நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டுகள் சிறை!

வெள்ளி ஜூலை 06, 2018

பனாமா கேட்’ ஊழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் சிக்கினர். இது தொடர்பாக அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், ஜே.ஐ.டி. என்னும் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. 

விசாரணை முடிவில் உச்ச நீதிமன்றம்  நவாஸ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் இந்த ஊழல் வழக்கு விசாரணையை ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. வெளிநாடுகளில் நவாஸ் ஷெரிப் குடும்பத்தினர் சொத்து குவித்தது ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் இந்த தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கிஉள்ள நவாஸ் செரீப் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு முடக்கியது. 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்  பேரில் தேசிய கணக்கீட்டுப் பணியகம் (என்ஏபி) தாக்கல் செய்த  ஊழல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் மந்திரி நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகன் கேப்டன் சப்தர் ஆகியோருக்கு   இன்று நீதிமன்றம் தண்டனையை அறிவித்து உள்ளது. நவாஸ் ஷெரீபுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைவாசம், அவரது மகள் மரியாம்க்கு குறைந்தது ஏழு ஆண்டுகள் மற்றும் சப்தர்க்கு ஒரு வருடம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.