தூசி தட்டப்படும் மாத்தையா அணி – இந்தியா உருவாக்கும் போலிப்புலிகள்!

செவ்வாய் நவம்பர் 13, 2018

இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ நிறுவனத்தின் உளவாளியாக செயற்பட்ட துரோகி மாத்தையாவின் விசுவாசிகளின் ஒருங்கிணைப்பில், போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றை இந்தியா உருவாக்கி வருவது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் சங்கதி-24 இணையத்தளத்திற்குக் கிடைத்துள்ளன.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினராகத் திகழ்ந்து பின் நாட்களில் இயக்கத்தின் பிரதித் தலைவராக உயர்ந்தவர் மாத்தையா என்றழைக்கப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா.

 

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் படுகொலை செய்வதற்கான சதி முயற்சியில் ஈடுபட்ட பொழுது, உரிய நேரத்தில் தமிழீழ தேசிய புலனாய்வுத்துறையினரால் சதி முறியடிக்கப்பட்டு, குற்றங்கள் நிரூபணமாகிய நிலையில் 28.12.1994 அன்று மாத்தையாவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Mathya
மாத்தையா

 

இச் சதி நடவடிக்கையில் ஈடுபட்ட மாத்தையாவின் ஏனைய சகாக்கள் சிலருக்கு குற்றங்கள் நிரூபணமாகிய நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மரண தண்டனை வழங்கப்பட்டது. எனினும் மாத்தையாவின் விசுவாசிகள் சிலர், குற்றங்கள் நிரூபணமாகாத நிலையில் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டதோடு, சிலர் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 

இவ்வாறான சிலரையும், குற்றங்கள் நிரூபணமாகாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட இன்னும் சிலரையும் பயன்படுத்திப் போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்திய வெளியகப் புலனாய்வு நிறுவனமான றோ உருவாக்கி வருவது பற்றிய நம்பகமான தகவல்கள் புதுடில்லியில் இயங்கும் சவுத் புளொக் (South Block) பிரிவுடன் தொடர்பைப் பேணி வரும் முன்னணி வட இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர் ஊடாக சங்கதி-24 இணையத்தளத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

 

மாத்தையாவின் சகாக்களில் ஒருவரான கிருபனின் (றோ அரங்கேற்றிய வேலூர் சிறையுடைப்பு நாடகத்தின் கதாநாயகர்) நெருங்கிய நண்பர் (தற்பொழுது கனடாவில் வசித்து வருபவர்) ஒருவரே றோ உருவாக்கி வரும் போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்காலிக ஒருங்கிணைப்பாளராக செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

மாத்தையா விவகாரத்தில் கைது செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபணமாகாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட இடைநிலைத் தளபதிகளில் இவரும் ஒருவராவார்.

 

இவருக்குப் பக்கபலமாக, தற்பொழுது யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியரான பரந்தாமன் (பொபி அல்லது வழுதி) மற்றும் தற்பொழுது சுவிற்சர்லாந்தில் வசித்து வரும் விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சு.ரவி ஆகியோர் ஈடுபடுவதாக தெரிய வருகின்றது.

Ravi
சு.ரவி

 

ஆவா குழு என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் தெருச்சண்டியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தென்னிலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

இத் தெருச்சண்டியர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகளை பொபி அல்லது வழுதி என்றழைக்கப்படும் பரந்தாமன் அவர்கள் மேற்கொண்டதாகவும், பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலின் முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ஒழுங்கமைப்பில், இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தின் புபனேஸ்வர் நகரில் இயங்கும் கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புப் பெறச் செல்பவர்கள் போன்று இவர்களுக்குக் கடவுச்சீட்டுக்கள் எடுக்கப்பட்டு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக இவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Bobby
வரதராஜப் பெருமாளுடன் பரந்தாமன்

 

தற்பொழுது மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ள இந்திய படையப் புலனாய்வுத்துறைப் பயிற்சிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு, டெஹ்ரா டன் படைத்துறைப் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த சார்ஜன்ற் மேஜர் ஒருவரின் தலைமையிலான இந்திய தரைப்படையின் நகர்ப்புற யுத்த அணி பயிற்சிகளை வழங்கி வருவதாக சவுத் புளொக் பிரிவுடன் தொடர்பைப் பேணும் முன்னணி வட இந்தியப் பெண் ஊடகவியலாளர் சங்கதி-24 இணையத்திற்கு அறியத் தந்துள்ளார்.

இதற்கு முன்னோடியாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலிப்பதற்கான பரப்புரைகளை முன்னெடுத்து எதிர்வரும் மாவீரர் நாளில் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை புலம்பெயர் நாடுகளில் நடாத்துமாறு சுவிற்சர்லாந்தில் வசிக்கும் விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சு.ரவி அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

மாத்தையா விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட மாத்தையாவின் நண்பரான சு.ரவி அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகாத நிலையில் அவர் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

யுத்தம் நிறைவடைந்ததும் சிங்களப் படைகளிடம் சரணடைந்த சு.ரவி அவர்கள், கே.பி என்றழைக்கப்படும் தம்பியையா செல்வராஜா பத்மநாதன் அவர்களின் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டு கே.பியின் நேர்டோ அமைப்பின் இணைப்பாளராகக் கிளிநொச்சியில் பணிபுரிந்தவர்.

பின்னர் சுவிற்சர்லாந்திற்கு வந்து அங்கு அகதித் தஞ்சம் பெற்ற சு.ரவி, அங்கு போராளிகள் கட்டமைப்பு என்ற காகிதப்புலிகள் அமைப்பை உருவாக்கி, அதனை இயக்கி வருகின்றார். இக் காகிதப்புலிகள் அமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ராதா வான்காப்புப் பிரிவில் பணிபுரிந்து, பின்னர் சிங்களப் படைகளிடம் சரணடைந்து போராளிகள், தளபதிகளைக் காட்டிக் கொடுத்த இளங்குட்டுவன் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

Ilankuttuvan
இளங்குட்டுவன்

 

இவர்கள் இருவரையும், பிரான்சில் வசித்து வரும் இந்தியப் படைகளின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும், அக்காலப் பகுதியில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் படையப் புலனாய்வுத்துறையில் பணிபுரிந்த கேணல் தர அதிகாரி (தற்பொழுது போரியல் விவகாரப் பத்தி எழுத்தாளராகப் பணிபுரிபவர்) ஒருவரும் அண்மையில் சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்தே உயிருடன் வாழும் தமிழீழத் தேசியத் தலைவருக்கு விளக்கு வைக்க வேண்டும் என்று சு.ரவி மற்றும் இளங்குட்டுவன் ஆகியோர் தீவிரமான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழீழ தேசியத் தலைவரின் உயிருடன் இல்லை என்ற நச்சுக் கருத்தை உலகத் தமிழர்களிடையே ஆழமாக வேரூன்ற வைத்து விட்டால், அதன் பின்னர் றோ நிறுவனத்தால் உருவாக்கப்படும் மாத்தையாவின் விசுவாசிகளின் பின்னணியைக் கொண்ட போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தமிழீழ தாயகத்தில் களமிறக்குவது இலகுவானது என்று குறித்த ஓய்வு பெற்ற கேணல் தர இந்தியப் படையப் புலனாய்வுத்துறை அதிகாரி சு.ரவி மற்றும் இளங்குட்டுவன் ஆகியோரிடம் கூறியதாக, இவர்களின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட பிரான்சில் வசித்து வரும் நபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.