தொடரும் கறுப்பு யூலைகள்! - கந்தரதன்

வெள்ளி ஜூலை 31, 2015

தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களை குறைக்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர் நடவடிக்கைகளாக இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளன. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பது போல, சிறிலங்கா அரசும் அதன் அடிவருடிகளும் தமிழ் மக்களையும் தமிழ் உணர்வுகளையும் சிதைப்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றனர். வெளியுலகிற்கு பாசாங்கு காட்டுவதற்காக தமிழ் மக்களிற்கு நல்லது செய்வதுபோல காட்டிக்கொண்டாலும், தமிழ் மக்களை ஓரங்கட்டுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தவறவில்லை.

 

தமிழர் தாயகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு கலாச்சாரத்தை சீரழித்து, அதனுVடாகவே தமிழ் மக்களை வேரறுப்பதற்கு சிங்களம் திட்டமிட்டுள்ளது. யாழில் இன்று 15 வயது மாணவர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் கொழும்புக்குச்சென்று தனியாக வாழச் செல்லுமளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது.

 

தாராள இணையப் பாவனை, தவறான நடத்தையுடையோருடனான தொடர்புகள், போதைப் பாவனை என எல்லாம் தேசிய சிந்தனையை மழுங்கடிக்கும் வாழ்க்கை. போதாக்குறைக்கு குழு வன்முறைகள் ஒருபுறம். அங்கே வாள்வெட்டு இங்கே சூறையாடல், கடத்தல்கள் என்று வகைதொகையின்றி நடக்கின்றது. இவற்றைத் தடுக்கின்றோம் அவற்றை நிறுத்துகின்றோம் என்று கடமை தவறாத காவல்துறைகள் ஒருபுறம். தமது நிலைகளையும் விஸ்தீரிக்கத் தவறவில்லை.

 

அனால், அரசில் அங்கம் வகிக்கும் விஜயகலா மகேஸ்வரன் வடக்கிலிருந்து பொலிஸாரை அடித்து விரட்டப்படவேண்டும் என்று சாடியுள்ளமை அங்குள்ள நிலைமைகளை புரியக்கூடியதாக உள்ளது. சட்டத்தினை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினர் சட்டத்தினை மதிப்பதே இல்லை. கசிப்பு உற்பத்தியிலும், போதைப் பொருள் உற்பத்தியிலுமே அவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்று முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றுவரைக்கும் காவல்துறை நிர்வாகம் சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படவில்லை. அது சட்ட திட்டங்களை மீறியே செயற்படுகின்றது. ஆனால் பொது மக்களும் நாங்களும் சட்டத்தினை கடைப்பிடிக்கின்றோம். ஆனால் இன்றுவரை காவல்துறை நிர்வாகம் சட்டத்தினை கடைப்பிடிக்கவில்லை. வடக்கில் உள்ள பெரும்பாலான காவல்துறை நிலையங்கள் தமிழ் மக்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டு அவர்களுடைய காவல் நிலையத்தினை அமைத்துள்ளார்கள்.

 

சட்டத்தை மதிக்கத் தெரியாத இந்த காவல்துறை அதிகாரிகள் கடந்த காலங்களில் காவல் நிலையங்களில் வைத்தே கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள். அத்துடன் தமிழ் பெண்களுடன் சேட்டைகளிலும் ஈடுபட்டு வந்தார்கள். அநாகரிகமான முறையில் நடத்து கொண்டார்கள். பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்பவர்களும் காவல்துறையினராகவே இருந்துள்ளார்கள். இந்த காவல்துறையினரும், இராணுவமும் முற்றுமுழுதாக வடபுலத்தில் உள்ள தமிழ் மக்களைத் திட்டமிட்டு போதைப் பொருள் பாவனைக்குள் ஈர்த்துள்ளார்கள். இதை இன்றுவரைக்கும் அவர்கள் கடைப்பிடித்து வருகின்றார்களெனவும் விஜகலா குற்றஞ்சாட்டியுள்ளார். இவர் காவல்துறையினரை நன்கு புரிந்துவைத்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

 

இந்நிலையில், தமிழர் தாயகத்தில் காணாமற்போதல்கள் மற்றும் படுகொலைகளும் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளன. யாழ். மல்லாகத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவராம் (வயது 34) என்ற இளம் குடும்பஸ்தர் காணாமல்போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மல்லாகத்தில் தொலைத்தொடர்பு நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் கடந்த வாரம் கடையில் வேலை செய்து கொணடு இருந்தபோது அவரது கைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதற்குப் பதிலளித்தவாறு தனது உந்துருளியில் குறித்த நபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் அவரின் தொலைபேசிக்கு அழைப்பபை ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை, அச்சுவேலி இடைக்காடு பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக யுவதியின் பெற்றோர், கடந்தவாரம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த குலசிங்கம் பிரிதா (வயது 27) என்ற யுவதியே காணாமல் போயுள்ளார். இந்நிலையில் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து சுமார் 7 மீற்றர் தூரத்திலுள்ள சிறு பற்றைக்குள் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்து வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளநிலையில், மன்னார், மடு காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் கிராமத்தில் நீரோடை ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் கடந்தவாரம் மீட்கப்பட்டுள்ளது.

 

இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்ற சின்னரெட்டியர் சிவபாதம்  (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது மர்மமாக உள்ளது. இவ்வாறு தமிழர் தாயகத்தில் தமிழ்மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் கறுப்பு யூலைகளாய் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

 

வரும் கறுப்பு யூலை 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, எமது மக்கள் மீது  சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்டுவரும் மீறல்களை சர்வதேசத்தின் கண்முன் நிறுத்துவோம்  வாரீர்!

 

இவ்விடயங்கள் தொடர்பில் புலம்பெயர் மற்றும் தாயக மக்கள் விழிப்புடன் சிந்தித்து செயற்படவேண்டிய தருணம் இது.

 

(சூறையாடல்கள் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு