தென் சீன கடற்பரப்பில் அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பல்

புதன் அக்டோபர் 28, 2015

சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பரப்பில் அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பலை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  தென் சீனக் கடல் பகுதியில் உள்ள சுபி தீவுக்கு சீனா, பிலிப்பின்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. 

 

இந்த நிலையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். லாஸன் போர்க் கப்பல், தென் சீனக் கடலில் ரோந்துப் பணி மேற்கொண்டபோது சுபி தீவுக்கு 22 கி.மீ. தொலைவு வரை வந்து சென்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

இது சீனாவை கொதிப்படைய வைத்துள்ளது. இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் எந்தவொரு நாட்டுக்கும் சீனா உறுதியுடன் பதிலடி கொடுக்கும்.  தென் சீனக்கடல் பகுதியையும், வான்வெளியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.