நளினி சிதம்பரத்துக்கு எதிராக பலவந்த நடவடிக்கை கூடாது!

வெள்ளி ஓகஸ்ட் 03, 2018

சாரதா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது பலவந்தமான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த இந்த சிட்பண்ட் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில் பெண்களை அவர்கள் இருப்பிடம் அன்றி வேறு இடத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது கட்சிக்காரருக்காக வாதாடியதற்கு சம்பளம் பெற்றதற்காக வக்கீல்களை விசாரிக்க முடியாது என்றும் அதனை துவக்கத்திலேயே கிள்ளி எரிய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெண்களை வேறு பகுதிக்கு விசாரணைக்காக அழைக்க கூடாது என்பது அனைவருக்கும் பொருந்தாது என்றும், சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த அசோக் புசான், ஏ.கே.ஷிக்ரி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில் நளினி சிதம்பரத்துக்கு எதிராக பலவந்த நடவடிக்கைகள் எடுக்க கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், நளினி சிதம்பரத்தின் இந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.