தென்னிலங்கையில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அபாயம்

திங்கள் மே 21, 2018

சிறிலங்காவின் தென்பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மேலும் தொடர்ந்தால் இயற்கை அனர்த்தம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 12 மணிநேர காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தரை மாவட்டத்திலும் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

காற்றின் வேகம் உடனடியாக அதிரிக்கக்கூடும் என்பதனால், கடல் பிரதேசத்தில் உடனடி கொந்தளிப்பு இடம்பெறும். 

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும். இந்தப் பிரதேச கடல் கொந்தளிப்பாக காணப்படும். 

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென்று திணைக்களம் கேட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதனால் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. 

இதனால் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றது. 

இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.