நம்பிக்கை நட்சத்திரமாகுமா ஐ.நா. மனித உரிமைகள் பேரவை? - கலாநிதி சேரமான்

Sunday September 24, 2017

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழக்கத் தொடங்கிய நிலையில், தமிழ் மக்களுக்கு ஆசுவாசமளிக்கும் வகையிலும், சிறீலங்கா அரசாங்கத்தை எச்சரிக்கும் விதத்திலும் கடந்த 11.09.2017 அன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அவ் அமைப்பின் உயர் ஆணையாளர் அல் உசேன் அவர்கள் ஆற்றிய உரை அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்குத் தொடர்ந்தும் மைத்திரி - ரணில் அரசாங்கம் பின்னடித்து வருவதானது, இது விடயத்தில் அனைத்துலக தலையீட்டிற்கான நியாயங்களை வலுப்படுத்துகின்றது என்பதே அல் உசேன் அவர்கள் ஆற்றிய உரையின் சாரம்சமாகும்.

இராசரீக முலாம் பூசப்பட்ட இவ் உரை வெளிவந்த நாற்பத்தெட்டு மணிநேரத்திற்குள் காணாமல் போனோருக்கான செயலகத்தை இயங்க வைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை சிங்கள அதிபர் மைத்திரிபால சிறீசேன வெளியிட்டிருப்பதானது, அவ் உரையின் கனதியை உணர்த்துகின்றது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்கள் பற்றிய விசாரணையை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் செயலகம் மேற்கொள்வதற்கான ஆணையைக் கடந்த 2014 பங்குனி மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்கிய பொழுது தமிழ் மக்களிடம் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது: இவ் விசாரணையின் பெறுபேறாகத் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பில் சிங்கள அரசும், அதன் ஆயுதப் படைகளும் ஈடுபட்டமை நிரூபணமாக்கப்பட்டு, அதன் விளைவாகப் பன்னாட்டுக் குற்றவியல் நிதீமன்றத்தில், அல்லது இதுவிடயமாக நீதி விசாரணைகளை மேற்கொள்வதற்கென்று உருவாக்கப்படும் சிறப்பு நடுவர் மன்றத்தில் உரியோருக்குத் தண்டனை வழங்கப்படும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு.

ஆனாலும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க் குற்றங்களும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களும் இழைக்கப்பட்டதை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் செயலகம் உறுதி செய்தாலும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு என்பதை உறுதி செய்வதற்கு அது தயங்கியது. இத்தனைக்கும் சிறீலங்காவின் அதிகார தரப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றம் ஒன்றில் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அவை இனவழிப்பாக உறுதிசெய்யப்படலாம் என்ற கருத்தை அல் உசேன் அவர்கள் கொண்டிருந்த பொழுதும் கூட, தனது அறிக்கையில் இதனை அறுதியிட்டுக் கூறுவதற்கு அவர் தயங்கினார். அது மட்டுமன்றிக் குற்றம் செய்தவனையே அவனது குற்றத்தை விசாரிக்க அனுமதித்த கதையாக, சிறீலங்கா ஆயுதப் படைகள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்வதற்கு இறுதி யுத்தத்தில் அவ் ஆயுதப் படைகளின் பதில் பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய மைத்திரிபால சிறீசேனவின் அரசாங்கத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணை வழங்கியது. அதற்கு அல் உசேன் அவர்களும் அங்கீகாரம் வழங்கினார்.

மறுபுறத்தில் எந்தத் தவறுமே செய்யாத போன்று கபட நாடகமாடிய மைத்திரி - ரணில் அரசாங்கம், தமது ஆயுதப் படைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதியான முறையில் விசாரணை செய்யப் போவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

இவையயல்லாம் நடந்து முடிந்து இம்மாதத்தின் இறுதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவுக்கு வருகின்றன. ஆனாலும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பில் ஈடுபட்ட சிங்கள ஆயுதப் படையினரோ, அன்றி அவர்களை வழிநடத்திய மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஆட்சியாளர்களோ (சிறீசேன உட்பட) இது வரை தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை. அவ்வாறான நடவடிக்கைகள் எவற்றையும் மைத்திரி - ரணில் அரசாங்கமோ, அன்றி சிங்கள நீதித்துறையோ எடுக்கும் என்றும் நாம் நம்பவுமில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அனைத்துலகத் தலையீடு பற்றிய எச்சரிக்கையை கடந்த 11.09.2017 அன்று அல் உசேன் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் இதன் அர்த்தம் வரும் 2019 பங்குனி மாதத்திற்குள் (கடந்த பங்குனி மாதம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகால அவகாசம் நிறைவடையும் பொழுது) உள்ளக விசாரணையை சிங்கள ஆட்சியாளர்கள் புரியத் தவறினால், அவர்களுக்கு எதிரான பன்னாட்டு நீதி விசாரணை தொடங்கப்படும் என்பதல்ல. மாறாக இவ் எச்சரிக்கை மகிந்த ராஜபக்சவிற்கும், அவருக்குத் தற்பொழுது முண்டுகொடுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும், அவரது பக்கம் சாயத் தயாராகும் ஏனைய சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள வாக்காளர்களுக்கும் விடுக்கப்ட்ட ஒன்றாகவே கருதப்பட வேண்டும்.

நீண்ட காலமாக மேற்குலகம் எதிர்பார்த்த திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளைப் பின்பற்றும் மைத்திரி - ரணில் அரசாங்கம் இப்பொழுது ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. முதலில் மகிந்த அணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முகம்கொடுக்க முடியாது வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து மகிந்தருக்கு சார்பாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவைத் தூக்கியயறிவதற்கு மைத்திரி - ரணில் அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. மறுபுறத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகிந்த மீது அதிருப்தியடைந்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை ஆட்சியதிகாரத்தில் அமர்த்திய சிங்கள அரசியல்வாதிகளும், சிங்கள வாக்காளர்களும் இப்பொழுது மகிந்தரின் பக்கம் சாயத் தொடங்கியிருக்கின்றார்கள். இதே நிலை தொடர்ந்தால் 2020 ஆவணி மாதத்திற்கு முன்னரே பிரதமர் பதவியில் இருந்து ரணில் தூக்கியயறியப்பட்டு, அவரது ஆசனத்தில் மகிந்தர் அமர்ந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இதனை மேற்குலகம் நன்றாக ஊகித்துள்ளது என்றே கருத வேண்டியிருக்கின்றது. இதன் வெளிப்பாடுதான் அனைத்துலக தலையீடு பற்றி ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையாகும்.

இடதுசாரிப் பாரம்பரியத்தைக் கொண்டவரும், ஒரு காலத்தில் மகிந்தரின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தவருமான சிறீசேனவின் அரசியல் கொள்கைகளில் மேற்குலகிற்குப் பெரிதாக நம்பிக்கையில்லை. சிறீசேன மீது மேற்குலகம் நம்பிக்கை வைத்துள்ளது என்றால் அதற்குக் காரணம் அவருக்கும், மேற்குலகின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரான சந்திரிகா அம்மையாருக்கும் இடையில் காணப்படும் அரசியல் நெருக்கம் தான். சிறீசேனவை சந்திரிகா அம்மையார் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வரை தான் அவருக்கும், மேற்குலகிற்கும் இடையிலான அரசியல் உறவு தொடரும். ஆனால் ரணிலின் நிலை அப்படியல்ல.

ரணிலுக்கும், மேற்குலகிற்கும் இடையிலான உறவு என்பது ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் காலத்தைச் சேர்ந்த பாரம்பரியத்தைக் கொண்டது. பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள ரணில், தனது மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவைப் போன்று மேற்குலகிற்கு சார்பான திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை ஈழத்தீவில் நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அப்படிப்பட்ட ரணில் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று மேற்குலகம் விரும்புகின்றது. 2020 ஆம் ஆண்டு அல்லது 2021 ஆம் ஆண்டு மைத்திரியின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் புதிய அதிபராக ரணில் தெரிவு செய்யப்பட்டு, அவர் தற்பொழுது வகிக்கும் பிரதம மந்திரி பதவியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ‘பெரும்பாலும் மங்கள சமரவீர போன்றவர்’ அமர்த்தப்படுவதை மேற்குலகம் விரும்புகின்றது.

ஆனாலும் இவற்றுக்கெல்லாம் சவாலாக அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் மகிந்தருக்கு ஆதரவான அலை காணப்படுகின்றது. எனவே தான் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களை மீண்டும் தூசி தட்டியயடுத்து, இது விடயத்தில் அனைத்துலக தலையீடு பற்றிய எச்சரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் ஊடாக விடுத்ததன் மூலம் மகிந்தருக்கு ஆதரவான அலையைத் தணிய வைக்க முடியும் என்று மேற்குலகம் நம்புகின்றது.

இதற்கெல்லாம் சிங்கள அரசியல்வாதிகளும், வாக்காளர்களும் அஞ்சுவார்களா? அல்லது அல் உசேன் அவர்களின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, மகிந்தரை மீண்டும் ஆட்சிக் கட்டில் அமர்த்துவார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி, சிங்கள தேசத்தின் ஆட்சிபீடத்தில் இருந்து ரணில் தூக்கியயறியப்பட்டு அவரது இடத்தில் மகிந்தரை சிங்கள அரசியல்வாதிகளும், வாக்காளர்களும் அமர்த்துவார்களாயின், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மீண்டும் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகும்.

இதனைக் கட்டியம் கூறும் சிறு ஒளிக்கீற்றாகவே கடந்த 11.09.2017 அன்று ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் ஆற்றிய உரை திகழ்கிறது.

- கலாநிதி சேரமான்

நன்றி: ஈழமுரசு