தே.மு.தி.க.வில் விஜயகாந்த் மகனுக்கு முக்கிய பொறுப்பு!

Saturday October 06, 2018

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய்பிரபாகரன் வலைப்பந்து  அணி ஒன்றை நிர்வகித்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் நாய்களையும் வளர்த்து வருகிறார்.
 
தி.மு.க.வில் மு.கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதைபோல விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை முன்னிலைப்படுத்த உள்ளார்.

இன்று அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் தே.மு.தி.க கட்சியின் 14-வது ஆண்டு விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய்பிரபாகரன் கலந்துகொள்ள உள்ளார். அவருக்கு இது முதல் மேடை என்பதால் எப்படி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-

‘விஜய் பிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என விஜயகாந்த் விரும்புகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த விருப்பம் உள்ளது. மகனுக்கு உடனடியாக பதவி கொடுத்து விட்டால் சர்ச்சையாகும் என்பதால் படிப்படியாக அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.

விஜயகாந்துக்கு உருவான செல்வாக்கு அதன் பின்னர் அவரது கட்சியில் இருக்கும் யாருக்கும் உருவாகவில்லை. மகனை களம் இறக்கும்போது மக்களிடம் இழந்த செல்வாக்கையும் இளைஞர்கள் நம்பிக்கையையும் பெற முடியும் என்று நம்புகிறார். தனக்கு பின் கட்சியின் அதிகாரம் முழுவதையும் மகனுக்கு மாற்ற விரும்புகிறார்.

விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்னர் உட்கட்சி பிரச்சனையை ஆராயும் குழு என்ற குழுவைஅமைத்து அதன் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை நியமித்தார். இந்த குழுவுக்கு வரும் புகார்கள் அனைத்தும் விஜய் பிரபாகரன் கவனத்துக்கும் செல்கிறது.

அந்த புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு உண்மை இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி மெல்ல மெல்ல மகனை கட்சியின் முக்கிய இடத்திற்கு கொண்டு வருகிறார்’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விஜய் பிரபாகரன் கட்சிக்கு வந்தால் அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படலாம்? என்று கேட்டபோது:-

கட்சியில் வெகுகாலமாக இளைஞரணி செயலாளர் பொறுப்பை தலைவர் காலியாகவே வைத்துள்ளார். யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த பொறுப்பில் விஜய் பிரபாகரன் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறினர்.