துரோகிகளின் கூடாரமாகின்றதா இலண்டன் லூசியம் சிவன் கோவில்?

புதன் அக்டோபர் 03, 2018

தமிழீழ தாயகத்தில் உள்ள சைவ ஆலயங்களை ஆக்கிரமித்து, அவற்றின் இடத்தில் பௌத்த விகாரைகளை நிறுவி வரும் வடக்கு மாகாணத்தின் சிங்கள ஆளுநர் ரெஜினோல்ட் கூரே க்குக் களம் அமைத்துக் கொடுக்கும் பொதுக்கூட்டம் ஒன்றை இலண்டன் லூசியம் (Lewisham) சிவன் கோவிலில் நடாத்த இடமளிக்க அதன் நிர்வாகம் முன்வந்திருப்பது பிரித்தானியாவாழ் ஈழத்து சிவத்தொண்டர்களைக் கடும் சீற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லூசியம் சிவன் கோவில் மண்டபத்தில் அன்னை பூபதியின் நினைவெழுச்சி நாள் நிகழ்வை நடாத்துவதற்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அனுமதி கோரிய பொழுது, ஆலயத்தில் அரசியல் நிகழ்வுகளை நடாத்த அனுமதிக்க முடியாது என்று கூறி அம் மண்டபத்தை வழங்க கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் வடதமிழீழத்தில் சைவ ஆலயங்களை அழிப்பதில் முன்னிற்கும் சிங்கள ஆக்கிரமிப்பு ஆளுநருக்கு செங்கம்பளம் விரித்து, அவரது அரசியல் கூட்டத்தைத் தமது ஆலயத்தில் நடாத்த இடமளிக்க லூசியம் சிவன் கோவில் நிர்வாகம் முன்வந்திருப்பது சைவநெறிக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என்று தமது கடும் கண்டனத்தை சங்கதி-24 இணையத்திற்குச் சிவத்தொண்டர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.

இத்துரோகச் செயலுக்கு உடனடியாக லூசியம் சிவன் கோவில் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்கத் தவறும் பட்சத்தில், அது பௌத்த மேலாதிக்கத்தினதும், சைவநெறியினது துரோகிகளினதும் கூடாரமாக இனம் காணப்பட்டு பிரித்தானியாவில் உள்ள ஈழத்து சிவத்தொண்டர்களாலும், சைவப் பெருமக்களாலும் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்படும்; நிலை தோன்றும் என்று சிவத்தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.