நன்றாக பருப்பு சமைப்பேன்!

Saturday December 02, 2017

புதுடெல்லியில் நேற்று ஆங்கில பத்திரிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இந்திய உணவு பண்டங்கள் குறித்த கேள்விக்கு ருசிகரமாக பதில் அளித்துள்ளார்.

ஒரு ஆங்கில பத்திரிகை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் டெல்லிக்கு வந்தார். நேற்று அந்நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் கரண் தாப்பருடன் உரையாடினார்.

இந்திய உணவு பண்டங்கள் குறித்த பேச்சு வந்தபோது, ஒபாமா கூறியதாவது:-

டெல்லியில் வியாழக்கிழமை நான் இரவு உணவு சாப்பிட்டபோது, பருப்பும் வைத்திருந்தனர். பருப்பு என்றால் என்ன என்று அவர்கள் விளக்க முற்பட்டபோது, ‘பருப்பை பற்றி எனக்கு தெரியும். எனது கல்லூரி அறை நண்பர்களாக இருந்த ஒரு இந்தியர் மற்றும் பாகிஸ்தானியரின் தாயார்கள் எனக்கு பருப்பு சமைக்க கற்றுத் தந்துள்ளனர்’ என்று நான் பதில் அளித்தேன்.

நான் நன்றாக பருப்பு சமைப்பேன். அதை சமைக்க தெரிந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி நான்தான் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மட்டன் கீமா, சிக்கன் ஆகியவற்றையும் ஓரளவுக்கு சமைப்பேன். இவ்வாறு ஒபாமா கூறினார்.

சப்பாத்தி தயாரிப்பது பற்றி கேட்டபோது, ‘சப்பாத்தியை சரியான பக்குவத்தில் தயாரிக்க வேண்டும். அது கஷ்டம்’ என்று ஒபாமா பதில் அளித்தார்.