நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தமிழரசுக்கட்சி தடை!

Wednesday September 19, 2018

தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்படும் தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் நடவடிக்கையில் சிங்கள இனவாத அரசும் அதன் கைக்கூலிகளான தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஒட்டுக்குழுக்களும் கங்கணம்கட்டி நிற்கின்றன.

நல்லூரிலுள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்ற ஆரம்பநாள் நிகழ்வை தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் அது தான் கட்டிய தூபி எனக் கூறி குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக நல்லூரிலுள்ள தியாக தீபத்தின் நினைவிடம் யாழ் மாநகரசபைக்குச் சொந்தமான நிலத்தில் உள்ளதால் அங்கு எவரும் நினைவேந்தல் செய்ய முடியது என தமிழரசுக்கட்சி உறுப்பினரும் தமிழின விரோதி சுமந்திரனின் அடிப்பொடியுமான யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தியாக தீபம் தீலிபனின் நினைவுத்தூபி, யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ளதால் நினைவுநிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும். அதை தவிர்த்து வேறு யாரும் அந்த இடத்தில் அஞ்சலி நிகழ்வை செய்ய அனுமதிக்க முடியாதென அவர் அறிக்கை விடுத்துள்ளார்.

“தியாக தீபம் தியாகி திலீபன் அவர்களின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ் மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறும்; அனைவரையும் ஒற்றுமையாக இறுதிநாள் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு யாழ் மாநகரசபை சார்பில் நான் அழைப்புவிடுக்கின்றேன்.

இந்நிகழ்விற்கு மேலதிகமாக குறித்த நினைவிடத்தைச் சூழ வேறும் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது; என்பதையும் கவனத்திற்கொள்ளுமாறும், அனைத்துத் தரப்பினரையும் முன்கூட்டியே கேட்டுக்கொள்கின்றேன்” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.