தென் சீனக்கடல் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்!

Sunday November 12, 2017

சீனா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் முக்கிய பிரச்சனையாக இருந்து வரும் தென் சீனக்கடல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

தென் சீனக்கடல் பகுதி வழியாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான வர்த்தக போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா, அங்கு செயற்கை தீவுக்கூட்டங்களை உருவாக்கி ராணுவ நிலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கடல் எல்லையில் அமைந்துள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் தென் சீனக்கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடுகின்றன. 

பல ஆண்டுகளாக சர்ச்சையாக தொடர்ந்து வரும் இந்த விவகாரத்தை, திஹேக்கில் உள்ள சர்வதேச நடுவர் மன்றத்துக்கு பிலிப்பைன்ஸ் எடுத்து சென்றது.

இந்த விவகாரத்தை விசாரித்த நடுவர் மன்றம், தென் சீனக்கடல் பகுதியில் சீனாவுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு அளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை நிராகரித்த சீனா, தொடர்ந்து அந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் இந்த தீர்ப்பை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், வியட்நாம் நாட்டின் தநாங் நகரில் நடைபெற்ற ஆசிய பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், அந்நாட்டின் அதிபர் டிரான் தாய் குவாங்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘தென் சீனக்கடல் விவகாரத்தில் எனக்கு தெரிந்த வரை மத்தியஸ்தம் செய்து உதவ தயாராக உள்ளேன்’ என கூறினார்.