தேசியத் தலைவரின் முதல் குண்டு முழங்கிய பொன்னாலையை அபிவிருத்தி செய்யவேண்டும், விந்தன் உரை

யூலை 16, 2017

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னாலைக்கு சிறப்பிடம் உண்டு. தேசியத் தலைவரின் முதலாவது துப்பாக்கி வேட்டு முழங்கிய இடம் இது. இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன் இந்த இடத்தையும் அபிவிருத்தி செய்யவேண்டும் 

இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ந. விந்தன் கனகரத்தினம்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

வித்தியாசாலை அதிபர் தி.மோகனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

மாணவர்களின் கல்விக்கு எது தடையாக இருக்கின்றதோ அதைக் களைய வேண்டும். அப்போதுதான் மாணவர்களால் சிறப்பாகக் கல்வி கற்க முடியும். வறுமையைக் காரணம் காட்டி எந்தவொரு மாணவனும் கல்வியில் இருந்து இடைவிலக முடியாது. 

பாடசாலைகளில் ஒரே வகுப்பில் வசதியானவர்களின் பிள்ளைகளும் கல்வி கற்கும் அதேவேளை வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களின் பிள்ளைகளும் கல்வி கற்கின்றனர். வசதியான பிள்ளையைப் பார்த்து அவனைப் போன்ற வசதி வாய்ப்புக்கள் எனக்கு கிடைக்கவில்லையே என வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவன் ஏங்கக் கூடாது. 

இவ்வாறு ஏங்குகின்ற மாணவர்களின் ஏக்கத்தைப் போக்க அரசியல்வாதிகள் முன்வரவேண்டும். இவ்வாறான மாணவர்களை நோக்கியதாகவே எனது சேவைகள் அமைந்திருக்கின்றன. அரசு இலவச சீருடைகளை வழங்கினாலும் அவர்களின் இதர தேவைகளை நாம் பூர்த்திசெய்யவேண்டும்.
 
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையைப் பொறுத்தவரை தரம் 9 வரையுள்ள இந்தப் பாடசாலையை க.பொ.த சாதாரண தரம் வரை தரமுயர்த்த பாடசாலைச் சமூகம் ஆர்வமாக உள்ளது. அப்படி தரமுயர்த்தினால் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்கள் கல்வியில் இடைவிலகல் இல்லாமல் சாதாரண தரக் கல்வியைப் பெற முடியும் என அவர்கள் நம்புகின்றனர். 

அவர்களின் நம்பிக்கை வீண்போகக்கூடாது. இந்தப் பாடசாலையை தரமுயர்த்துவதற்கு உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளேன். இந்தப் பிரதேச மாணவர்களை எதிர்காலத்தில் நல்லவர்களாக மாற்றும் பொறுப்பில் நானும் இணைந்துகொள்கின்றேன். – என்றார். 

மேலும், பொன்னாலை என்ற இடம் ஒரு காலத்தில் சர்வதேச ரீதியாகப் பேசப்பட்டது. இந்த இடம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவேண்டும் என நாம் ஆர்வமாக இருந்தோம். இதேபோல எமது புலம்பெயர் நண்பர்களும் ஆர்வமாகக் கேட்பார்கள். 

பின்னர் நேரில் வந்து பார்த்துப் பெருமையடைந்தோம். அத்தகைய பெருமைமிகு இந்த இடத்திலுள்ள மக்கள் தற்போது மீளக்குடியேறியுள்ளனர். இந்த இடத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். – எனவும் கூறினார். 

இந்த நிகழ்வில், சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நோபேட்; உதயகுமார், வடமாகாணக் கல்வித் திணைக்கள சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் (நடனம்) திருமதி ஸ்ரீதேவி கண்ணதாசன் ஆகியோரும் உரையாற்றினர். மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

இணைப்பு: 
செய்திகள்