தென்ஆப்பிரிக்காவில் வெள்ளைக்காரர்கள் நிலங்களை பறிக்க அரசு தீவிரம்!

Thursday August 02, 2018

தென்ஆப்பிரிக்காவில் சுதந்திரத்துக்கு பிறகும் நிரந்தரமாக தங்கி இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் உள்ள நிலங்களை பறிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான தென்ஆப்பிரிக்கா இந்தியா போல நீண்டகாலமாக வெள்ளைக்காரர்களின் அடிமை நாடாக இருந்து வந்தது. 1961-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டாலும் வெள்ளைக்காரர்களிடம் தான் ஆட்சி இருந்து வந்தது. 1994-ல் தான் முழு சுதந்திர நாடாக உருவெடுத்தது.

ஆனால் ஆப்பிரிக்க சுதந்திர நாடாக மாறினாலும் அங்கு வசித்த வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை. நிரந்தர குடிமக்களாக அங்கேயே உள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவின் மொத்த மக்கள் தொகை 5 கோடிய 15 லட்சம். அதில் 8 சதவீதம் பேர் வெள்ளைக்காரர்களாக உள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் பெரும்பாலான சொத்துக்கள் அவர்களிடம் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக  வளம்கொழிக்கும் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் தான் உள்ளது.

அதே நேரத்தில் நாட்டின் பூர்வீக குடிமக்களான கருப்பர்கள் பலரிடம் நிலம் எதுவும் இல்லை. எனவே வெள்ளைக்காரர்களிடம் இருந்து நிலத்தை பறித்து கருப்பர்களுக்கு வழங்குவதற்கு ஏற்கனவே அரசு முயற்சிகள் மேற்கொண்டது.

இவ்வாறு 30 சதவீத சொத்துக்களை பறிப்பது என்று திட்டமிட்டு இருந்தது. ஆனால் இதுவரை 10 சதவீத சொத்துக்கள் கூட கைப்பற்றப்படவில்லை.எனவே வெள்ளைக்காரர்களிடம் இருக்கும் பெரும்பாலான சொத்துக்களை பறிக்க அரசு இப்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்காக இப்போது புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக அதிபர் ராமபோசா தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தின்படி எந்த இழப்பீடும் கொடுக்கப்படாமல் வெள்ளைக்காரர்களிடம் இருந்து சொத்துக்கள் பறிக்கப்படும். அவை நிலம் இல்லாத கருப்பர்களுக்கு அவர்களுடைய தகுதிகளின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும்.

ஆப்பிரிக்க அரசின் இந்த முயற்சியால் வெள்ளைக்காரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அண்டை நாடான ஜிம்பாப்வே நாட்டில் இதேபோல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெள்ளைக்காரர்களின் பெரும்பாலான சொத்துக்கள் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.