நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் ?

Wednesday November 07, 2018

 நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

 அலரி மாளிகையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து முகநூலில் நேரலையில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவும், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

 மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதிய பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், – நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 சட்டவிரோதமாக, பிரதமரைப் பதவி நீக்கிய ஜனாதிபதி, இப்போது, இன்னொரு சட்ட விரோத நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார். 

 19 ஆவது திருத்தச்சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் கலைக்க முடியாது.   ஆனால், அரசியல்சட்டத்தை மீறி அதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஒன்றரை வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. எனினும், 19 ஆவது திருத்தச்சட்டத்தில் அது மாற்றியமைக்கப்பட்டது.

 அதேவேளை, மகிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவது தொடர்பாகவும், ஜனாதிபதி, சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கோரியுள்ளார் என்றும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.