தொடர் மழை மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 9 பேர் பலி

ஞாயிறு ஜூலை 31, 2016

மும்பை அருகே உள்ள பிவாண்டியில் சாந்தி நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட கைபி நகரில் 2 மாடி குடியிருப்பு இன்று திடீரென இடிந்து விழுந்தது.

தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 27 பேரை மீட்டனர். ஆனால், 9 பேர் உடல் நசுங்கியும், மூச்சுத் திணறியும் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை  இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும், நேபாளத்திலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் ; பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை காரணமாக நீர்ப்பெருக்கு உயர்ந்த காரணத்தால் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பல கிராமங்களையும், வயல்வெளிகளையும் மூழ்கடித்து, லட்சக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயரச் செய்தது

அஸ்ஸாம் மற்றும் பீஹார் ஆகிய இந்திய மாநிலங்களில் மீட்புப் பணிக்குழுவினர், மக்களைச் சென்றடைய படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நெடுஞ்சாலைகளிலும், மேட்டுப்பாங்கான பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.