நடிப்புக்கு முழுக்கு போடும் கமல்ஹாசன்!

புதன் பெப்ரவரி 14, 2018

 மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்த பிறகு நடிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.

‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் கமலின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த படம் இன்னும் முழுமை பெற வில்லை. இதற்கான படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் குறுக்கிட்டதால் அந்த பட வேலைகள் முடியாமல் இருக்கிறது.

இந்த நிலையில் ‘இந்தியன்-2’ படம் தொடங்க இருப்பதாகவும் ‌ஷங்கர் இதை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே வருகிற 21-ந் திகதி கட்சியின் பெயரை கமல் அறிவிக்கிறார்.

எனவே, ‘இந்தியன்-2’ படமும் அறிவிப்பாகவே இருக்கிறது. இயக்குனர் ‌ஷங்கர் இந்த படத்தை எடுக்க தயாராக இருக்கிறார். ஆனால் கமல் இதுவரை தயாராகவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் கமல்ஹாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தவே கட்சி தொடங்குகிறேன். கிராமங்களுக்கு உதவுவதே எனது எண்ணம். தமிழ்நாட்டை நாளைய தமிழர்களுடையதாக மாற்ற வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய பிரதேசமாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.

ஏற்கனவே நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு அங்கும் இங்குமாக பணி செய்தோம். இனி அரசியலில் ஈடுபடுவதன் மூலம் மையத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்வோம். எனக்கு பிறகும் எனது கட்சி மூலம் இது தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாக கூறுகிறீர்கள். திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு கமல்ஹாசன் அளித்த பதில் வருமாறு:-

தீவிர அரசியலில் இறங்கும் போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். கமல் தீவிர அரசியலில் இறங்குகிறார். எனவே, கமல் ஏற்கனவே நடித்துள்ள 2 படங்கள் திரைக்குவரும். அதன் பிறகு அவர் வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை. இதனால் ‘இந்தியன்-2’ படத்தில் கமல் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.