நள்ளிரவில் பேரணி சென்ற விவசாயிகள்!

Monday March 12, 2018

மகாராஷ்டிராவில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி விவசாயிகள் நாசிக்கில் இருந்து 5 நாட்கள் கால்நடை பயணமாக நேற்றிரவு மும்பையை வந்தடைந்தனர்.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிஷான் சபா விவசாய சங்கத்தினர் சுமார் 40 ஆயிரம் விவசாயிகளுடன் கடந்த 5-ம் திகதி நாசிக்கில் பேரணியை தொடங்கினர். மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சட்டசபையை நோக்கி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

180 கி.மீ கடந்து நேற்றிரவு மும்பை நகரை பேரணி வந்ததடைந்தது. இரவு அங்கு தங்கி விட்டு இன்று காலை ஆசாத் மைதானம் நோக்கி பேரணி செல்வது திட்டம். ஆனால், இன்று அம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

காலையில் பேரணி சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், நள்ளிரவிலேயே விவசாயிகள் ஆசாத் மைதானம் நோக்கி நடக்க தொடங்கினர். இன்று காலை அவர்கள் மைதானத்தை வந்தடைந்ததும் அவர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர் வழங்கி உதவினர்.

சுமார் 75 ஆயிரம் விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் இருப்பதாகவும், இன்னும் தொடருந்து ,பேருந்து  மூலம் அதிகமான விவசாயிகள் வந்து கொண்டிருப்பதாக மாநில கிசான் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.