தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் பூர்த்தி!

புதன் மார்ச் 14, 2018

யாழ்ப்பாணம் தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும். அதன் மூலம் வடமாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்படுவதுடன் நன்நீர் வளத்தை பெருக்க முடியும் என வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.பிறேம்குமார் தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அணைக்கட்டு மற்றும் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ், உலக வங்கியின் 400 மில்லியன் ரூபாய் நிதியுதவியில், தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை திருத்தியமைக்கப்பட்டு வருகின்றது.

1960ஆம்; ஆண்டுகளில் கட்டப்பட்ட தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை யுத்தம் காரணமாக முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்நிலையில் நன்நீருடன் உவர் நீர் கலக்கும் அபாய நிலை காணப்பட்டது. தற்போது துருப்பிடிக்காத உலோகங்களால் ஆன கதுவுகள் இடப்பட்ட அணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயத்துக்கு தேவையான பெருமளவிலான நீர் வளத்தை பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண நீர்ப்பாசன உதவிப் பணிப்பாளர் என்.சுதாகரன், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.