தொடர்ந்து எழுதுவேன்! - எழுத்தாளர் பிரபஞ்சன்

Thursday September 20, 2018

தொடர்ந்து எழுதுவேன். எனது வாழ்வை நூலாக எழுதி வருகிறேன் ஜனவரிக்குள் வெளியிடுவேன் என்று சிபிஎம் நிர்வாகிகளிடம் எழுத்தாளர் பிரபஞ்சன் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அருகேயுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன், புதுச்சேரி பிரதேச செயலர் ராஜாங்கம் உள்ளிட்டோர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களிடம் உற்சாகமாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து எழுதுமாறு குறிப்பிட்டனர்.அதற்கு எழுத்தாளர் பிரபஞ்சன். "தொடர்ந்து எழுதுவேன். எனது வாழ்வை நூலாக எழுதி வருகிறேன். வரும் ஜனவரிக்குள் வெளியிடுவேன். சமூகத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். மனிதர்கள் என்னைப் பாதுகாக்கிறார்கள். நிறைவாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டதாக சிபிஎம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சந்திப்பு தொடர்பாக சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கம் கூறுகையில், "படைப்புகளால் தமிழ் சமூகத்தின் மனதில் இடம்பிடித்த எழுத்தாளர் பிரபஞ்சனை அனைவரும் சந்தித்தோம். ஒரு மணி நேரம் வரை உரையாடினோம். உடல் நலக்குறைவால் இந்து தமிழில் எழுதிய தொடருக்கு இடைவெளி விட்டுள்ளேன். மீண்டும் விரைவில் எழுதத் தொடங்குவேன் என்பது வரை இயல்பாக உரையாடினார்" என்று தெரிவித்தார்.