தூங்கும் தமிழினம் எழுச்சி கொள்ளும் தருணம் - கலாநிதி சேரமான்

Sunday October 08, 2017

அடங்கிக் கிடந்த தேசங்கள், அடக்கப்பட்ட தேசங்கள், தமது அரசியல் வேணவாவை உலகிற்கு இடித்துரைப்பதற்கான காலம் கனிந்து விட்டதையே குர்திஸ்தான், கற்றலானா ஆகிய தேசங்களில் எழுச்சி பெற்றுள்ள தனியரசுக்கான சுதந்திர இயக்கங்கள் உணர்த்துகின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்நிய அரசுகளிடம் தமது இறைமையைப் பறிகொடுத்தாலும் தமது இறைமையை மீளவும் நிலைநாட்டுவதில் இத்தேசங்கள் ஓர்மத்துடன் தான் இருக்கின்றன.

1923ஆம் ஆண்டு கையெழுத்தாகிய லுசேர்ண் ஒப்பந்தத்தின் விளைவாக துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிடையே குர்திஸ்தான் நாடு துண்டாடப்பட, அன்று சீற்றம்கொண்டு கிளர்ந்த குர்தி மக்கள், குர்திஸ்தான் தனியரசை அமைப்பதற்கான சுதந்திர இயக்கத்தை உருவாக்கினார்கள்.

இதற்கு ஓராண்டுக்கு முன்னர் 1922ஆம் ஆண்டு ஸ்பெய்னில் இருந்து பிரிந்து சென்று கற்றலானா தனியரசை அமைப்பதற்கான சுதந்திர இயக்கம் (அரசியல் வழியிலானது) கற்றலானா தேசத்தில் தொடங்கப்பட்டது.

இதே ஆண்டில் தான் தமிழீழத்திற்கான கருத்தியலும் ஈழத்தீவில் முகிழ்த்தது. பிரித்தானியர்கள் அறிமுகம் செய்த தேர்தல் முறைமை ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்குச் சாவுமணியாக அமைவதை உணர்ந்து கொண்ட அன்றைய தமிழ்த் தலைவர்களில் சிலர், தமிழர்களின் வரலாற்றுத் தாயமாகிய வடக்குக் கிழக்கு பிராந்தியத்திற்கென்று பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு உட்பட்ட தனியான நிர்வாக அலகு உருவாக்கப்படுவதை முதலாம் உலகப் போருக்கு முன்னர் இருந்தே வலியுறுத்தி வந்தார்கள். இக் கோரிக்கைகளின் அடுத்த படிநிலை வளர்ச்சியாகவே 1922ஆம் ஆண்டில் முதன்முறையாக ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகிய வடக்குக் கிழக்குப் பிராந்தியத்திற்குத் தமிழீழம் என்ற பெயரை சேர் பொன். அருணாச்சலம் அவர்கள் சூட்டினார்.

1619ஆம் ஆண்டு சங்கிலி மன்னனின் வீழ்ச்சியை அடுத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வழிவந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் வாரிசுகளான இமெல்டா சகோதரிகளால் ஈழத்தமிழர்களின் இறைமை போர்த்துக்கேயர்களிடம் தாரைவார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று நூற்றாண்டுகளாக அரசு அற்ற தேசமாக விளங்கிய ஈழத்தமிழர்கள், தமது இறைமையை மீளவும் ஈழத்தீவில் நிலைநாட்டுவதற்கான சுதந்திர இயக்கத்தைத் தொடங்குவதற்கு இப்பெயர் சூட்டல் வழிகோலியது.

குர்திஸ்தான் தனியரசுக்கான சுதந்திர இயக்கமாக இருந்தாலும் சரி, கற்றலானா தனியரசுக்கான சுதந்திர இயக்கமாக இருந்தாலும் சரி, தமிழீழத் தனியரசுக்கான சுதந்திர இயக்கமாக இருந்தாலும் சரி, இம் மூன்று சுதந்திர இயக்கங்களும் தொடங்கப்பட்டு இன்னும் சில ஆண்டுகளில் ஒரு நூற்றாண்டு காலம் நிறைவுக்கு வந்து விடும்.

இதில் குர்திஸ்தான், கற்றலானா ஆகிய இரு தேசங்களின் சுதந்திர இயக்கங்களும் உயிர்ப்புடன் இருப்பதையே கடந்த வாரமும், இவ்வாரமும் இவ்விரு தேசங்களிலும் நடைபெற்ற தனியரசுக்கான வாக்கெடுப்புக்கள் உணர்த்துகின்றன. ஆனால் தமிழீழ சுதந்திர இயக்கத்தின் நிலை?

புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் மட்டுமே தமிழீழத் தனியரசு பற்றிப் பேசப்படுகின்றது. ஆனாலும் கூட புலம்பெயர் தேசங்களிலும் சரி, தமிழகத்திலும் சரி, தமிழீழத் தனியரசை வலியுறுத்தும் வலிமையான சுதந்திர இயக்கம் ஒன்று இயங்குவதாக நாம் பெருமைப்பட முடியாது.

இடையிடையே ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை பற்றியும், ஐ.நா. மன்றின் அனுசரணையுடன் தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடுப்பு நடத்தப் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அறிக்கைகள் வெளியிடப்படும். கொட்டெலிகள் எழுப்பப்படும்.

அவ்வளவுதான்.

தமிழீழ தாயகத்திலோ நிலைமை இன்னும் மோசம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரான கடந்த எட்டரை ஆண்டுகளில் தமிழீழத் தனியரசுக்கான கருத்துப் பகிர்வுகளோ, அன்றி அரசியல் விவாதங்களோ துளியளவுக்குக் கூட தமிழீழ தாயகத்தில் இடம்பெறுவது கிடையாது.

இதற்கு 1983ஆம் ஆண்டு கறுப்பு ஆடி இனவழிப்பைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டு வரப்பட்ட ஆறாம் திருத்தச் சட்டம் நடைமுறையில் இருப்பது முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகின்றது.

உண்மைதான். தமிழீழத் தனியரசை வலியுறுத்துவோருக்கு ஏழாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை, சொத்துப் பறிமுதல், குடியியல் உரிமை இழப்பு என கடுமையான தண்டனைகளை ஆறாம் திருத்தச் சட்டம் விதிக்கின்றது.

இதனால் தனியரசு பற்றிப் பேசுவதற்கு அரசியல்வாதிகள் மட்டுமன்றி சாதாரண மக்களும் அஞ்சுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

ஆனால் இதற்காக ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல்கொடுக்காது வாளாவிருப்பது அபத்தமானது. பிரிவினையை வலியுறுத்தி அரசியல் செய்வதை மட்டும் தண்டனைக்குரிய குற்றமாக ஆறாம் திருத்தச் சட்டம் வரையறுக்கின்றதே தவிர, இச் சட்டம் நீக்கப்படுவதை வலியுறுத்தி ஒரு அரசியல் இயக்கம் தொடங்கப்படுவதை அது தடை செய்யவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.

ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான எந்தவொரு உருப்படியான அரசியல் தீர்வையும், எந்தக் காலத்திலும் சிங்கள ஆட்சியாளர்கள் வழங்கப் போவதில்லை என்பதையே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மைத்திரி-ரணில் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் புதிய அரசியலமைப்பிற்கான வரைபு நிரூபிக்கின்றது.

இவ்வாறான பின்புலத்தில் சமஸ்டி பற்றித் தமிழ் மக்களோ, அன்றி தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளோ இனியும் பேசிக் கொண்டிருப்பதில் எந்தவொரு அர்த்தமும் இருக்கப் போவதில்லை. இவ்விடயத்தில் சம்பந்தர் மட்டுமன்றி விக்னேஸ்வரனும் மூக்குடைபட்டுப் போய் இருக்கின்றார்கள்.

இப்பொழுது தமிழீழ மக்களுக்கு இருப்பது ஒரேயொரு தெரிவுதான்.

குர்திஸ்தான், கற்றலோனா ஆகிய தேசங்களில் சனநாயக வழியில் எழுச்சி பெற்றிருக்கும் தனியரசுக்கான சுதந்திர இயக்கங்களைப் போன்று, தமிழீழத் தனியரசுக்கான சுதந்திர இயக்கம் ஒன்றை சனநாயக வழியில் உருவாக்குவதுதான் அது. இதன் அர்த்தம் தமிழ் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் போன்றவை ஒரே குடையின் கீழ் வர வேண்டுமென்பதல்ல.

தனித்தனியாக ஒவ்வொரு தரப்பினரும் தமிழீழத் தனியரசுக்கான கருத்துருவாக்கத்தைத் தொடங்கலாம். இதுவே ஒரு இயக்கமாக வளரும்.

இதில் இன்றைய சூழமைவில், அதுவும் ஆறாம் திருத்தச் சட்டம் என்ற கொடுஞ்சட்டம் அமுலில் இருக்கும் பின்புலத்தில், தமிழீழ தாயகத்தில் தமிழீழத் தனியரசுக்கான கருத்துருவாக்கம் என்பது ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கமாக முதலில் வடிவம் எடுக்கலாம்.

தமது அரசியல் தலைவிதியை ஈழத்தமிழர்கள் நிர்ணயிப்பதற்கும், தமது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆறாம் திருத்தச் சட்டம் என்ற கொடுஞ் சட்டம் தடையாக இருக்கின்றது என்பதை உலகிற்கு இடித்துரைக்கும் வகையிலும், இச்சட்டம் நீக்கப்படாமல் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விதத்திலும் அவ் இயக்கம் அமைய வேண்டும். இவ்வாறானதொரு மக்கள் இயக்கம் தமிழீழ தாயகத்தில் தோற்றம் பெறும் பட்சத்தில், அது புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் உறங்கிக் கொண்டிருக்கும் தமிழீழத் தனியரசுக்கான சுதந்திர இயக்கத்தைத் தட்டியெழுப்பும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் ஆயுத எதிர்ப்பியக்கமாகத் தமிழீழ தனியரசுக்கான சுதந்திர இயக்கம் முன்னெடுக்கப்பட்ட பொழுது அதனை பயங்கரவாதம் என்றும் உலகம் சிறுமைப்படுத்தியது. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, அரசியல் வழியில் தமது உரிமைகளுக்கான போராட்டத்தைத் தமிழர்கள் முன்னெடுத்தால், அதற்கு உலகம் பக்கபலமாக நிற்கும் என்று முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அஸ்லி வில்ஸ் தொடக்கம் முன்னாள் நோர்வீஜிய சிறப்புத் தூதுவர் எரிக் சுல்கைம் வரை அன்றைய காலகட்டத்தில் தமிழர்களிடம் போதித்தார்கள்.

தமிழீழத் தனியரசுக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு எட்டரை ஆண்டுகள் அண்மித்து விட்டன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தனியரசுக்கான சுதந்திர இயக்கத்தை அரசியல் ரீதியில் முன்னெடுக்காது ஈழத்தமிழினம் உறங்குகின்றது.

குர்திஸ்தானிலும், கற்றலானாவிலும் எழுச்சி பெற்றிருக்கும் தனியரசுக்கான சுதந்திர இயக்கங்கள், தமிழீழ தேசம் உறக்கத்தில் இருந்து விழுத்தெழுவதற்கான தருணம் வந்து விட்டதையே கட்டியம் கூறுகின்றன.

இத்தருணத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதை ஒன்றை உறங்கும் எம்மவர்களுக்குச் சமர்ப்பணமாக்குவது பொருத்தமானது:

தூங்கும் புலியைப் பறை கொண்டெழுப்பினோம்.
தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்.
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்.
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்.
பண்டைப் பெரும் புகழ்; உடையோமா இல்லையா?
பாருக்கு வீரத்தைச் சொன்னோமா இல்லையா?
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?
தமிழ் காப்போம் என்றோம் எழுந்தாரா இல்லையா?
தமிழக்குயிர் தர இசைந்தாரா இல்லையா?
தமிழ்வாழ்ந்தால் தமிழர் வாழ்வார்கள் என்றோம்
தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா?
செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?
முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா?
தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?

நன்றி: ஈழமுரசு