நடிகர் ரஜினிக்கு இளம்தலைமுறையினரின் ஆதரவு எத்தனை சதவீதம் கிட்டும்!

Tuesday March 06, 2018

நடிகர் ரஜினிக்கு இளம்தலைமுறையினரின் ஆதரவு எத்தனை சதவீதம் கிட்டும் என்று உறுதியாக சொல்ல முடியாது என திருமாவளவன் கூறினார்.

எம்.ஜி.ஆரை போன்று நல்லாட்சியை தருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-

நடிகர் ரஜினியின் ரசிகர்களை பொறுத்த வரையில் ‘என் வழி, தனி வழி’ என்கிற ரஜினியின் வசனத்தை பெரிதும் ரசிக்கிறார்கள், நம்புகிறார்கள். ஆனால் நேற்று ரஜினி பேசும் போது, என் வழி எம்.ஜி.ஆர். வழி என்று கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். வழியில் நல்லாட்சி அமைப்பேன் என்று அவர் கூறியிருப்பதை பொது மக்கள் எந்த அளவிற்கு அங்கீகரிக்கிறார்கள் என்பதைவிட ரஜினியின் ரசிகர்கள் அதை ஏற்று கொள்வார்களா என்று தெரியவில்லை.

ஒரு புதிய பார்வை, புதிய பாதை, ஒரு புதிய தலைமை என்பதே இன்றைய இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளாக உள்ளன. எம்.ஜி.ஆரையும், எம்.ஜி.ஆர். ஆட்சியையும் பார்க்காத இளம் தலைமுறையினரும் இப்போது வாக்காளர்களாக உள்ளனர். அவர்களை எந்த அளவிற்கு ரஜினியின் இன்றைய வசனம் ஈர்க்கும் என்று தெரியவில்லை.

‘‘நான் எது மாதிரியாகவும் இல்லாமல் புது மாதிரியாக வருகிறேன்’’ என்ற வகையில் ரஜினி அரசியலில் பிரவேசிப்பார் என்றுதான் இன்றைய புது தலைமுறையினர் எதிர்பார்ப்பதாக நான் கருதுகிறேன்.

அ.தி.மு.க.வில் இருந்து புதிதாக உருவாகும் தலைவர்கள் இந்த கோ‌ஷத்தை முன்வைத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே அது வரவேற்பை தரும். ஆனால் பொது மக்கள் இடையே இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை.

ஆனாலும் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லித் தான் மக்களிடையே ஆதரவை திரட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது என்பதை நடிகர் ரஜினியின் பேச்சில் இருந்து உணர முடிகிறது. எம்.ஜி.ஆரை தனது ‘‘ரோல் மாடலாக’’ ரஜினியும் கருதுகிறார் என்று தெரிகிறது.

ஆனால் எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த காலம், அன்றைய வாக்காளர்களின் அரசியல் புரிதல், அன்றைய ஊடகங்களின் வலிமை ஆகியவற்றை இன்றைய சூழலோடு பொறுத்தி பார்த்தால் அனைத்தும் தலைகீழாக மாறி இருப்பதை காண முடியும்.

ஜெயலலிதா மறைவு கலைஞரின் முதுமை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வெறும் சினிமா கவர்ச்சியின் மூலம் நிரப்பி விட முடியும் என்று நான் நம்பவில்லை.

அத்துடன் நடிகர் ரஜினுக்கு போட்டியாக நடிகர் கமல்ஹாசனும் களத்தில் இறங்கி இருக்கிறார். இரண்டு பேருக்குமே சினிமா கவர்ச்சி மட்டுமே மூலதனமாக உள்ளது. இவரால் அவருக்கும் அவரால் இவருக்கும் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே எம்.ஜி.ஆரை. போல மிக இலகுவாக இவர்களால் அரசியலில் வெற்றி பெற்று விட முடியும் என்று நான் நம்பவில்லை.

இந்த 2 நடிகர்களுமே தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை நேர் எதிராக நிறுத்தி அரசியல் செய்யாமல் எம்.ஜி.ஆர் வழி, கலைஞர் வழி என்று பேசினால் இவர்களுக்கு இளம்தலைமுறையினரின் ஆதரவு எத்தனை சதவீதம் கிட்டும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

இவர்கள் முன் வைக்க போகும் அரசியல் கொள்கை செயல் திட்டங்கள் மக்களிடத்தில் எடுபடப் போகிறதா? அல்லது இவர்கள் நம்பும் சினிமா கவர்ச்சி எடுபட போகிறதா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.