நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

Tuesday October 09, 2018

சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுதலை செய்வதாக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை காவல் துறை அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
 
பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை காவல் துறை  நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி கவர்னர் மாளிகை சார்பில், செயலாளர் ராஜகோபால் சென்னை காவல் துறை  அதிாகாி ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஜாம்பஜார்காவல் துறை  நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தனர்.

நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124 (அரசு உயர் பதவியில் இருப்பவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் எழுதி கருத்துக்களை பரப்புதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய மாடியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. வெளி ஆட்கள் யாரையும் காவல் துறை  உள்ளே அனுமதிக்கவில்லை. நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் மதியம் நக்கீரன் கோபாலை பார்ப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வந்திருந்தனர். அவர்களில் சிவக்குமார் என்ற வக்கீல் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் வெளியில் நின்றிருந்தனர்.

நக்கீரன் கோபாலை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தினர். இதற்காக 12.45 மணி அளவில் சிந்தாதிரிபேட்டை காவல் துறை நிலையத்தில் இருந்து அவர் அழைத்து செல்லப்பட்டார்.

நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊடக பிரதிநிதியாக நீதிமன்றத்தில் ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டால் தவறான முன் உதாரணம் ஆகிவிடும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப இயலாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும், 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் கோபால், தனக்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்த போரில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்து என்.ராம் அவர்களுக்கும், தனக்காக கைதாகி உள்ள வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் இருந்ததால் தான் தான் விடுதலை ஆனதாகவும் நக்கீரன் கோபால் குறிப்பிட்டுள்ளார்.