தேர்தலில் தினகரன் காணாமல் போய் விடுவார்!

ஞாயிறு செப்டம்பர் 23, 2018

டிடிவி தினகரன் வரும் தேர்தலோடு இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
 
எம்.ஜி.ஆர் தி.மு.க.வின் ஊழல்களை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அ.தி.மு.க.வை தொடங்கினார். அவர் வழியில் வந்த ஜெயலலிதா தி.மு.க.வை தனது அரசியல் எதிரியாகவே கருதினார்.

அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை மக்களிடம் நேரடியாக சென்றடைந்த வண்ணம் இருந்தன. அம்மாவின் ஆட்சியின் நலத்திட்டங்கள் இப்போது தொடர்நது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அசைக்க முடியாத சக்தியாக அம்மா வழங்கிய ஆட்சி நம்மிடம் உள்ளது. இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம். அசைத்து விடலாம் என்று பலர் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

அம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன். இன்று கழகத்திற்கு சொந்தம் கொண்டாடி 40 தொகுதிகளையும் கைப்பற்றுவேன் என்று மக்கள் கைதட்டி சிரிப்பாய் சிரிக்கின்ற அளவுக்கு பேசி வருகிறார். அவர் வரும் தேர்தலோடு இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் ஒரு பொய் குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பார்க்கிறார். அவரது புளுகு மூட்டைகளை மக்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை.

அவருக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், திருவாரூர் இடைத்தேர்தலிலும் நேருக்கு நேர் நின்று சந்திக்கட்டும். அவரை எதிர்கொள்ள கழகம் தயாராக இருக்கிறது. அதற்கு ஸ்டாலின் தயார் தானா? என்று கேட்க விரும்புகிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை யாராலும் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக, பேரியக்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த சக்தியாலும் அம்மாவின் ஆட்சியை அசைத்துக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.