவருக்கும் உள்ளது.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி தொடந்து எமது உறவுகள்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .

1-காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்.

2- அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

3- பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் .

 என்ற மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டமாக  கவனயீர்ப்பு போராட்டம், கறுப்புப் பட்டி போராட்டம், உணவுதவிர்ப்பு போராட்டம், தேங்காய்  உடைக்கும் போராட்டம், கற்பூர தீச்சட்டி ஏந்தும் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம்,வீதி மறியல் போராட்டம், எழுச்சிப் போராட்டம், மௌன போராட்டம், முற்றுகை போராட்டம், காத்திருப்பு போராட்டம்,  பதாதைகள் தாங்கிய போராட்டம்  என பல போராட்டங்களை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடந்து தீர்வின்றி போராடிவரும் நிலை காணப்படுகின்றது.  அதே வேளை தமிழ் அரசியல் கட்சிகள் இந்தப்போராட்டங்களை கண்டுகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது.

 வார்த்தையளவிலான தமிழ்த் தேசியம் என்கிற நிலைகளைக் கடந்து அர்ப்பணிப்பான போராட்டங்களை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதும், நீதிக் கோரிக்கைகளுக்கான அழுத்தங்களை வலுப்படுத்துவதும், சிந்திப்பதற்கும் இயங்குவதற்குமான சூழலை நாம் உருவாக்க வேண்டும். ‘மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் தொடர்ந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரித்துக் கொண்டு தேடுதல் நடத்துவோம் ‘ என மரணச்சான்றிதழ்களை திணிக்கும் முயற்சியில்  ஆணைக்குழுவினர் ஈடுபட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

‘யுத்தம் முடிந்த பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்த போது இராணுவத்தின் கரங்களில் புனர்வாழ்விற்கு என ஒப்படைக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்களின் முடிவு தெரியாமல் எவ்வாறு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமாட்டோம்  அவர்களுடைய மரணத்தின் ஊடாக எமக்கு கிடைக்கும் உதவிகள் தேவையற்றவை’என சாட்சியமளிக்க வந்தவர்கள் ஆணைக்குழுவிடம் பல கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்கள் .

அரசியல்வாதிகளின் சிறுபிள்ளைத்தனங்களுக்கு கவனம் கொடுத்து, ஊடகங்களும், புலம்பெயர் அமைப்புக்களும் உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்பி ஒதுங்கிப்போகும் நிலை காணப்படுகிறது. எனினும், இவ்வாறான நிலையை தொடர்ந்தும் அனுமதிப்பது என்பது,  உண்மையான உணர்ச்சியாளர்களுக்கு விடுதலை நோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என்கிற அடையாளத்துக்குள் நாளாந்தம் காண்கிறோம். உறவுகளை தேடி அலைந்து அவர்களது கால்கள் பலமிழந்துவிட்டன. கண்களில் கண்ணீர் வற்றிவிட்டது. பல தாய்மார் தமது பிள்ளைகளின் நிலை என்னவென்று அறியாமலேயே  4 தாய்மார்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள்.  மேலும் பலர்  மன அழுத்தங்கள் காரணமாக நோய்வாய்ப்பட்டு உள்ளனர்.

 இதே போல் (இ.ஜெனிஸ்ராஜ் கடந்த 2007 ம் ஆண்டு நீர் கொழும்பு பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்)  அவருடைய சகோதரி இ.ராசநாயகம் நிலா (24)  சுழற்சிமுறையிலான காணாமல் ஆக்கப்படவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவர், 22/07/2018 அன்று, மனஅழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக   மரணம் அடைந்துள்ளார்.

இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எப்போதும் சாட்சியமாக உள்ளவர்கள் இறக்க நேரிடும் என்பதை பலரது இறப்புக்கள் காட்டிநிற்கின்றது. அந்தவகையில் சாட்சியாமக உள்ளவர்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிடமும் நேர்காணல்களை மேற்கொண்டு அவர்களது பதிவுகளை பல மொழிகளில் எழுத்து,ஒளி நாடாக்கள், மூலம்  ஆவணப்படுத்துவதன் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தின் தன்மையை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் இருக்க வேண்டும்.  இவை எக்காலத்திலும் அவற்றைப் பயன்படுத்தி சர்வதேசத்தின் நீதிக்கதவைத் தட்டி  நீதியைப் பெற்றுக்கொள்ள வழியமையாக்கும்.

கடலூரான் சுமன் :- புலம்பெயர்தேசத்தில்  2009ம் ஆண்டுக்கு முதல் இருந்த அமைப்புக்கள் ,ஈழம்சார் சின்னங்களை சிலர் மாற்றி அமைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது, அது தொடர்பாக அண்மைக்காலமாக உங்கள் முகநூல் பதிவுகளை பார்க்க முடிந்தது அதுபற்ரியும் உங்களுக்குத் தெரிந்து இதுவரை மாற்றப்பட்ட  அமைப்புக்கள்  சின்னங்களைப் பற்றியும் தேசிய நிகழ்வுகளின்  நிலைப்பாடுகள் பற்றியும்   கூறமுடியுமா?

நிலவன் :- உங்களுடைய வினா பெரிய ஒரு விடயப் பரப்பினை கொண்டுள்ளது இதற்கு பதில் தருவதற்கு மனச் சங்கடத்தை  ஏற்படுத்துகிறது. இருப்பினும் பதில் தருகின்றேன். புலம்பெயர் தேசத்தில் நடைபெற்றும் தேசிய நிகழ்வுகளையும், நடைமுறைப்படுத்தும் அமைப்புக்களையும், விமர்சிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.  2009ஆம் ஆண்டிற்கு முன்னர் புலம்பெயர் தேசத்தில் தேசிய நிகழ்வுகள் எவ்வாறு நடைபெற்று, அதன் வரவு செலவு என, அனைத்து விடயங்களையும் பார்ப்பதற்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு இருந்திருக்கின்றது.  அதனை இவ்விடத்தில் கூறுவதற்கு நான் பொருத்தமற்றவன்.  2009 ஆம் பிற்பட்டகாலப்பகுதிகளில் எவ்வாறு இவைகள் நிகழ்கின்றது என்பதைப்பற்றி கூறலாம் என நினைக்கின்றேன்.

மாவீரர்கள் முன்னாள் போராளிகள் சமூகநலன் பேணும் புலம்பெயர் அமைப்புக்கள் மீண்டும் கலை ,களியாட்டம் நிகழ்வுகள். மூலம் பணச் சேகரிப்பில் ஈடுபட்டுவருவதை கணமுடிகின்றது.   பெறப்பட்ட முழுத்தொகையும் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார் பல அமைப்புக்கள் கண்துடைப்பு வேலைகளை மட்டும் செய்கின்றார்கள். உணர்வு பூர்வமான ஈடுபாடுகள், சிலரின் சுயநல விருப்பங்களுக்காக பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு இதனால் புலம்பெயர் தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழீழத் தேசியக்கொடியில் மாற்றங்கள்.   விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை சொந்தமான ஆவணங்கள் புதிய ஊடகங்களினதும் தனிநபர்களினதும் பெயர்களும் இலச்சனைகளும் பொறிக்கப்பட்டு வலம் வருகிறது. தேசிய மாவீரர் எழுச்சி நாளை உரிய முறைகளில் கடைப்பிடிக்காது ஒரு வரையறைகள் அற்று நிகழ்வுகளை நடத்தல். ஈழ விடுதலை தொடர்பாக 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் அமைக்கப்பட அமைப்புக்கள் மக்கள் நலனை மறந்து தங்கள் சுயநலனக்காக இயங்குதல். ஈழத்து உறவுகளின் நலனுக்காக அமைப்புக்கள் சேகரிக்கும் பணத்திற்கான வெளிப்படுத்தல் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

 தமிழீழத் தேசியக்கொடி

 

    தமிழீழத் தேசியக்கொடியில் மாற்றங்கள்.

தமிழீழத் தேசியக்கொடி   தமிழீழத்தின் தேசிய கொடியாக, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கம் பெற்ற கொடி,  விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் 1990ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழீழ நிலப்பரப்பில் புலிகளின் ஆட்சிக் காலப் பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள், பொது நிகழ்வுகள் , தேசிய நினைவு நிகழ்வுகள் என அனைத்து நிகழ்வுகளின் போதும் ஏற்றும் வழக்கம் உருவாகியது.

அதனைத்தொடர்ந்து உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில், தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது என்று கருதும் நிலையிலும்,  புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் தேசியக்கொடியாகத் தமிழீழக் கொடியை தம் இனத்தின் தேசிய கொடியாக உயர்த்தி வருகின்றனர்.

ஈழத் தமிழருக்கு ஆதரவான நிகழ்வுகளின் போது தேசியக் கொடி உலகின் ஏனைய நாடுகளின் மத்தியிலும் தமிழீழத் தேசியக் கொடி பல்வேறு நிகழ்வுகளின் உயர்த்தப்பட்டு தமது தேசியத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 2009ம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப் பகுதிகளில் புலம் பெயர் நாடுகளில் தேசிய நிகழ்வுகளின் போது தமிழீழத் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகளை பார்க்கும் போதும் தேயசிக் கொடி பயன்பட்டிருக்கும்  முறைகளை பார்க்கும் போதும் மன வேதனை தருகிறது.

ஒரு தேசத்தின் இருப்பும் ஒரு நாட்டுக் கொடியின் கீழ் வாழ்பவர்கள் அந்த நாட்டின் மேல் பற்றும் உறுதியும் கொண்டவர்களாக இருப்பார்கள், ஆனால் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் நிகழ்வுகளில் ஏற்றப்படும் கொடிகளில் மாற்றங்களை காண முடிகிறது . எதற்கு இந்த மாற்றம் ? யார் இந்த மாற்றங்களைச் செய்தார்கள்? என விடைகள் இல்லாத வினா என்னுள்.! தேசிக் கொடியை பேச்சாளர்கள் பேசும் பீடத்தில் போடும் முறைமை எப்போது ஆரம்பிக்கப்பட்டது ? இது தெரிந்து அல்லது தெரியாது இடம்பெற்றுவரும் தவறா? தேசியக் கொடியினை மடித்து,  மாதிரி கல்லறைகள் மேல் போடுதல் அல்லது அதனை பக்கவாட்டு கல்லறைகள் மேல் கட்டுதல் சரியா ?தவறா ? கொடியைக் கட்டி அதற்கு பூக்கள் அஞ்சலி செய்யும் முறையினை திணிப்பது யார் ? மன்னிக்கவும் இந்த முறையினை நடைமுறை செய்தது யார் ? கொடியைத் திருவுருவப் படம் போல் பயன்படுத்தி அதற்கு அஞ்சலி விளக்கேற்றி மலர் அஞ்சலி செய்யும் புது கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது யார் ? கொடிகளை எப்படி பயன்படுத்துவது என தெரியாது, வித்துடல்கள் மேலும் நினைவுக் கல்லறைகள் மேலும் , வீடுகளின் சுவர்களின் மேலும், தேசிய நிகழ்வுகளிலும்,  போராட்டங்களிலும் பயன்படுத்தும் கொடிகளுக்கு உரிய வேறுபாடுகள் தெரியாத நிலையில் தமிழர் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் ஆர்வம் கொண்ட தேசியச் செயற்பாட்டாளர்கள் உள்ளார்களா? என என்னுள் விடையில்லாத வினாக்களுக்கு விடை கிடைத்த பதில் தான் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை . அதனை தமிழீழ மாவீரர் பணிமனை முதல்வர் திரு பொண் தியாகம் அப்பாவின் ஆலோசனையிலும் வழிநடத்தலிலும் ஒருதொகுப்பு நூலினை உருவாக்கிட வேண்டும் என்று உருவாகிய தொகுப்புத் தான் காந்தள் கரிகாலன்.என்னும்   நூல் .

               

     விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை சொந்தமான ஆவணங்கள் புதிய ஊடகங்களினதும் தனிநபர்களினதும் பெயர்களும் இலச்சனைகளும் பொறிக்கப்பட்டு வலம் வருகிறது. NTT- தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஒளி ஊடகமான தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ( NTT-) ஒளிபரப்பை பலத்த சிரமங்களில் மத்தியில் தனது சிறப்பான சேவையை வழங்கி உள்ளது. அன்று பல நாடுகளில் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தங்கு தடையின்றி மக்கள் பார்வையிட்டிருக்கின்றார்கள். நிதர்சனப்பிரிவு- பல நேரடி சமர்க்களங்களை படம் பிடித்து வெளியிட்டு வந்தது ஒரு ஊடகம். இது உண்மையான காட்சிப் பதிவின் மூலம் பல ஆவணத் திரைப்படங்களை வெளியிட்டு வந்தது. இப்பிரிவில் இருந்த போராளிகள் சண்டை நடக்கும் பொழுது சக போராளிகளுடன் இணைந்து படப்பிடிப்பு செய்து வந்தவர்கள். புகைப்படப்பிரிவு –புகைப்படங்கள் துயரங்களை அப்படியே பதிவாக்குகிற படைப்பு. புகைப்படங்களைப் பிடிக்கிற பல களமுனைகளையும் தளத்தில் சமூக அரசியல், கலை, கலாசார, அபிவிருத்தி நிகழ்வுகளின் போது நியமங்களை நிழல்கள் ஆக்கிய ஒரு பிரிவு அன்று ஈழத்திலும் வெளி இடங்களிலும் வெளியாகிய செய்தி ஊடகங்களின் தேவைகளுக்கும் ஆவணத் தேவைகளுக்காகவும் தேவையான புகைப்படங்களை புகைப்படப்பிரிவு ஈழத்து மிக உன்னதமான கடமையை ஆரம்பம் முதல் 2009 இறுதி வரைசெய்து வந்திருக்கிறது. குறிப்பாக இன்று இன அழிப்பின் சாட்சியாய் நிழல்  பேசுகின்றது புகைப்படங்கள். புலிகளின் குரல்- இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான அறிவித்தல்கள் இவ்வானொலிச் சேவை மூலமே விடுதலைப்புலிகளால் வழங்கப் பெற்றது. ஆரம்பம் முதல் 2009 இறுதிவரை சமர் செய்து நிலங்களை மீட்க உதவியது. எந்தெந்தப் பகுதி மக்கள் எங்கெங்கு செல்ல வேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் இவ் வானொலி மூலமே மக்களுக்கு வழங்கப்பட்டது. பாதுகாப்பாக விலகிக் கொண்டனர், இலங்கை இராணுவப் படையினருக்காகவும், சிங்கள மக்களுக்காகவும் புலிகளின் குரலின் சிங்கள சேவையும் வழங்கி இருக்கின்றது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்காக இணையத்தளத்தினூடாக இயங்கத் தொடங்கு இன்றும் இணையம் ஊடாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

இவ் ஊடகம் பிரிவுகளின் பணி  ஈழ விடுதலையின் அவசியத்தை உலகளாவிய தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்வதாக அமைந்திருந்தது இலங்கை இராணுவத்தின் படை முன்னெடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் செய்தியாக வெளியிட்டு ஈழ மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும் உடனுக்குடன் நாட்டு நடப்புக்களை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது இவர்களது  கடமையாக இருந்திருக்கிறது.

 NTT தொலைக்காட்சியில். விடுதலைப் புலிகளின் நிதர்சனம், ஒளிவீச்சு போன்ற பிரிவுகளால் தயாரிக்கப்படும் குறும்படங்கள், ஆவணப்படங்கள், மாவீரர் காணொளிகள், படைத் தளபதிகளின் செவ்விகள், களச்சமர் அனுபவப்பகிர்வுகள் கலை நிகழ்வுகள் , போன்றவை ஒளிபரப்பப்பட்டு பல அருமையான நிகழ்ச்சிகளை ஒளி பரப்பியதுடன் பல படைப்பாளிகளை உருவாக்கி வளர்த்தது. கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு மட்டுமன்றி எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான சேவையையும் செய்தது.

தமிழீழ கட்டமைப்பில் புகைப்படம்பிரிவு ,  நிதர்சனப் பிரிவு நிறுவனங்கள் பல்துறை சார் ஆளுமைகளை கொண்டு பல வருடகாலமாக இயங்கியவந்த ஒன்று.போராளிகளினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு இணையங்களில் வெளி வந்த படங்களையும் பலர் தங்களது பெயர்கள்,  இணையங்களின் பெயர்கள்,  குறியீடுகள் என பல பதிந்து வெளியிடுகின்றார்கள்.  போராட்ட வரலாற்று ஆவணங்களை பலர்  தனிமனிதனகாவும் ,  இணைய ஊடகங்களாகவும் உரிமை கூறாதீர்கள் . ஒரு வரலாற்று  செயற்பாடுகளை  உரிமம் கோருவது  மிகவும் மனவருத்தம் தரும் விடயம . புகைப்படப்பிரிவு, NTT, நிதர்சனப் பிரிவின் ஆவணம்  குறிப்பாக விடுதலைப்புலிகளின் ஊடகத் துறையின் ஆவணங்களின் இலச்சனைகளை மறைத்து புதிய அமைப்புக்களின் பெயர்களை போடுவதன் ஊடாக ஒரு அமைப்பின் ஊடகத்துறையின் இருப்பை இல்லாமல் செய்தலுக்கு ஒப்பானது.

இவ்வாறு 2009 ஆண்டிற்கு முன்னர் இயங்கிவந்த தமிழீழத் தேசிய ஊடகமாக இயங்கிவந்த பரிசில் இருந்து இயங்கிவந்த புலிகளின் குரல் இணைய ஒலிபரப்பையும், TTNன் தமிழ் ஒளியின் இருப்பை இல்லாமல் செய்வதில் முக முனைப்புடன்  அமைப்புக்கள் ஆர்வம்காட்டி வருவது ஏன்?

புலம்பெயர் நாடுகளில் விடுதலை புலிகள் உருவாக்கிய கட்டமைப்பை சிதைப்பதும் அதன் மீது நம்பிக்கையில்லா தன்மையை உருவாக்கி விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பைபுக்களிடம்  விடுதலைப்புலிகள் ஈழத்தில் இருந்தபோது பரிமாறப்பட்ட விலைமதிப்பில்லா ஆவணங்களையும் உண்மை சம்பவங்கள் நிகழ்வுகள் பாரிய எழுத்து முறையிலான புகைப்படங்கள் ,  ஒலி , ஒளி நாடக்கள்  ,  வரலாற்று நூல்கள் ,  கட்டுரைகள் நேரடி சாட்சியங்களை போராட்டமாக ஆவண போராட்டமாக  இன்றும் உயிப்புடன் இருக்கின்றது. ஆனால் எமது போராட்டத்தை துரோகிகள் தமது கையில் வைத்து குளிர்காய்கின்றார்கள்.அதற்கான செயல் வடிவத்தை புலத்தில் இருக்கும் சில அமைப்புக்களும், தனிநபர்களும் , குழுக்களும் ஆயுத போராட்டம் மௌனித்து ஊடகத்தை அழித்து  விடுவதே சிங்கள ஏகாதிபத்தியத்தின் முன்னணி கொள்கைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

அமைப்புக்களின் பெயர்களில் தமிழீழம் என முன்னுக்கு தொடங்கியிருந்தால்    தமிழீழத்தினை  நீக்கி தமிழர் என பயன்படுத்தி உதரணாமாக தமிழீழ கல்விப் பேரவை 2009க்குப்பின் தமிழர் கல்விப்பேரவையாக மாற்றம் பெற்றது. இது போன்ற பல நிறுவனங்கள் தங்கள் பெயர்களை மாற்றி உள்ளார்கள்.  அதை கேட்கும் போது பாதுகாப்பு பிரச்சனை காரணம் என்கின்றார்கள்.  2009ம் ஆண்டிற்கு முன்னர் கட்டமைப்பின் கீழ் இயங்கிவந்த வியாபார நிலையங்களை தமது சொந்த நிறுவனங்களாக மாற்றி உள்ளார்கள். புலம்பெயர் மக்கள் ஈழத்து மக்களுக்கு கூறும் தாரக மந்திரம் “உரியவர்கள் வரும்போது அவர்களுக்கு கணக்கு காட்டுவோம்” என்பதுதான்.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி வளர்ச்சி அதன் கட்டமைப்புக்களை இல்லாது அழிப்பதில் ஆர்வம் காட்ட  புலம்பெயர் உறவுகள், தாயக விடுதலைத் தீயில் வென்ச்சமர் ஆடிய உறவுகளை நினைக்க வேண்டும்.தளங்களிலும் தங்கள் சார் அமைப்புகளிலும் ஆரோக்கியமான மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். அதுவே தேச விடுதலைக்கு சரியான வழி அமைக்கும்.

     

   

    தேசிய மாவீரர் எழுச்சி நாளை உரிய முறைகளில் கடைப்பிடிக்காது ஒரு வரையறைகள் அற்று நிகழ்வுகளை நடத்தல்.

பல நெருக்கடிக்கு மத்தியிலும் உரிய நேரங்களுக்கு நிகழ்வுகள் பிப 6.03 மணி ஒலித்திட நடந்தேறியது ஈழத்தில் 2016ம் 2017ம் ஆண்டுகளில்  இப்படி தொடந்து ஒழுங்கு முறையுடன் நடத்திட, புலம்பெயர்ந்து வாழும் நாம் பிப 6.28,6.15,6.20,7.00 ,7.15,7.30 மறுநாள் 28/11/ வரும் நாட்களில் மாவீரர் நினைவு நாள் வந்தால் சில இடங்களில் அந்த வாரத்தில். வார சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் நிகழ்வினை நடத்துகின்றோம். சில இடங்களில் தேசிய கொடி ஏற்றுவதில்லை தேசிய கொடி வணக்கப் பாடல் இசைப்பதில்லை , மாவீரர் துயிலுமில்ல பாடல் போடுவதில்லை , படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதி இல்லை.

என்னவெனில் பாதுகாப்பு பிரச்சனை (ஈழத்தில் இருந்து  2016ம்2017ம் ஆண்டுகள் எல்லா விடயங்களும் நேரலையில்)  துயலுமில்லப் பாடல்  ஒலிக்கும். போது இடையில் அறிவிப்பு இடம் பெறுகின்றது.  புலம்பெயர் நாடுகளில் உள்ள சில நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர் எழுச்சி நாட்கள் நடாத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நிகழ்வுகளை செய்பவர்கள் குழுக்களாகப் பிரிந்து தன்னிச்சையாக இயங்குவது தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதையும் அரசியல் ரீதியில் பலவீனமாகவே இருக்கின்றோம் என்பதையும்தான் காட்டுகின்றது.  இவ்வாறான செயற்பாடுகள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் சிந்தனையை, அல்லது அதன் செயற்பாடுகளை சீர்குலைத்துவிடும்.

பன்மைத்துவத்தை மக்களின் விடுதலைக்காக தமது உயிர்களைத் துறந்த மாவீரர்களின் நினைவில் காட்டி ஜனநாயகத்தை நிறுவமுடியாது. இது வெறும் குழுமனப்பாங்கையே வளர்க்கும். ஆனால் எம்மவர்களின் மாவீரர் எழுச்சி தினம் என்பது வருடா வருடம் வரும், தீபாவளி, தைப்பொங்கல், வருடப்பிறப்பு, கிருஸ்மஸ் தினங்கள் மாதிரி உருவாக்கப்பட்டு இந்த தினத்திற்கு செல்வதற்கு என்றே புதிய ஆடை அணிகலன்களை வாங்குவது, மெருகுபடுத்துவது  ஈடாக  வீர வணக்க நிகழ்வுகளும் ஆடம்பரம், இடாம்பீகம், பகட்டு, களியாட்ட நிகழ்வுகளாக மாறிவிட்டதோ என்ற ஏக்கம் உள்ளது.

மாவீரர்கள் நினைவுநாளை புலம்பெயர் நாடுகளின் குழப்பங்கள் மனவேதனைகளை தருகின்ற விடயமாகும் போரின் வடுக்களை சுமந்து எச்சங்களாய், சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாக, வறுமையில் வாழ்பவர்கள், உறவுகளை தொலைத்து துன்புற்று இருப்பவர்கள் எம் கண்முன்னே வாழும், போருக்கு பிந்திய மனிதர்களை அவர்களின் உணர்வுகளை வதைக்கும் நிகழ்வகளாக மாறிவிடுகின்றது புலம்பெயர் தேசத்தில் தேசிய நிகழ்வுகள்.

    ஈழ விடுதலை தொடர்பாக 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் அமைக்கப்பட அமைப்புக்கள் மக்கள் நலனை மறந்து தங்கள் சுயனலனக்காக இயங்குதல்.

 உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மாவீரர் எழுச்சி நாளை அனுஷ்டிக்கின்றார்கள் . ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் திகதி  நிலத்திலும் புலத்திலும் தமிழருக்கு மிக முக்கியமான நாள். ஈழப் போரில் உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூறும் இந்த நாளில்  அமெரிக்கா முதல் நார்வே வரையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த எழுச்சி நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள்   செய்கின்றார்கள்.  இதில் மூடிய அறைக்குள் கூட்டங்களை நடத்தி வரும் தமிழ் சமுக அமைப்புக்கள், மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வுகளை திட்டமிட்டல்களில் எதற்கு தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களை புறக்கணிக்கின்றார்கள்?

இவ்வாறு நிகழ்வுகளை நடத்தும் அமைப்புக்கள், ஒரு குடும்ப அமைப்பா ?ஒரு ஊர் அமைப்பா?  சாதிய அமைப்பா ? என்ற கேள்வி எழுகின்றது. இது விடுதலைக்கென்று புறப்பட்டு உயிர்விட்ட அனைவரையும் நினைவு கூரும் நிகழ்வு. இந்த நிகழ்வு பூட்டினைத்திறந்து,கூட்டங்களை நடத்துவது அமைப்புகளுக்கு  பொருத்தமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.

 என்கருத்துகளில் நியாயம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்…,2009ம் ஆண்டு தொடக்கம்  மாவீரர் எழுச்சி நாள்,  மே18 இந்த இரு நிகழ்வுகளும் வெகு எழிச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது. அபிவித்தி அடைந்த நாடுகளில் (லண்டன், சுவிஸ், பிரான்ஸ், ஜெர்மனி, அவுஸ்ரேலியா, டென்மார்க், அமேரிக்கா) உள்ள ஈழத்தமிழர்களிடம் பெருந்தொகையான நிதி, இந்த இரு நிகழ்வுகளுக்காகவும் சேர்க்கப்படுகின்றது.  இந்த நிதி பயன்பாட்டின் செயற்திட்டங்கள் என்ன? இவை எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது குறித்து புலம்பெயர்தேசத்தில் உள்ள மக்களுக்கே தெளிவற்ற நிலைதான் காணப்படுகின்றது.

 இவ்வாறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பங்களிப்பில் நடைபெற்றுள்ள நிகழ்வுகளில் சேகரிக்கப்பட்ட அல்லது சேமிக்கப்பட்ட நிதியினை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அபிவிருத்திக்கு பயன்படுத்தியிருந்தால் தனிநபர், குடும்பம் , கிராமம், பிரதேசம், மாவட்டம் , மாகாணம் என இன்று பல அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்த்திருக்க முடியும்.  இன்று எமது உறவுகள் அடுத்த வேளை உணவுக்கு கையேந்தி நிற்க வேண்டிய தேவை இருந்திருக்காது. ஓவ்வொரு நாடுகளிலும் நாம்  மிக  ஆடம்பரமாக மாவீரர் நினைவெழுச்சி நாளை  நினைவுகூறுகின்றோம். இந்நிகழ்வு முடிந்ததும் உணவு விருந்து களியாட்டங்கள் என எமது செயற்பாட்டினை மறந்து விடுகின்றோம்  என்பது கவலை தரும் விடயம் .

கடலூரான் சுமன் :-  உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில்களைத் தந்தமைக்கு மிக மிக நன்றி

நிலவன் :-  நன்றி தம்பி உங்கள் கேள்விக்கு என்ன பதில்  பகுதியில் என்னை இணைத்துக்கொண்டமைக்கு