தீயான பெரும் தீ - ச.ச.முத்து

சனி சனவரி 16, 2016

கிட்டண்ணா,

சோதிப்பிழம்பு நீ,

எங்களின் விடுதலைக்கான வீரதளபதி நீ,

என் தேசச்சின்னஞ்சிறு தெருக்களையும்

போராடச் சொல்லிக் கொடுத்த பெரும்

சண்டைக்காரன் நீ.

நிலம்வாழும் வரைக்கும் உன் பெயர்சொல்லி

ஈழம் சிலிர்த்துநிற்கும்.

காலப்பெருவெளியில் நீ தீயில் கரைந்து

ஆண்டுகள் இருபத்துமூன்று  ஓடிமறைந்தது.

ஆனாலும் காலம்முழுதும் உன்பெயரும்

நீ மூட்டிவிட்ட பெரும் விடுதலைத்தீயும்

எம் நினைவில் எப்போதும் வந்து வந்து

உள்மனதில் ஒரு தகதகப்பை தந்துநிற்கும்.

கொஞ்சம் ஆயுதங்கள், சிறிய தொகை போராளிகள்

இப்படி வைத்துக்கொண்டு நீ எதிரி ராணுவத்தை

முகாம்களுக்குள் முடக்கிவைத்த வியுகம் இன்றைக்கும்

புரியமுடியாப் பெரும்புதிர்தான்.

ஆனாலும் கிட்டண்ணா, நீ சாதித்துக் காட்டினாய்.

யாழ்ப்பாணத்து சிங்களப்படை முகாம்களுக்குள்

அவர்களை முடங்கவைத்தாய்.

முக்கிமுணகி பெரும் பாடுபட்டு அவர்கள்

வெளிவர நகரும்போதேல்லாம்

எந்த இரவானாலும் எத்தனை தூரமெனினும்
 
நீயே முன்னுக்கு ஓடிவந்து நின்று

நெஞ்சை நிமிர்த்திப் போரிட்டாய்.

இன்னும் நெஞ்சுக்குள் நிற்கிறது.

நீ போரிடும் அந்தப் பேரழகு.

பக்கத்துப் போராளியின் ஜி3 யை வாங்கி நீ

சுடும்வேகத்தில் சிங்களம் மீண்டும்

வாலைச் சுருட்டிக்கொண்டு முகாமுக்குள் பதுங்கும்.

ஏங்களின் தாயகத்துப் போரின் அனைத்து

வளர்ச்சியிலும் உன் பெயரே பதிந்திருக்கும் அற்புதமல்லோ நீ.

எப்போதும் இயங்கிக்கொண்டிருந்த பெருநெருப்பு நீ.

இப்போதும் நீ தேவை ஈழத்துக்கு!

பொல்லாத பெரும் பின்னடைவில்நாம் நிற்கும் இந்த

பொழுதிலும் நீ இருந்தால் விடுதலைம் தேரை மெதுவாக

முன்னகர்த்தி கொண்டுசெல்வாய் கிட்டண்ணா!

ஆண்டுகள் இருபத்துமூன்று  ஆனாலும் கிட்டண்ணா

நீங்கள் சுமந்த இலட்சியப் பெருங்கனலும்

இதோ தமிழன் எழுந்துவிட்டான் என்று

வீரமுடன் நீங்கள் கால்பதித்த தமிழீழ தெருக்களும்

நீங்கள் வளர்த்துவிட்ட போராட்டமும்

எல்லாமும் எப்போதும் ஒருபோதும் மறையாது!

நாளை எழுகின்ற ஈழத்துக்குருத்துகளும்,

இருள்கிழித்து வெளிவரப்போகும் விடுதலைச்சூரியனும்

உங்கள் பெயர்சொல்லியே மீளவரும்!!

ஓங்கி ஒருபொழுதில் உலகத்து மனச்சாட்சியில்

நாம் அறைவோம்!! நாம் அடிமை இல்லையென்றே!!!

உரத்து நாம் திரள்வோம்!!விடுதலையே எமது மூச்சு என்றே!!!!

வாருங்கள்!சேருங்கள்!!!

எழுவோம்!! தொடர்வோம்!!